Wednesday, December 15, 2021

குசைமா பின் ஸாபித் (ரழி)பொய் சொன்னார்களா?

குசைமா பின் ஸாபித் என்ற நபி தோழர் பொய் சொன்னார்களா?? 
----------------------------------------------------------------------------------------------------
அதற்கு நபிகள் நாயகம் துணை நின்றார்களா???
பொய் என்றால் என்ன ?உண்மை என்றால் என்ன ?
-------------------------------------------------------------------------------------

1964 ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் மன்பவுல்உலா  மதரஸாவில் ஓதினேன். அங்கு “மன்தீக்” என்று சொல்லப்படும் “லாஜிக்” பாடத்தை மறைந்த கம்பம் அப்துல் கனி ஹஜ்ரத் அவர்களிடம் கற்றேன். அவர்கள் புதியதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்
அவர்களிடம்  “ஹக் என்றால் என்ன?”, “ஸித்க் என்றால் என்ன?” என்று கேட்டேன்.
ஏனென்றால் “ஹக்” என்பதற்கும் “ஸித்க்” என்பதற்கும் “உண்மை” என்றே பொருள் கொள்கிறோம். அதற்கு ஹஜ்ரத் அவர்கள் குர்ஆனுடைய அடிப்படையில் நீண்ட ஒரு விளக்கத்தை தந்தார்கள்.
அதை நான் இங்கே மிக சுருக்கமாக பதிவு செய்கிறேன்.
“ஹக்” என்றால் எது நிலையாக இருக்கின்றதோ, உறுதியாக இருக்கின்றதோ,எது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதோ   அவைகளை ஹக் என்று சொல்வார்கள்.
“குர்ஆன், அல்லாஹ், நபி, மறுமை நாள்,” இவற்றை எல்லாம் குர்ஆன் ஹக் என்று சொல்கிறது. ஏனென்றால் அவை எல்லாம் உறுதியானவை, நிலையானவை.
உண்மை நிலைக்கு ஏற்ப ஒருவர் பேசினால் அதற்கும் “ஹக்கை” பேசினார் என்று சொல்லப்படும்.
“ஸித்க்” என்பது பேசு கின்ற ஒருவர் உளப்பூர்வமாக எதை நம்புகிறாரோ அதை பேசினால் அதற்கு “ஸித்க்” என்று சொல்லப்படும். அவர் சொல்வது உண்மை நிலைக்கு மாற்றமாக இருந்தாலும் சரியே.
“கித்ப்” என்பது ஒருவர்  தன்  உள்ளத்தில் பொய் என நம்பிக்கொண்டு உண்மையான செய்தியை சொன்னாலும் அது பொய்யென்றே சொல்லப்படும். 
இரண்டிற்கும் ஹஜ்ரத் நடைமுறை உதாரணத்தின் மூலம் விளக்கினார்.
“உன்னை தலைமை ஆசிரியர் அழைத்து, அப்துல் கனி ஹஜ்ரத் இருக்கிறாரா? என பார்த்து வா என்று சொல்லி அனுப்புகிறார். நீ என் அறை  வாசலுக்கு வருகிறாய். என் அறை  கதவு மூடி இருக்கிறது. வாசலில் என்னுடைய செருப்பு இருக்கிறது. செருப்பு இருப்பதனால் நான் உள்ளே இருப்பதாக நினைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்று, “கதவு சாத்தி இருக்கிறது. ஹஜ்ரத் உள்ளே இருக்கிறார்கள்.” என்று சொல்கிறாய்.
ஆனால், செருப்பு அறுந்து விட்ட காரணத்தால் அந்த செருப்பை வாசலில் போட்டு விட்டு நான் வேறு செருப்பை அணிந்து கொண்டுவெளியே சென்று விட்டேன்.
இப்பொழுது, நான் உள்ளே இருக்கிறேன் என்று நீ சொன்னது பொய் அல்ல “ஸித்க்” உண்மை. ஏனென்றால் நான் இருக்கிறேன் என்று நம்பியதால் சொல்கிறாய். 
ஆனால், அது “ஹக்” அல்ல. ஏனென்றால் அது உண்மை நிலைக்கு மாற்றமானது.
இதற்கு நேர் மாற்றமாக உண்மையான ஒரு நிகழ்வை ஒருவன் அது பொய் என்று நினைத்து கொண்டு அந்த உண்மையை சொன்னாலும் அது பொய் தான். ஏனென்றால், அவன் உள்ளத்தால் அதை பொய் என்று நம்புகிறான்.
உதாரணாமாக, குர்ஆனில் நயவஞ்சகர்களை பற்றி சொல்லும் பொழுது, 
63:1    إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ ۗ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
63:1. (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: “திண்ணமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்.” திண்ணமாக நீர் அவனுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான்.
இங்கே, நயவஞ்சகர்கள் நீங்கள் அல்லாஹ்வுடைய ரஸூல் என்று “ஹக்” ஆன உண்மையான செய்தியை தான் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் உள்ளத்தில் அதை பொய்யென நினைப்பதால் அல்லாஹ் அவர்களை பொய்யர்கள் என்று சொல்கிறான்.
    அதே நேரத்தில் மறைவானவற்றை நம்புகிற ,கண்ணால் பார்க்காத அல்லாஹ்வையும் ,மலக்குகளையும் ,சொர்க்க நரகத்தையும், நபிமார்களையும் நம்புகிற விசுவாசிகளை  அல்லாஹ் ஸாதிக்கீன்கள் உண்மையாளர்கள் என்கிறான். ஏனென்றால் அவர்களின் உள்ளம் எதை நம்புகிறதோ  அதனை உரக்க சொல்கிறார்கள் எனவே அவர்கள் உண்மையாளர்கள்.
 ஆனால் முனாஃபிக்குகள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன் நின்று அவர்களின் உள்ளம்  நம்பாத உண்மையை பொய் என எண்ணி  உரக்க சொல்கிறார்கள்,எனவே அவர்கள் பொய்யர்கள் “
 இந்த விளக்கத்தின்  அடிப்படையில் ஸஹாபி நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்  உண்மை மட்டுமே பேசுவார்கள் என்ற நம்பிக்கையில்  சாட்சி சொல்ல முன் வருகிறார் இது எப்படி பொய் ஆகும் அவர் வியாபாரம் நடக்கும் பொழுது நான் பார்த்தேன் என்று சொல்லவில்லையே, அப்படி சொல்லியிருந்தால் அதை பொய் என்று சொல்லலாம்.
   இருவர் காஜியிடம் தாங்கள் பெருநாள் பிறையை பார்த்தாக சொல்கிறார்கள் ,ஆனால் அவர்கள் முஸ்லிமா,?உண்மை பேசுபவர்களா? என காஜிக்கு தெரியாது ,இந்த நேரத்தில் காஜிக்கு நன்கு அறிமுகமான இருவர் இந்த இருவரைப்பற்றி எங்களுக்கு தெரியும்,இவர்கள் உண்மையாளர்கள் என சாட்சி  சொன்னால் இவர்கள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் அவர்களின் பிறை தெரிந்தது என்ற சாட்சியத்தை  காஜி ஏற்றுக்கொள்ளலாம் என மார்க்க சட்டம் சொல்கிறது.

Thursday, December 2, 2021

முஸ்லிமாக இருக்கிறோம் ஆனால் மூஃமீனாக இருக்கிறோமா???

முஸ்லிமாக இருக்கிறோம் ஆனால் மூஃமீனாக இருக்கிறோமா???
****************************************
------ அரபி இணைய தளத்திலிருந்து
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
--------------------------------------------------
முஸ்லிமுக்கும் மூஃமினுக்கும் இடையே உள்ள வித்தியாசம் - குர்ஆன் கூறுவது என்ன??
குர்ஆன் கூறுவதை சற்று ஆய்வு செய்யுங்கள்.
குழப்பமான வேளையில் நம் நிலை என்னவென்று புரியும்..

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடையாளமான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள். ஆனால், கல்வியில், பொருளாதாரத்தில், வாழ்வியலில் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்கள். 

இந்த துர்பாக்கியங்களுக்கு என்ன காரணம்??

குர்ஆனில் வருகிறது – 
49:14. “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக.

ஏன் முஸ்லிம்கள் இந்த துர்பாக்கியங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்??

இதற்கான விடையை குர்ஆன் தெளிவு படுத்துகிறது. ஏனென்றால், முஸ்லிம்கள் மூஃமினுடைய நிலைக்கு உயரவில்லை.
பின் வரும் ஆயத்துகள் சிந்தித்து பாருங்கள்.
முஸ்லிம்கள் உண்மையான மூஃமீன்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி அவர்களுக்கு கிடைத்து இருக்கும். 
அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.
30:47.முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.
அவர்கள் மூஃமீனாக இருந்தால் உலக சமுதாயத்திற்கு மத்தியிலே உயர்வான இடத்தை அடைந்திருப்பார்கள்.

அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.

3:139. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.

முஸ்லிம்கள் உண்மையான மூஃமீன்களாக இருந்தால் எந்த எதிரியாலும் அவர்கள் வீழ்த்தப்பட மாட்டார்கள்.

அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.

4:141. மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.

அவர்கள் உண்மையான மூஃமீனாக இருந்திருந்தால் 
3:179. (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; 

முஸ்லிம்கள் உண்மையான மூஃமீன்களாக இருந்தால் எல்லா நிலையிலும் அல்லாஹ் அவர்களுடன் இருந்திருப்பான்.

அல்லாஹ் சொல்வதை கேளுங்கள்.

8:19. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான்.

ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் நிலையிலேயே நின்று விட்டார்கள். மூஃமின் நிலைக்கு உயரவில்லை. 

அல்லாஹ் சொல்கிறான்.

அவர்களில் அதிகமானவர்கள் மூஃமீனாக இல்லை.

மூஃமின் என்றால் யார்??
   
இதற்கான விடையை குர்ஆன் இப்படி சொல்கிறது.

9:112. மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!

சிந்தித்து பாருங்கள்!!

அல்லாஹ்வின் உதவியும், எதிரிகளை மிகைக்கும் ஆற்றலையும், உயர் அந்தஸ்த்தையும் அல்லாஹ், மூஃமீன்களுடன் இணைத்துள்ளான். முஸ்லிம்களுடன் அல்ல.

அல்லாஹ் விரும்புகிற அளவுக்கு நாம் உண்மையான மூஃமீனாக இருக்கிறோமா?????....

உங்களையும் என்னையும் அல்லாஹுத்தஆலா உண்மையான மூஃமினாக வாழ செய்து அந்நிலையிலேயே மரணிக்க செய்வானாக.

Friday, November 5, 2021

நற்குணங்கள்

நற்குணங்கள் நிறைந்த நல்லடியானாக வேண்டுமா?
நான்கு நபிமொழிகளை பின்பற்றுங்கள்.
---------------------------------------------------------------------
அரபு இணைய தளத்திலிருந்து கணியூர் நாஜி

✅الأول : ما رواه الشيخان من حديث أبي هريرة رضي الله عنه أن رسول ﷺ قال : 
« من كان يؤمن بالله واليوم الآخر ؛ فليقل خيراً أو ليصمت »
1.யார் அல்லாஹ்வையும் ,மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசவும் .அல்லது மவுனமாக இருக்கவும்.(புகாரி,முஸ்லிம்)  

✅والثاني : ما أخرجه الترمذي من حديث علي بن الحسين أن النبي ﷺ قال :
« إن من حسن إسلام المرء تركه ما لا يعنيه
2.ஒரு மனிதனின் அழகிய இஸ்லாத்தில் சேர்ந்தது தனக்கு தேவையில்லாததை விட்டு விடுவது (திர்மதி )

✅والثالث : ما رواه البخاري من حديث أبي هريرة رضي الله عنه أن رجلاً قال للنبي ﷺ : أوصني قال :
« لا تغضب »، فردد مراراً قال : « لا تغضب »
3.ஒரு மனிதர் எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் கேட்டார், 
கோபப்படாதே!என்ற நபி அவர்கள் கோபப்படாதே!என பல முறை சொன்னார்கள்.

  
✅والرابع : مارواه الشيخان من حديث أنس رضي الله عنه أن النبي ﷺ قال :
« لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه »
 4,நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ்
 முஸ்லிம் 

✅ففي الأول : ضبط اللسان.
முதல் நபி மொழி :நாவைக்கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்கிறது  

وفي الثاني : ترك الفضول.
இரண்டாவது நபிமொழி :எந்த செயல் செய்வதால் நமது இம்மைக்கோ மறுமைக்கோ பலனில்லையோ அதை செய்யாமல் விட்டு விடுவதைக் கற்றுக்கொடுக்கிறது 

وفي الثالث : ضبط النفس.
3மூன்றாவது நபி மொழி 
மனதைக் கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்கிறது 

وفي الرابع : سلامة القلب تجاه إخوانه المسلمين
4,நான்காவது நபிமொழி :
சகோதர முஸ்லிம்களின் பால் முஸ்லிமின்
உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும்
வழியைக் கற்றுக்கொடுக்கிறது.
--------கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி

Tuesday, October 26, 2021

நபித்தோழர்களின் சிறப்பு


நபித் தோழர்களின் சிறப்பு
*******************
  அய்யாமுல் ஜாஹிலியா எனப்படும் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒழுக்கங்கெட்டவர்களாக வாழ்ந்தவர்கள் என எண்ணுவது அறிவீனம்.

ஒழுக்கக்கேடுகள் பரவலாக அக்காலத்தில் காணப்பட்டாலும் அவைகளைத் தவிர்த்தும் பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.

பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் குழிதோண்டி புதைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த எல்லோரும் அவ்வாறு செய்திருந்தால் மணமுடிக்க பெண்களே இல்லாமல் போயிருப்பார்கள்.

அக்காலத்தில் வாழ்ந்த பல்லாயிரம் பேர்களில் நூற்றுக்கணக்கான பேர் நபியவர்களின் அழைப்பை ஏற்று உடனடியாக நபியவர்களின் நுபுத்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள்,
அக் கொள்கைக்காக தங்களின் உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய தயாரானார்கள் என்றால் அவர்களுக்கு இயற்கையிலேயே நல்லவற்றை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருந்திருக்கிறது என்று பொருள்.

   புகாரிஷரீபிலும்,முஸ்லிம் ஷரீபிலும் வரும் நபிமொழிகள இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றன
"அரபுகளின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்' என்று பதிலளித்தார்கள்
புகாரி 3383
 عَنْ أَبِي هُرَيْرَةَ، بِحَدِيثٍ يَرْفَعُهُ، قَالَ: «النَّاسُ مَعَادِنُ كَمَعَادِنِ الْفِضَّةِ وَالذَّهَبِ، خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقُهُوا
"

தங்கம்வெள்ளி கனி மங்களைப் போன்று மனிதர்களும் கனிமங்கள் தாம்.
அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்' முஸ்லிம் 2638அரபி பதிப்பு 
தங்கம்,வெள்ளி போன்ற கனிமங்கள் எந்த நிலைமையிலும் தங்கள் இயல்பிலிருந்து மாறிவிடாது, அவைகள் மண்ணில் புதைந்திருந்தாலும் அவைகள் புழுதியடைந்து ஒளி குன்றுமே தவிர அதனின் அடிப்படைத் தன்மை மாறாது  மண்ணில் கிடந்ததை எடுத்து புடம் போட்டால் அது சொக்கத்தங்கமாக மாறிவிடும்.
அதைப்போன்று தான் நபித்தோழர்கள் தங்கமாகவும்,வெள்ளியாகவும் மூட நம்பிக்கைகளால் ஒளிஇழந்தவர்களாக அறியாமை காலத்தில் இருந்தார்கள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன் நபிஅவர்கள் குர்ஆனின் ஜோதியால் புடம் போட்டு அவர்களை சிறந்த,நேர்மைமிக்க உலகமாந்தர்களின் மனங்களை
 வென்றெடுக்கும் வகையில் வெளிப்படுத்தினார்கள.
குர்ஆன் வாழ்க்கை நெறிகளாக-மது,வட்டி,
தகாத உறவு களை  விட்டும் விலகுமாறு ஆணையிட்ட போது  விவாதங்களில் ஈடுபடாமல் செவிமெடுத்தோம்,கட்டுப்பட்டோம் என வாழ்ந்து அல்லாஹ் விற்கு உவப்பான வர்களாக மாறினார்கள். 
நபித்தோழர்களை நேசிப்பது  ஈமானில் ஒரு பகுதி" என நபிபெருமான்ﷺ அவர்கள் நவின்றதையும் நினைவில் கொள்ளுங்கள்.
    சிலர் தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்த நபித்தோழர்களே ஒரு காலத்தில் தவறு செய்தவர்கள்தான் எனக் கூறுபவர்களுக்கான பதிவு இது.
----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பயீ

Friday, October 8, 2021

பெருமானார் அவர்களின் மீது நாம் வைத்துள்ள பேரன்பு எத்தகையது?

பெருமானார் ﷺ அவர்களின் மீது நாம் வைத்துள்ள பேரன்பு எந்த வகையைச் சேர்ந்தது?
 ------ கணியூர் இஸ்மாயீல் நாஜி யின் ஜும்மா உரை(15/11/2019)
-----------------------------     
       "உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் உண்மையான முஃமினாக ஆகமாட்டார்"என அண்ணல்நபிﷺஅவர்கள் நவின்றுள்ளார்கள்.

       ஒருவரின் மீது நாம்வைக்கும் அன்பு பல காரணத்தினால் ஏற்படலாம்.
 இந்த நபிமொழி நம்மைப் பெற்றெடுத்த தந்தையை விட,நாம் ஈன்றெடுத்த பிள்ளைகளை விடவும் நபி அவர்களின் மீது அன்பு கொள்ளவேண்டும் எனக் கூறுகிறது.

      தந்தையின் மீதும்,பிள்ளைகளின் மீதும் நமக்கேற்படும் பாசம் இயல்பானது. நம்மையறியாமலேயே ஏற்படுவது. அதற்கு அரபியில் '#ஹுப்புத்தபஈ' என்பார்கள்.

      அத்தகைய அன்பை நம்மால் அண்ணலாரின் மீது வைக்க முடியுமா?
முடியும் என நபித்தோழர்களின்  செயல்கள் நமக்குக் காட்டுகின்றன.

      புகாரி ஷரீபில் வருகிறது. நபித் தோழர் #அபுதல்ஹா(ரழி) சொல்கிறார்,கைபர் போர் முடிந்து நபிபெருமான்ﷺ அவர்களும்,அவர்களின் துணைவியார் #ஸபிய்யா(ரழி) அவர்களும் ஒரு ஒட்டகத்தில் எனக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள். நான் வேறொரு ஒட்டகத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தேன். திடீரென ஒட்டகம் காலிடரி கீழே சாய நபிஅவர்கள் ஒருபக்கமும்,துணைவியார் சற்றுத் தள்ளியும் கீழே விழுந்தார்கள்.

   இதைப் பார்த்த நான் பதறிப் போய் என்னையறியாமலேயே நபிஅவர்கள் விழுந்ததைப் போன்றே பூமியில் நானும். விழுந்தேன். (அதாவது என் ஒட்டகத்தை நிறுத்திகீழே இறங்க முற்படாமல் நபியவர்கள் விழுந்ததைப் போன்றே கீழே விழுந்தேன்)
     அண்ணலாரின் அருகே சென்று 'காயம் ஏதேனும் ஏற்பட்டதா நபியவர்களே என்று கேட்டேன்.
நபியவர்கள், ஸபிய்யா அவர்களைப் பார் என்று சொன்னார்கள்.

#அபுதல்ஹா ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். 'நான் என் முகத்தை துணியால் மூடிக்கொண்டு அன்னையின் அருகில் சென்றேன். அந்த துணியால் அவர்கள் முகத்தை மூடி அவர்கள் கரங்களை பிடித்து மேலே தூக்கினேன். 

இந்த நிகழ்வு நபித்தோழர்கள் எந்த அளவு நபியவர்கள் மீது நேசம் கொண்டிருந்தார்கள் என்று புரிகிறது.

நபித்தோழர்கள், தம் பிள்ளைகளிடம் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்வதற்கு முன்னால் நபியவர்களுக்கு அடுத்து என் நேசத்திற்குரியவன் நீ என்று சொல்வார்களாம்.

#ஹஜ்ரத்_உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபியவர்களே! இந்த உலகத்தில் என் பெற்றோர், என் குழந்தைகள், மற்ற அனைவரையும் விட உங்களை அதிகமாக நேசிக்கிறேன். ஆனால், என்னை நான் உங்களை விட அதிகமாக நேசிக்கிறேன் என்றார்.

" லா யா உமர்" முடியாது உமரே உங்களை விடவும் என்னை அதிகமாக நேசித்தால் தான் உண்மை முஃமினாக முடியும் என்றார்கள் நபியவர்கள்

சற்று நேரம் யோசித்த உமர் அவர்கள், இப்போது சொல்கிறேன் நபியவர்களே! என்னை விடவும் உங்களை அதிகமாக நேசிக்கிறேன்".

"அல்ஆன யா உமர்" இப்போது தான் உமரே நீங்கள் உண்மையான முஃமீன் என்றார்கள் நபியவர்கள்.

#உவைஸ் கர்ணி அவர்கள் உஹது போரில் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் பல் ஷஹீதாக்கப்பட்டு விட்டது என்ற செய்தியை கேட்டவுடன் எந்த பல் என்று தெரியாத காரணத்தால் தனது எல்லா பற்களையும் உடைத்துக் கொண்டார்களாம்.

இது நமக்கு பைத்தியக்காரத்தனமாக தெரியலாம். ஆனால் ஒருவர் மீது நாம் கொண்டிருக்கின்ற பேரன்பு அறிவிற்கு அப்பாற்பட்டது. 

 ஒன்றை நேசிப்பதற்கு  அழகும் ஒரு காரணம்.
அழகான குழந்தையைப் பார்த்தால், நமக்கு அந்த குழந்தையின் மீது அன்பு ஏற்படுகிறது.

அழகிற்காக ஒருவரை நேசிப்பது என்றால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர்கள்.
நபியவர்கள் உள்ளும், புறமும் பூரண அழகுடையவர்கள்.

#அன்னை_ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா   அண்ணலாரின் ஒளிமிகு அழகை வர்ணித்த போது, " இரவு நேரங்களில் ஊசியின் காதுக்குள் நூலை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நூலையும் ஊசியையும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அவர்களின் புனிதமான உடல் அருகில் சென்று அந்த ஒளியில் ஊசியில் நூலைக் கோர்ப்பேன்.
மேலும் சொல்கிறார்கள், இருட்டில் ஏதேனும் பொருள் தெரியவில்லை என்றால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் கரங்களின் ஒளியினால் அவற்றை கண்டுப்பிடிப்பேன்.

 நபித் தோழர் #பராஉ இப்னு ஆஜிப் (ரழி)அவர்கள் சொல்கிறார்  ஒருமுறை பௌர்ணமி இரவில் அண்ணலாரின் முகத்தைப் பார்த்தேன்.
நிலவையும் நபியவர்களின் முகத்தையும் மாறி மாறி பார்த்தேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நபியவர்களின் முகத்தில் உள்ள ஜமாலை -அழகை,  பௌர்ணமி நிலவில் என்னால் பார்க்க முடியவில்லை.

   #என் சகோதரர் யூசுப் நபியின் அழகு கவர்ச்சிகரமானது. காண்போரை கவர்ந்திழுக்கும் அழகு.
 #என்னழகோ பார்க்க பார்க்கப் பார்க்க காண்போரின் கண்களை குளிர வைக்கும் அழகு ' என்றார்கள் நாயகம்ﷺ அவர்கள்.

         சிலரை நாம் அவரிடமுள்ள #அறிவாற்றலுக்காக நேசிக்கிறோம்.

 அந்த  அடிப்படையில் நேசிப்பதாக இருந்தால் 'முந்திச்சென்றவர்கள் இனிமேல் வருபவர்கள் என அனைவருடைய கல்வி ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக   நவின்ற நபிகளார் அதற்கு மிகவும் பொருத்தமானவர்கள்.

குறைவான வார்த்தைகளில் ஆழமான, அதிகமான   கருத்து களைச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்

       நாம் நபிகளாரின் மீது வைத்துள்ள அன்பிற்கு பல காரணங்கள் இருந்தாலும்  
அல்லாஹுவும் ரசூலும் நம்மிடம் எதிர்பார்ப்பது #ஹுப்புல்_இத்திபாஈ '  

        அதாவது ஒருவரை நாம் நேசித்தால் அவருடைய நடை,உடை பாவனைகளை நமது வாழ்வில் நமதாக்கிக் கொள்வோம்.

      வெறித்தனமான அரசியல்கட்சித் தொண்டனோ,சினிமா ரசிகனோ தனது நேசத்திற்குறியவரைப் போன்றே தனது சிகையை அலங்காரம் செய்துகொள்கிறான்.பேச்சிலும் செயலிலும் அவரைப் போன்றே தன்னை மாற்றிக் கொள்கிறான்.    
 
           நமது கண்மணி நாயகம்ﷺ அவர்கள் மீது நாம் உண்மையில் நேசமும்,பாசமும் கொண்டிருக்கிறோம் என்றால் நாம் சொல்லாலும்,செயலாலும் நற்குணத்தாலும் அவர்களைப் பின்பற்றவேண்டும்.

     அவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களின் பெயரால் மவ்லூத் ஓதுகிறீர்கள். உங்களின் எண்ணத்திற்கேற்ப அதற்காக அல்லாஹ்விடம் கூலி உண்டு.

 ஆனால் அதே நேரத்தில் அண்ணலாரின் வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் வீரர்களைப் பற்றியத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

 நபிஅவர்களைப் பற்றி ஒரு ஐந்து நிமிடம் சொல் என்றால் அவர்களால் சொல்ல முடியுமா? இங்கிருக்கும் அனைவரும்  ஒரு கணம் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்? நபியவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்களில் ஆண்
 குழந்தைகள் எத்தனை? பெண குழந்தைகள் என்று கேட்டால் உங்களால் சொல்ல முடியுமா?

 இந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் எத்தனைபேர் தங்கள் வீட்டில் நபிஅவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கீறீர்கள்? 

எனவே அன்பு சகோதரர்களே! நபிஅவர்களின் மீது உண்மையான நேசம் என்பது அவர்களைப் பின்பற்றுவதில்தான் இருக்கிறது.
------- சிதம்பரம் இப்ராஹீம் நகர் மஸ்ஜிதில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயின் ஜும்மா உரையின் சுருக்கம்.

Friday, October 1, 2021

உண்மை நிகழ்வு

அஷ்ஷைக் முஹம்மது ராத்திப் அந்நாபிலிஸி அவர்களின் பதிவு 
+++++++++++
ஒரு உண்மை சம்பவம் நாம் பெறவேண்டிய பாடம்
------------------------
 கனடாவில் ரொட்டியைத்  திருடியதாக முதியவர் ஒருவர் நீதிபதியிடம் அழைத்து வரப்பட்டார்.
 திருடியதை ஒப்புக் கொண்ட முதியவர் பசியினால் நான் இறந்துவிடுவோனோ எனப் பயந்து   ரொட்டியை திருடி உண்டேன்  என்றார் உருக்கமாக.

 அவருடைய பரிதாப நிலைமையும் உண்மையை ஒப்புக் கொண்டதும் நீதிபதியை நெகிழ வைத்தது.

"நம்நாட்டின் குற்றவியல் சட்டப்படி நீங்கள் திருடியது குற்றம் எனவே அதற்காக பத்து டாலர் அபராதம் விதிக்கிறேன்.
ஆனால் ரொட்டி வாங்கக்கூட பணம் இல்லாத நீங்கள்  எங்கே  அபராதத்தைச் செலுத்தப் போகிறீர்?
உங்களுக்காக அந்த அபராதத்தை நானே செலுத்துகிறேன்"
என்றவர் அவையிலுள்ளவர்கள் முன்னிலையேயே தனது சட்டப்பையிலிருந்து பத்து டாலரை எடுத்து பதிவாளரிடம் கொடுத்து அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு கூறியவர் அந்த முதியவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

பின்பு அங்கே அவையில் அமர்ந்திருவர்களை நோக்கி
 "இந்த முதியவர் இந்த நிலைக்கு வருவதற்கு  அவர் வாழும் சமுதாயமான உங்களுக்கும் பொறுப்பிருக்கிறது
எனவே தார்மீக அடிப்படையில் நீங்களும் பத்து டாலர் அவருக்கு வழங்கவேண்டும் என்றார்.
கூடியிருந்தவர்களிடமிருந்து 490 டாலர் வசூலானது. அதை அந்த முதியவரிடம் வழங்கினார் நீதிபதி.

#ஷைக்_நாபிலிஸி சொல்கிறார் 
இந்த நீதிபதியின் பார்வை இஸ்லாம் வழியுறுத்தும் பார்வை.
இந்த சம்பவத்தைக் கேள்விப் பட்டபோது எனக்கு ஷைக் ஷஃரானி(ரஹ்) அவர்கள் சொன்னது நினைவிற்கு வந்தது,

 #முஸ்லிம்கள் வாழும் ஊரில் ஒரு முஸ்லிம் பசியால் இறந்தால் அந்த ஊரிலுள்ள ஏதோ ஒரு செல்வந்தன்  இறந்தவருக்குச் சேரவேண்டிய பங்கை திருடியிருக்கிறான் என்று பொருள்"
_அஷ்ஷைக் ராத்திப் அந்நாபிலிஸி
--------கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி காசிமி

Sunday, July 18, 2021

இஃதிகாப் என் அனுபவம்

துஆ செய்யுங்கள்
-------------------------------------------------------------------------------------------------------
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  செய்த ரமலான் அமல்களில் முக்கியமானது இஃதிகாஃப் என்ற அமலாகும்.

 ரமலான் மாதத்தின் கடைசி பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருந்ததுடன் மற்றவர்களும் இருக்க ஆர்வமூட்டியுள்ளார்கள். 

அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் கடந்த பல ஆண்டுகளாக இஃதிகாஃப் இருந்து வருகிறேன்.
 இதற்கு என்னை தயார்படுத்திய என தந்தை முஹம்மது யாக்கூப் ஸாஹிப் அவர்களை பற்றிய ஒரு பதிவு தான் இது. அவர்களுக்கு நீங்கள் துஆ செய்யும் நோக்கத்துடன் இதை பதிவிடுகிறேன்.

என் தாத்தா முஹம்மது இஸ்மாயில் ராவுத்தரால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய பள்ளியின் தாளாளராகவும், ஆசிரியராகவும் இருந்தவர். என் தந்தை தான் எனக்கு முதல் குரு. அ,ஆ, என்ற தமிழிலும்,  ب،ألفஎன்று அரபியிலும் ب،ا,   என்று உருதிலும் अ,आ, என்று ஹிந்தியிலும் A,B என்று ஆங்கிலத்திலும் எழுத படிக்க கற்று கொடுத்தவர்.

 அவரிடம் இருந்து இரண்டு விஷயங்களை நான் கற்று கொண்டேன். ஒன்று, எது நடந்தாலும், அது அல்லாஹ்வின் நாட்ட படியே நடக்கிறது, 

இரண்டு இஃதிகாஃப் இருத்தல். 

நான் பன்னிரண்டு வயது  சிறுவனாக இருந்த பொழுது என் தந்தை எங்கள் ஊர் பள்ளியில் இஃதிகாஃப் இருப்பார்கள். 

நானும் பள்ளியிலே படுத்து கொள்வேன். சுமார் இரண்டு மணியளவில், என் தந்தை என்னை எழுப்பி விடுவார். நான் பள்ளியின் ஒலி பெருக்கியில் மணி இரண்டு ஆகி விட்டது ஸஹருக்கு உணவு தயாரிப்பவர்கள் தயாரித்து கொள்ளுங்கள் என்று மூன்று முறை சொல்லுவேன். 

பின்பு, என் வீட்டிற்கு சென்று என் தாயாரை எழுப்பி விட்டு பிறகு மறுபடியும் தூங்கி விடுவேன். திரும்பவும் மூன்றரை மணிக்கு எழுப்பி விடுவார். மீண்டும் ஒலி பெருக்கியில் மணி மூன்று முப்பது ஸஹருக்கு சாப்பிடுபவர்கள் எழுந்து சாப்பிட்டு கொள்ளலாம் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வருவேன். 

என தந்தையுடன் சேர்ந்து நானும் நோன்பு வைத்து கொள்வேன். நான்கு மணிக்கு ஒலி பெருக்கியில் ஸஹர் நேரம் முடிவடைய இருப்பதால் விரைவாக உணவை உண்ணுங்கள் என்பேன்.  

என வீட்டிற்கு செல்லும் வழியில் முக்கூட்டு என்று சொல்லப்படும் மூன்று தெருக்கள் சந்திக்கும் இடம் இருக்கிறது. அங்கு, ஒரு வீட்டை ஒட்டி விளக்கு தூண் ஒன்று இருக்கும். அங்கு பேய் இருக்கிறது. தனியாக போனால் உன்னை கூப்பிட்டு உன் மீது ஏறி கொள்ளும் என்று என் நண்பர்கள் சொல்லுவார்கள். அதை பற்றி என் தந்தையிடம் கேட்டேன். 

பேய் என்று எல்லாம் ஒன்றும் கிடையாது நீ போகும் பொழுது யாராவது உன்னை கூப்பிடுவது போன்று தோன்றினால் திரும்பி பார்க்காமல் ஸலவாத் ஓதிக் கொண்டே போ என்று சொன்னார்.  

சில நேரங்களில் அவ்விதம் என்னை கூப்பிடுவது போன்று தோன்றும் என் தந்தை சொன்ன படியே ஸலவாத் ஓதி கொண்டே சென்று விடுவேன்.

  1967ம் ஆண்டு  லால்பேட்டையில் மதரஸாவிலிருந்து மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்ற பின்னால் வந்த  ரமளானில் ஏதோ காரணத்தினால் என் தந்தையால் இஃதிகாஃப் இருக்க முடியவில்லை. ஜமாத்தார்கள் என்னை இருக்கும் படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த வருடம் நான் இஃதிகாஃப் இருந்தேன். எங்கள் ஊரில் இரண்டு முறை இஃதிகாஃப் இருந்திருக்கிறேன். 

 அதன் பின்னால் 1997 ஆம் ஆண்டு தான் மீண்டும் இஃதிகாஃப் சிதம்பரம் நவாப் பள்ளியில் இருக்க தொடங்கினேன். அல்லாஹ்வின் அருளால் இடையில் சில ஆண்டுகளை தவிர தொடர்ந்து இஃதிகாஃப் இருந்து வருகிறேன். 

என்னை இஃதிகாஃப் இருக்க பக்குவ படுத்திய என் தந்தை யின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஜன்னதுல் பிர்தவ்ஸில் இடம் பெற துஆ செய்யுங்கள் 

ஒவ்வொரு முறை இஃதிகாஃப் இருக்கும் பொழுதும் என்னில் ஒரு மாற்றம் உருவாவதை காண்கிறேன். 

அல்லாஹ் என் உயிரை கைப்பற்றும் வரை நான் தொடர்ந்து இஃதிகாஃப் இருக்க துஆ செய்யுங்கள்!............

குறிப்பு: இஃதிகாஃப் இருப்பதால் முகநூலில் என்னை பார்க்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, June 26, 2021

மறக்க வியலா பண்பாளர் கவிக்கோ

மறக்கவியலா பண்பாளர்
கவிக்கோஅப்துர்ரஹ்மான் 
******************************
இன்று ஈது பெருநாள். மறைந்த கவிக்கோ அண்ணனின் நினைவு அதிகமாக வந்து சென்றது. ஒவ்வொரு ஈது பெருநாள் அன்றும் சன் தொலைக்காட்சியில்  பெருநாள் தொடர்பான நிகழ்ச்சியில் அண்ணன் கலந்துக் கொள்வார். 
நிகழ்ச்சி முடிந்தவுடன் அண்ணனிடம் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு அவர்களின் உரையிலிருந்து நான் ரசித்த சில வரிகளை சுட்டிக் காட்டுவேன்.
அதை கேட்டு அவர் மகிழ்ச்சியடைவது அவர் குரலிலேயே தென்படும்.
1960களில் வானொலியில் பொங்கல் அன்று சிறப்பு கவியரங்கம் ஒலி பரப்பாகும்.
அதை என் தந்தை அவரும் ஒரு கவிஞர் என்பதால் ஆர்வமுடன் கேட்பார். நான் அவர் அருகில் இருந்து அதை கேட்பேன்.
அப்போது கவியரங்கின் தலைவர் அடுத்து அதியமானை பற்றி அப்துர் ரஹ்மான் என்று அறிவித்தார். அவர் கவிதை வாசிக்க வாசிக்க என் தந்தை சபாஷ் சபாஷ் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது என் மனதில் அப்துர் ரஹ்மான் என்ற பெயர் பதிந்து விட்டது.
அதற்குபின் பல கவியரங்க மேடைகளில் அண்ணன் கவிக்கோ அவர்களை தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். ஏறக்குறைய 48ஆண்டுகளுக்குப் பின் நீடூரில் ஒரு விழாவிற்கு கலந்துக் கொள்ள வந்த அண்ணன் கவிக்கோவிடம் நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதாவின் பொதுச் செயலாளர் சாதிக், இவர் எங்கள் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். 
‘வாங்க ஆலிம்ஸா’ என்று கூறிய அண்ணன் கவிஞர் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.
கவிக்கோ அண்ணனுடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். அவர் எப்போதும் சற்று இறுக்கமாகவே இருப்பார். புதிய நபரிடம் கலகலப்பாக பேச மாட்டார்.

ஆனால், கவிதையை பற்றி பேச ஆரம்பித்தால் பேசுவதை நிறுத்த மாட்டார். அவரிடம் நானாகவே சிறுவயதில் வானொலியில் உங்களின் கவிதைகளை கேட்டிருக்கிறேன் என்று ஆரம்பித்தேன். அப்படியா ஆலிம்ஸா விற்கு கவிதையெல்லாம் பிடிக்குமா என்று கேட்டார். 

ஆம். நிறைய உங்கள் கவிதைகளை படித்திருக்கிறேன். காயல்பட்டினத்தில் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் சாரண பாஸ்கரன் கலந்துக் கொண்டார். அதில் மிகவும் பிரசித்தி பெற்ற #”படிக்காத அவரிடம் தான்  பல்கலைக்கழகங்கள் பாடம் படித்தன”. என்ற கவிதையை நீங்கள் சொன்னீர்கள் என்று சொன்னேன். ஆலிம்ஸா விற்கு கவிதை மேல் ரொம்ப நாட்டம் போல் தெரிகிறதே என்று சொன்னார்.
மிகவும் உற்சாகம் அடைந்த அண்ணன் தொடர்ந்து மார்க்க கல்வி, உலக கல்வி பற்றிய விவாதம் “MUTUAL FUND” போன்ற விஷயங்களை பற்றி பேசினோம்.
அப்பொழுது கவிக்கோ அண்ணன் அங்கே இருந்த கேப்டன் அமீர் அலியிடம் நமக்கு ஒரு ‘ஹைடெக் ஆலிம்ஸா’ கிடைத்திருக்கிறார் என்றார்.

அதன்பின் நண்பர் சாதிக்குடன் சென்னை செல்லும் போதெல்லாம் கவிக்கோ அண்ணனை சந்திக்காமல் வந்ததில்லை.
வக்ஃப் வாரிய தலைவராக போகிறார் என்று செய்தி வந்தவுடன் அலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன்.
‘என்ன அண்ணே! பெரிய பொறுப்பு ஏற்க போகிறீர்களாமே, அதற்கெல்லாம் நீங்கள் ஆசை பட மாட்டீர்களே எப்படி சம்மதித்தீர்கள்’ என்று கேட்டேன்.

‘ஓ! சிதம்பர ஆலிம்சாவுக்கும் தகவல் வந்துவிட்டதா? என்றவர் இதே கேள்வியை தான் தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார். தலைவரிடம் வக்ஃப் வாரிய தலைவராக என் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது , ‘அவனை கேட்டிங்களா? அவன் பொறுப்பெல்லாம் ஒத்துக்க மாட்டானே. எத்தனையோ முறை அவனிடம் பல பொறுப்புகள் கொடுக்க முயன்றேன். அவன் மறுத்து விட்டான் இதை ஏற்றுக் கொள்வானா? என்று கேட்டிருக்கிறார்.
நான் தலைவரை நேரில் சந்தித்தேன். சமுதாயத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள் எமது சமுதாயத்திற்கு பலனில்லாமல் அநியாயக்காரர்கள் கைகளில் இருக்கிறது. உங்கள் ஆட்சி காலத்தில் அவைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். அரசியல் குறுக்கீடு இல்லையென்றால் நிச்சயமாக நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று சொன்னாதாக அண்ணன் சொன்னார்.

அவர் சொன்னதை போன்றே அவர் பொறுப்பில் பல கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டன. பொது மேடைகளில் வக்ஃப் வாரியத்தின் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.  

ஒரு கூட்டத்தில், “ஹிந்துக்கள் சிவன் சொத்து குல நாசம் என்று கூறி சிவன் சொத்தை சாப்பிடுவதற்கு பயப்படுவார்கள். ஆனால், நம்மாட்களோ அல்லா சொத்தை அல்வா சாப்பிடுவது போன்று சாப்பிடுகிறார்கள். எப்படி பொய் கணக்கு எழுத வேண்டும் என்பதை எங்கள் ஆட்களே சொல்லிக் கொடுக்கிறார்கள்” என்று சொன்னார்.
ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃப் இடங்களை மீட்டு அங்கே கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் போன்றவைகளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அண்ணனின் துணைவியார் மறைவு அவரை பெரிய அளவு பாதித்தது. உரத்த குரலில் பேசி அறியாத தன் துணைவியுடன் பணிச்சுமையின் காரணமாக அதிக அளவு அவருடன் இருக்க முடியவில்லை என்ற மனக் குறை  அண்ணனிடம் இருந்தது. அண்ணியார் மறைவதற்கு முதல் நாள் கூட வக்ஃப் வாரிய பணிக்காக கேரளா சென்றிருந்தார். தன் துணைவியாரை பற்றி ஆனந்த விகடனில் உருக்கமான கட்டுரை எழுதியிருந்தார்.
பாலைவனத்திற்காகவே படைக்கப்பட்ட ஒட்டகம் போல் எனக்காகவே அவள் படைக்கப்பட்டாள்.

இளமையில் பாலாய் இருந்தாள்.
நடுமையில் மதுவாய் இருந்தாள்.
முதுமையில் மருந்தாய் இருந்தாள்.

என்ற வரிகள் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது.
படித்தவுடன் அண்ணனுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். மனைவியை  ஒரு புதிய கோணத்தில் அறியப்படுத்திருக்கிறீங்க

நடுமையில் மதுவாய் இருந்தாள் என்ற வார்த்தை பல அர்த்தங்களை சொல்கிறதுஎன்றேன். அவர் சிரித்துக் கொண்டே மனைவியை மதுவுடன் ஒப்பிட்டிருக்கிறாரே என்று ஆலிம்சாக்கள் எனக்கு காஃபிர் பட்டம் கொடுத்து விட மாட்டிர்களே என்று வழக்கம் போல் ஆலிம்களை கலாய்த்தார்.

அவர் மறைவதற்கு இரு வாரங்களுக்கு முன் ஒரு உருது கவிதை தொடர்பாகவிளக்கம் கேட்பதற்காக அவரை அழைத்தேன். அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.  பின் மறுபடியும் அவரே என்னை தொடர்பு
 கொண்டார்.
உடல்நிலை பற்றி விசாரித்தேன். சிறுநீரக பிரச்சனைத்தான் கொஞ்சம் தொல்லை கொடுக்கறது. துஆ செய்யுங்கள் ஆலிம்சா என்றார். உருது கவிதையில் ஒரு சந்தேகம் என்றேன். ஆலிம்சாவிற்கு உருது கவிதையெல்லாம் பிடிக்குமா என்றார். ‘பல்’ என்ற உருது வார்த்தைக்கு தமிழில் என்ன வார்த்தை போடலாம் என்றேன். அடுத்த கணம் என்றார்.

அவரிடம் நான் கேட்ட கவிதை இது தான்.
தன்னுடைய மரணத்தை பற்றி எந்த மனிதனுக்கும் முன்னறிவிப்பில்லை.
பொருட்களோ நூறாண்டிற்க்கு இருக்கின்றன.
அடுத்த கணம் என்ன நடக்கும் என்று தெரியாது."
அல்லாஹ் அண்ணன் கவிக்கோவின் பாவங்களை மன்னித்து அவருடைய கப்ரை விசாலமாக்குவானாக.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி.

Saturday, June 5, 2021

பெண்ணுக்குள் இரண்டு இதயங்கள் உண்டா?

பெண்ணுக்குள் இரண்டு இதயங்கள் உண்டா?
__சுவராஸ்யமான விவாதம்
-----
ஆராய்ச்சி மாணவர்கள் நிறைந்த அவையில் குர்ஆனில் மொழிவளம் சொல்லாட்சி இலக்கிய நயம் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் பேராசிரியர் ஒருவர்.

 உரையில் அவர் குர்ஆனுடைய சொல்வளம் எத்தகையது என்றால் அது பயன்படுத்திருக்கின்ற சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு சொல்லை பயன்படுத்தினால்  குர்ஆன் கூற வரும் கருத்தே மாறிவிடும் என்ற சொன்னவர்
அதற்கான சில எடுத்துக்காட்டுகளை யும் சுட்டிக்காட்டினார்.

அப்பொழுது ஒரு மாணவர் எழுந்து  பேராசிரியர் அவர்களே! நீங்கள் சொல்லுவது ஒரு வசனத்திற்கு முரணாக இருக்கின்றது குர்ஆன் பயன்படுத்தி உள்ள சொல்லுக்கு  மாற்றாக வேறு சொல்லை  பயன்படுத்தினால் அதனுடைய கருப்பொருள் மாறிவிடும்  எனக் கூறுகிறீர்கள்
 ஆனால் குர்ஆனின் 33வது அத்தியாயம் நான்காவது  வசனத்தில்
#அல்லாஹ் எந்த ஆணினுள்ளும் இரண்டு இதயங்களை அமைக்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது 

   இவ்வசனத்தில்  #ரஜ்ல் ஆண் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது
ஆனால் ஆணுக்கும்  பெண்ணுக்கும்    ஒரு இதயம் தானே   இருக்கிறது அவ்வாறானால்  இந்த வசனத்தில் #ரஜ்ல் என்ற சொல்லுக்குப் பகரமாக  #பஷர்   
மனிதனுக்குள் என்ற சொல்தானே பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும்
அப்பொழுது தானே  அது ஆணையும்  பெண்ணையும் குறிப்பிட்டிருக்கும் 
இந்த ரஜ்லு என்ற சொல்லின் மூலம் ஆணுக்கு மட்டும்தான் இரண்டு இதயம் இல்லை பெண்ணுக்கு இருக்கிறது என்பது போன்ற கருத்து வருகிறதே 
இது உங்களுடைய கூற்றுக்கு முரணாக இல்லையா? என்று கேட்டார்.

 ஒரு நிமிடம் அரங்கம் நிசப்தமானது அனைவருக்கும் அவர் கேட்டதுசரியான கேள்வி தானே இரண்டு பாலாருக்கும் ஒரே இதயம்தானே இருக்கிறது அவ்வாறு இருக்க குர்ஆன் 'ஆண்'என்று ஏன் குறிப்பிட வேண்டும் என்கின்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டது 
இதற்குப் பேராசிரியர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை அனைவரும்
அவரை உற்று நோக்கியபடி இருந்தனர்.

புன்னகையுடன்  பேராசிரியர்  பேச ஆரம்பித்தார்
#சகோதரரே நீங்கள் கேட்ட கேள்வி சரிதான் ஆனால் "ஆணுக்குள்ளே இரண்டு இதயங்கள் இருப்பது சாத்தியம் இல்லாத ஒன்றுதான் ஆனால் பெண்ணுக்குள்ளே இரண்டு இதயங்கள் இருப்பது சாத்தியமான ஒன்று" என்றார். 
கேள்வி கேட்டவர் வியப்புடன் அவரை பார்க்க தொடர்ந்த  பேராசிரியர் சொன்னார்:
#ஒரு பெண் கருவுற்று அது குழந்தையாக உருவாகின்ற பொழுது அந்த குழந்தைக்கும் ஒரு இதயம் இருக்கும் அல்லவா அவ்வாறாயின் அக்காலகட்டத்தில் பெண்ணுக்குள்ளே இரு இதயங்கள் இருக்கும் இல்லையா?
மனிதன்  என்று போட்டிருந்தால்  கருவுற்ற பெண்ணுக்குள் இரண்டு இதயங்கள் இருக்க சாத்தியம் இருக்கிறதே எனும் கேள்வி எழும்   எனவே ஆணினுள்ளே இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை என்பதுதான்  பொருத்தமான சொல்லாக இருக்கமுடியும் என முடித்தார் பேராசிரியர் 
அரங்கத்தில் கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆனது
----அரபு இணையதளத்திலிருந்து 
கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி

நான் கண்ட காயிதேமில்லத்

நான் கண்ட காயிதேமில்லத்(ரஹ்) (மீள்),
---------------------------
என் தந்தை காங்கிரஸ் காரர்.
எப்பொழுதும் முஸ்லிம் லீக்கை விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். எனவே எனக்கு முஸ்லிம்  லீக் தலைவர்களின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாததிருந்தது.

இந்நிலையில் 1966ம் ஆண்டு லால்பேட்டையில் ஓதும் போது முஸ்லிம் லீக் கூட்டத்தில் கலந்து கொள்ள காயிதேமில்லத் அவர்கள் வருகைதந்து மதரஸாவில் தங்கியிருந்தார்கள்.
அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்பொழுதுதான் எவ்வளவு எளிமையான இறையச்சமுள்ள தலைவர் என்பதை அருகே இருந்து உணர்ந்து கொண்டேன்.
 மாலை கூட்டத்திற்கு புறப்படுமுன் தாங்கள் அணிந்திருந்த ஷேர்வானியை கழட்டி அங்கிருந்த ஆணியில் மாட்டிவிட்டு பெட்டியிலிருந்து ஒரு புதிய ஷேர்வானியை எடுத்து அணிந்து கொண்டு புறப்பட்டார்கள்.
கூட்டம் முடிந்து  அறைக்கு வந்த அவர்கள் ஊர் திரும்பும் பொழுது  ஆணியில் மாட்டியிருந்த ஷேர்வானியை எடுத்து மடிக்க ஆரம்பிக்க நான் வேகமாக அருகில் சென்று கொடுங்க தலைவரே நான் மடிக்கிறேன் என்றேன்.
அப்பொழுது அங்கே இருந்த #சிராஜுல்மில்லத், தம்பி எங்கே அவர்களிடமிருந்து அதை வாங்கிவிடுங்கள் பார்ப்போம்,அவங்க வேலையை அவங்கதான் பார்ப்பாங்க மற்றவர்களை வேலை வாங்க மாட்டார்கள் என சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
அதே போன்று அவர்களும் புன்னகை யுடன்  மடித்து பெட்டியில் வைத்தார்கள்.
பின் அவர்களுக்கு கூட்டத்தில் அணிவிக்கப் பட்ட சால்வைகளும்,கொள்ளுமேடு ஜமாஅத்தினர் சார்பில் அளிக்கப் பட்ட குர்ஆனும் இருந்தன.
தலைவர் குர்ஆனை மட்டும்  எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு குர்ஆனை மட்டும் பெட்டியில் வைத்துக் கொண்டார்கள்.

அப்பெட்டியை அவர்களே எடுத்துக் கொண்டு காரை நோக்கிச் சென்றார்கள்
அப்பொழுதும் நான் கேட்டேன் கொடுக்க மறுத்துவிட்டார்கள்

லால்பேட்ட  மு.லீக் சார்பில் கவர் ஒன்றை தலைவரிடம் நீட்டினார்கள்.
இது என்ன என்றார்? தலைவர்
போக்குவரத்து செலவிற்கு எனச் சொன்னார்கள்.

எனக்கெதற்கு டெல்லியிருந்து அரசு செலவில்  ரயிலில் சிதம்பரத்திற்கு வந்தேன்
சிதம்பரத்திலிருந்து காரில் நீங்க அழைத்துவந்து விட்டீங்க.
இடையில் டீ,டிபன் எல்லாம், என்னுடன்  வந்தவங்க கவனித்துக் கொண்டார்கள் 
எனக்கு எந்த செலவுமே இல்லையே என்று அந்தக் கவரை வாங்க மறுத்துவிட்டார்கள்.

கொடுத்த பணம் போதாது என்று வாங்க மறுத்த தலைவர்களை பார்த்த எனக்கு அவர்களின் பற்றற்ற தன்மை வியப்பாக இருந்தது.
    1969ல் கணியூரில் நடைபெற்ற எனது உறவினர் திருமணத்திற்கு இரவு ஒரு மணியளவில் காயிதேமில்லத் தமது சகாக்களுடன் வந்தார்கள்.
சுப்ஹுத் தொழுகைக்குக்குப் பாங்கு சொல்வதைக் கேட்டு எழுந்த அவர்கள் யாரையும் எழுப்பாமல் பாங்கு சொல்லும் சத்தம் வரும் திசையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்கள்
மெயின் ரோட்டிலிருந்து வலது புறம் செல்லும் தெருவில் திரும்பி மஸ்ஜிதிற்குச் செல்வதற்கு பதிலாக நேராக கடத்தூர் செல்லும் பாதையில் செல்வதைக் கவனித்த ஒருவர் தலைவரிடம் விசாரித்து மஸ்ஜிதிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
நான் சுப்ஹுத் தொழுக சென்ற பொழுது அங்குள்ளவர் சொன்னார்கள்.
 அறிமுகமில்லாத வெளியூரில் இருட்டாக இருக்கும் நிலையில் இருப்பிடத்திலேயே தொழுதிருக்கலாம் ஆனாலும் ஜமாஅத்துடன் தொழவேண்டும் எனும் ஆர்வம் அவர்களின் ஈமானின் வெளிப்பாடு.
தொழுகை முடிந்தபின் முத்தவல்லி, அருகில் இருக்கும் தன் வீட்டிற்கு வாருங்கள் டீ சாப்பிட்டுப் போலாம் என அழைத்தார்.
எந்த பாசாங்குமில்லாமல் எளிய மனிதராய் வீட்டிற்கு வந்தார்கள்.
நானும்  கூட சென்றேன்.
இவர் தேவ்பந்த் மதரஸாவில் ஓதுகிறார்
ஜும்மாவில் நன்றாக உணர்ச்சிகரமாகப் பேசுவார் என என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் முத்தவல்லி.
தலைவர் அவர்கள் "பனீஇஸ்ரவேலர்களில் இருந்த ஆலிம்களைப் போல கற்றது ஒன்று செய்றது ஒன்று என இல்லாமல் அல்லாஹ் விற்குப் பயந்து  நீங்களும்  நடந்து மக்களையும்  நல்வழிப்படுத்த வேண்டும்" என்றார்கள்.
நிகாஹ் நடக்கும் நேரத்தில் அவர்கள் தங்கிருக்கும் இடத்திற்குச் சென்றேன்.
ஊர் பிரமுகர்கள் பலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
நானும் உள்ளே சென்று தலைவரின் அருகே அமர்ந்து கொண்டேன்.
திடீரென வாழ்க,வாழ்க என ரோட்டில் சத்தம் கேடேடது.
அங்கிருந்தவர்கள் அமைச்சர் மதியழகன் வந்துவிட்டார் என  எல்லோரும் வேகமாக சென்றுவிட நான் மட்டும் அமர்ந்திருந்தேன்.
தலைவர் புன்னகையுடன்  ஏன் தம்பி நீங்க அமைச்சரைப் பார்க்கப் போகல என்றார்கள்.
இல்லைங்க எனக்கு ஆசை இல்லைங்க என்றேன்.
லேசாக சிரித்துக்கொண்டார்கள்.

அவர்களின் மறைவு செய்திகேட்டு அவர்களின் ஜனஸா வைக்கப்பட்டிருந்த நியூகாலேஜ் மைதானத்திற்குச் சென்றேன்.
பெரிய மைதானம் முழுக்க மக்கள் கூட்டம்
தொழுகை முடிந்து ஜனஸா திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலிற்கு ஊர்வலமாஆகக் கொண்டு செல்லப்பட்டது.
எம்ஜிஆர் இறுதிவரை நடந்தே வந்தார்.

மறைவிற்கு அஞ்சலி செய்யும் வண்ணம் துக்ளக் பத்திரிக்கை தலைவரின் புகைப்படத்தைப் போட்டு அதன் கீழ் #கண்ணியம்_மறைந்தது என எழுதிஇருந்தது.

 _கணியூர் இஸ்மாயீல் நாஜி மனபயி

தந்தையின் மதிநுட்பம்

ஒரு தந்தையின் மதிநுட்பம்

தன் தந்தையின்  மரணத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த மன்னன்  ஒருவன் வயது முதிர்ந்தவர்கள் இந்த பூமிக்கு பாரம் என எண்ணி அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டான்.

தன் தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு இளைஞன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக தன் வீட்டின் கீழே ரகசிய அறையில்  அவரைத் தஙக வைத்தான்.

சில நாட்களுக்குப் பின், ஒற்றர்கள் மூலமாகவோ அல்லது காட்டி கொடுப்பவர்கள் மூலமாகவோ மன்னனுக்கு இந்த தகவல் தெரிந்து விட்டது.

அந்த இளைஞனை விசாரித்து விட்டு அவனைத் தண்டிக்கவும் அவன் தந்தையை கொல்லவும் விரும்பியவன் ,அந்த இளைஞனை

 #காலால் நடந்தவனாகவும் راكيا#ஏறியவனாகவும் 
வரச் சொல்  என ஆணையிட்டான்

ஒரே நேரத்தில் எப்படி வாகனத்தில் ஏறிய வண்ணமும் நடந்தும் வர முடியும் என தந்தையிடம் கேட்டான்.

தந்தை சொன்னார்: 
 ஒரு குச்சியை   ஒரு காலில் கட்டிக்கொண்டு
 அதை ஊன்றிக் கொண்டும் மற்றொரு காலால் நடந்தும்செல் என்றார். 

அவ்வாறே அவன் மன்னனின் முன் சென்றான்

அவனுடைய புத்திசாலித்தனத்தை கண்ட மன்னன் நாளை காலனி அணிந்தும்  வெறுங்காலுடனும் நடந்து வரவேண்டும் என உத்திரவிட்டான்

இது எப்படி சாத்தியமாகும் என அவன் தந்தையிடம் கேட்க அவனுடைய ஷூ வடிவிலான காலணியின் கீழ்ப்பகுதியை எடுத்து விட்டு அணிந்து போகச் சொன்னார். 

அந்நிலையில் காலணியை அணிந்திருந்தாலும்
அவனின பாதம் தரையில் பட்டதால் வெறுங்காலுடன்  நடந்ததைப் போன்றிருந்தது

அதைப் பார்த்த மன்னன் அவனின் புத்திக் கூர்மையைக் கண்டு அவன் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 

நாளை, உன்னுடன் இருக்கும் எதிரியையும்  விசுவாசமுள்ள நண்பனையும் அழைத்து வா என்றான்.

இது தொடர்பாக, தந்தையுடன் ஆலோசனை செய்தான்.

 நாளை உன் மனைவியையும் உன் வளர்ப்பு நாயையும் அழைத்து சென்று மன்னர் முன் அவர்களை அடி என்றார்.

அப்பொழுது என்ன நடக்கும் என்றான் மகன்.
என்ன நடக்கும் என்பது அப்பொழுது உனக்குக் தெரியும் என்றார் தந்தை.

அவனும் மன்னனின் முன் நாயையும் மனைவியையும் அடித்தான் 
நாய் கத்திக் கொண்டே அவனை விட்டும் சற்றுத் தள்ளிப் போய் நின்றது.
அடிவாங்கிய மனைவியோ கடுங் கோபத்துடன் மற்றவர்கள் முன் என்னை அடிக்கிறாயா? என்ன நடக்கிறது என்று பார் என  அலறிய வண்ணம் மன்னா! இவன் வீட்டு ரகசிய அறையில் அவனின் தந்தையை ஒளித்து வைத்துள்ளான் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
மன்னன்,"எதிரியைக் காட்டிவிட்டாய், விசுவாசம் உள்ள நண்பன் எங்கே? எனக் கேட்டான்
அந்த இளைஞன் அவனிடமிருந்து விலகி தள்ளி நின்று கொண்டிருந்த நாயை அழைத்தான்
அந்நாய் தன் வாலை ஆட்டிக் கொண்டு வேகமாக அவன் அருகே வந்து அவனின் காலில் தனது முகத்தைத் தேய்த்தது

மன்னா! நான் அடித்தாலும் நான் கூப்பிட்டவுடன் ஓடிவருகிறதே இதுதான் எனது விசுவாசமிக்க நண்பன்" என்றான் இளைஞன்.

இளைஞனின் புத்திசாலித்தனமும் பண்பட்ட நடைமுறையும் மன்னனைப் பெரிதும் கவர  இவ்வளவு திறமைகளை யாரிடம் கற்றாய் எனக்கேட்டார்

எல்லாமே என்தந்தையிடமிருந்து தான் மன்னா!
எனக்கு குரு வழிகாட்டி எல்லாமே அவர்தான் என 
 உருக்கமுடன் கூறினான்

மனம் நெகிழ்ந்த மன்னன் நாளை உன் தந்தையை அழைத்து வா என்றான்.

மறுநாள் வந்த தந்தையிடம் அரசியல் தொடர்பான சில கேள்விகளைக் கேட்டு தனது ஆலோசகராக நியமித்ததுடன் முதியவர்களை கொலை செய்யும் ஆணையையும் நீக்கியதுடன் இளைஞனுக்கும் பல வெகுமதிகளையும் வழங்கினான்.

நீதி: தந்தை ஒரு குடும்பத்தினருக்கு க் கிடைத்த பொக்கிஷம். அவர் அனுபவத்தின் பல்கலைகழகம்.
தன் தந்தையின் ஆலோசனைப் படி நடந்த காரணத்தினால் அந்த இளைஞன் உயர்வு பெற்றான்

தந்தை முதியவர் என்பதற்காகப் புறக்கணிக்காதீர்.
அவரிடம் உங்கள் பிரச்சினையைப் பேசிப்பாருங்கள் நீங்கள் எதிர்பார்க்காத  பல யுக்திகள்  
உங்களுக்குக் கிடைக்கும்.
பெற்றோர்களைப் பேணுங்கள்

குர்ஆன் கூறுகிறது

 உங்களது இறைவன் தன்னைத் தவிர மற்றெவரையும் வணங்கக்கூடாதென்று கட்டளையிட்டி ருப்பதுடன்
 தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் 
கட்டளை யிட்டிருக்கிறான்.
 உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!
(அல்குர்ஆன் : 17: 23,24)

-----அரபு இணைய தளத்திலிருந்து
கணியூர் இஸ்மாயில் நாஜி மன்பயி

Friday, June 4, 2021

கிராமவாசிகளின் மதிநுட்பம்

கிராமவாசிகளின் மதிநுட்பம் 1
_________&

  அரபு கிராமவாசி ஒருவர் #அப்துல்லாஹ் என்ற பெயரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக மூன்று மகன்களுக்கும் #அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்

ஒருநாள் அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணப்படுக்கையில் மூன்று அப்துல்லாவையும் கூப்பிட்டு அப்துல்லாஹ் வாரிசாவார் அப்துல்லாஹ் வாரிசாக மாட்டார் அப்துல்லாஹ் வாரிசாவார் எனச் சொல்லியவாறு மரணம் அடைந்து விட்டார்

இறுதி சடங்குகள் முடிந்த பின் எந்த அப்துல்லாஹ் வாரிசாக மாட்டார் எந்த அப்துல்லாஹ் வாரிசாவார் என்ற குழப்பம் அவர்களிடையே எழுந்தது 

இது தொடர்பாக நகர நீதிபதி-காழி யிடம் சென்று பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று புறப்பட்டார்கள் 

 வழியில்  வியாபாரி  ஒருவர் அவர்களைத் தடுத்து என் ஒட்டகம் ஒன்றைக் காணவில்லை நீங்கள் பார்த்தீர்களா? எனக் கேட்டார் 
அதற்கு முதலாம் அப்துல்லாஹ், அதற்கு ஒரு கண்ஊனமாக எனக் கேட்டான் 
ஆமாம் ஒரு கண் தெரியாது என்றார வியாபாரி
இரண்டாம் அப்துல்லாஹ் அதற்கு ஒரு கால் ஊனமா எனக் கேட்டான்
ஆமாம் ஆமாம் சரிதான் அது நொண்டி நொண்டி நடக்கும் என்று சொன்னான் வியாபாரி 
மூன்றாம் அப்துல்லாஹ் அதனுடைய வால் துண்டிக்கப்பட்டு இருந்ததா எனக் கேட்டான்
வியாபாரி மகிழ்ச்சியுடன் ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்கிற அதே ஒட்டகம் தான் எங்கே பார்த்தீர்கள்? என்று கேட்டான் மூவரும் கோரசாக நாங்கள் பார்க்கவே இல்லை என்றார்கள்

வியாபாரிக்கு ஆத்திரம் பீறிட்டு வந்தது ஒட்டகத்தின் உடைய அங்க அவயங்களைச் சரியா சொல்கிறீர்கள் ஆனால் பார்க்கவில்லை என்கிறீர்கள்
நீங்கள் தான் அதை அறுத்து சாப்பிட்டு விட்டீர்கள் வாருங்கள் நகர நீதிபதியிடம் சென்று இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் எனச்சொல்ல அங்கே தான் நாங்களும் போகிறோம் வாருங்கள் போகலாம் என்று
மூன்று பேரும் அந்த வியாபாரியுடன் நீதிபதியிடம் வந்தனர்.

நீதிபதி முதலில் வியாபாரியின் முறையீட்டைக் கேட்க
வியாபாரி இவர்கள் என் ஒட்டகத்தின் அங்க அடையாளங்களைச் சரியாகச் சொல்கிறார்கள் ஆனால் நாங்கள் பார்க்கவில்லை என்கிறார்கள் இவர்கள் பொய் சொல்கிறார்கள் விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்குங்கள் என்றான்

முதலாவது அப்தல்லாஹ்விடம் அந்த ஒட்டகம் கண் ஊனம் என்று அதைப் பார்க்காமல் எவ்வாறு சொன்னாய்?என வினவினார் நீதிபதி

 நான் அதைப் பார்க்கவில்லை ஆனால் நாங்கள் வருகின்ற பாதையில் இருபுறமும் புல் பூண்டுகள் முளைத்து இருக்க ஒரு பக்கம் மட்டும் அந்த ஒட்டகம் மேய்ந்து இருப்பதை நாங்கள் பார்த்தோம் எனவே அதற்கு ஒரு கண் ஊனம் என யூகித்தேன்.
ஆனால் நான் பார்க்கவில்லை எனச் சொன்னான்

இரண்டாம் அப்துல்லாவிடம் கேட்டபோது நானும் பார்க்கவில்லை. ஒட்டகத்தின் காலடிகள் அழுத்தமாக மணலில் பதிந்திருக்கும்
ஆனால் இதனுடைய காலடிகளில் ஒன்று சரியாக பதியாமல் இருந்தது அதனால் ஒரு கால் ஊனமென ஊகித்தேன் என்றான்

முன்றாம் அப்துல்லாஹ்வும் நானும் பார்க்கவில்லை ஆனால் அதனுடைய புளுக்கையைப்பார்த்தேன் 
ஒட்டகம் புழுக்கை போடும்போது வலை ஆட்டிக்கொண்டே இருக்கும் அதனால்  புழுக்கைகள் குவியலாக ஒரே இடத்தில் விழாமல்  பரவலாக சிதறிக்கிடக்கும்  ஆ னால் இந்த ஒட்டகம் போட்ட புழுக்கைகள் குவியலாக ஒரே இடத்த்தில் இருந்ததால் அதனுடைய வால் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என ஊகித்தேன்  என்றான் 

அவர்களின் மதிநுட்பத்தை கண்டு வியந்த நீதிபதி
இவர்கள் உண்மையைத்தான்  சொல்லுகிறார்கள் அவர்கள் ஒட்டத்தைப் பார்க்கவில்லை நீ போய் வேறு இடத்தில் தேடிப் பார் என்று அந்த வியாபாரியை  அனுப்பிவிட்டார்

 பின் உங்களுடைய வழக்கு என்ன என்று கேட்டார் இவர்கள் தங்களுடைய  பிரச்சனையை சொல்லி எங்களில் யார் யார் வாரிசு என்று நீங்கள் தீர்ப்பளியுங்கள் என்றனர்

  வழக்கைக் கேட்டவுடன் நீதிபதிக்கு  ஒரு கணம் தலை சுற்றிவிட்டது இதுவரை அவர் எதிர்   கொண்ட வழக்குகளில் இதுபோன்ற வழக்கைக் கேள்விப்பட்டதே இல்லை

  "நீங்கள் இந்த இரவு எனது விருந்தினர் விடுதியில் தங்குங்கள்  நாளை  உங்களுக்கு நான் தீர்ப்பு அளிக்கிறேன் என்று அவர்களை அனுப்பி விட்டு,
காவலாளியை அழைத்து விருந்தினர் மாளிகைக்குச் சென்று ரகசியமாக அவர்களை கண்காணித்து என்ன  நடந்தது என்பதை என்னிடம்சொல் என்று அனுப்பிவைத்தான்.
கிராமவாசிகளின்  மதிநுட்பம் (தொடர்ச்சி)

இன்றிரவு என் விருந்தினர் மாளிகையில் தங்குங்கள்.
நாளை உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறேன் என்ற நீதிபதி அவர்கள் சென்ற பின்  காவலாளியை அழைத்து அவர்களைப் பின் தொடர்ந்து செல் விருந்தினர் மாளிகையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ரகசியமாக கண்காணித்து என்னிடம் சொல் என உத்தரவிட்டார்.

மாளிகைக்கு சென்ற மூவரும் தாங்கள் கண்காணிக்கப் படுகிறோம் என்பதை உணர்ந்துக் கொண்டார்கள். . இரவு உணவாக ரொட்டியும்  இறைச்சியும் பரிமாறப்பட்டது

  இறைச்சி த்துண்டை எடுத்து ஒருவன்  சொன்னான் :  இது நாய்க்கறி(இறைச்சி) 

மற்றொரு வன் சொன்னான் : இந்த ரொட்டியை நிறைமாத கர்ப்பிணி தயாரித்து இருக்கிறாள் 

இன்னொருவன்  சொன்னான்: இந்த நீதிபதி முறை தவறி பிறந்தவர் 

இவர்கள் பேசிக் கொண்டிருந்தததை செவி மெடுத்த காவலாளி  மறுநாள் நீதிபதியிடம் சென்று நடந்ததைச் சொன்னான்

நீதிபதி  அவர்கள் மூவரையும் வரவழைத்து 
 நாய்க்கறி என்று சொன்னவன் யார் என்க
 நான்தான் என்றான் முதலாம் அப்துல்லாஹ் 
எவ்வாறு சொன்னாய் என்று கேட்டார். 

பொதுவாக, ஆடு, , ஒட்டகம் போன்ற இறைச்சிகளில் கொழுப்பு எலும்புக்கு கீழே இருக்கும். நாய் இறைச்சியில் மட்டும் தான் கொழுப்பு எலும்புக்கு மேலே இருக்கும். அதை வைத்து நான் நாய்க்கறி என்று சொன்னேன் என்றான்.

அதை கேட்டு மகிழ்ந்த காஜி உன் தந்தைக்கு நீ வாரிசு ஆவாய் என்றார்

ரொட்டியை நிறைமாத கர்ப்பிணி தயாரித்ததாக சொன்னவன் யார் என்று கேட்டார். இரண்டாம் அப்துல்லாஹ் நான் தான் என்க
எவ்வாறு சொன்னாய் என்று வினவினார். 

நான் ரொட்டியை எடுத்துப் பார்த்தேன். அது ஒரு பக்கம் உப்பலாகவும் மறுபக்கம் தட்டையாகவும் இருந்தது. அதை தயாரித்தவள் வயிறு பெரிதாக இருந்த காரணத்தால் நெருப்பின் அனலுக்குப் பயந்து  அடுப்புக்கு அருகே சென்று  குனிந்து அதை சரியாக  பிரட்டி ப் போட முடியாததால் அவ்வாறு அரைகுறை யாக வெந்து  இருக்கிறது என்று யூகித்தேன்  என்றான்.
அதை கேட்ட நீதிபதி உற்சாகத்துடன் நீயும் வாரிசு ஆவாய் என்றார்.

மூன்றாம் அப்துல்லாஹ்விடம் கேட்பதற்கு முன்னால் வீட்டிற்குள் சென்று தன தாயாரிடம் உறுதிபடுத்திவிட்டு வந்தவர் என்னை முறைதவறி பிறந்தவன் என்று எவ்வாறு சொன்னாய்  என அவனிடம்  கேட்டார். 

 விருந்தாளிகளுக்கு நாய் இறைச்சியையும், வேகாத ரொட்டியையும் பரிமாரியதுடன் அவர்களை ரகசியமாக கண்காணிக்கச் சொன்னவன் ஒரு நீதிபதி  குடும்பத்தை சேர்ந்தவனாக இருக்க முடியாது என யூகித்தேன் . எனவே தான்  நான் அவ்வாறு சொன்னேன் என்றான்.

நீ சொன்னது சரிதான் என்று சொன்ன நீதிபதி உன் தந்தைக்கு நீ வாரிசுஆக மாட்டாய் என்று தீர்ப்பளித்தார்
எவ்வாறு அவ்விதம் சொல்கிறீர்கள் என்று இவன் கேட்க. முறை தவறி பிறந்தவனுக்கு தான் மற்றவனை முறை தவறி பிறந்தவன் என்று எண்ணத்தோன்றும். 
எனவே, நீ உன் தந்தைக்கு பிறந்திருக்க முடியாது, ஊருக்கு சென்று உன் தாயிடம் கேட்டுப் பார் என்று அனுப்பிவைத்தார்

அவர்கள் மூவரும் கிராமத்திற்கு திரும்பிச் சென்று தாயாரிடம் நடந்ததை கூறினார்கள்.

நீதிபதி சொன்னது சரிதான் என்ற  தாய்,    
உங்கள் தந்தை பள்ளிவாசலுக்கு தொழச் சென்றிருந்போது வாசலில் பச்சிளம் குழந்தையாக அழுதுக் கொண்டிருந்தவனை எடுத்து வந்து நாங்கள் எங்கள் பிள்ளையைப் போன்று வளர்த்தோம்  அவன் தான் மூன்றாவது அப்துல்லாஹ் என்றார். 

கிராமத்து அரபுகள் மிகவும் மதி நுட்பம் உடையவர்களாகவும் ஊகித்தறியும் திறன் உள்ளவர்களாகவும்  இருந்தார்கள் என்பதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதில், இதுவும் ஒன்று.
-------கணியூர் இஸ்மாயில் நாஜி


Wednesday, May 26, 2021

மஸ்ஜித் இமாம் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு மஸ்ஜித் இமாம் எப்படி இருக்கவேண்டும்?
----
 இமாமத் என்பது ஒரு பதவி அல்ல அது ஒரு பொறுப்பு
இப்பொழுது எல்லோருமே  -ஆலிம் பட்டம் பெறாதவர்களும்  இமாமாக நின்று தொழவைக்கிறார்கள்
அது தவறல்ல

ஆனால் தொழுகையின் பர்ளு,வாஜிப் களை அறிந்திருக்கவேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனை.

ஆனால் ஒரு மஸ்ஜிதின் இமாமாக இருப்பவருக்கு கூடுதல் பொறுப்புண்டு.

அவர் தொழுகை கூடினால்தான் அவரை பின்பற்றி தொழுபவர்களின் தொழுகையும் கூடும். அவரின் தொழுகை நிறைவேறவில்லை  என்றால் அனைவரின் தொழுகையும் நிறை வேறாமல் போன பாவம் அவரைச் சேரும்.
எனவே, அவர் தன் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்,சிறுநீர் கழிக்கும் போதோ,அதன் பின்னரோ ஓரிரு துளிகள் ஆடையில் படாமல் கவனமாக இருக்கவேண்டும் ,

வுழுவும் பரிபூரணமான முறையில் கவனமுடன் செய்யவேண்டும்.
இந்த சட்டம் தொழுபவர்கள் அனைவருக்குமானது என்றாலும் தனிமனித தவறு அவனுடன் போகும்.

ஒரு இமாம் செய்யும் தவறு அவரைப் பின்பற்றித் தொழும் அனைவரையும் பாதிக்கும்.

நான் லால்பேட்டையில் 1964-67ல் ஓதும்போது சோழமாதேவியிலிருந்து ஒருவர் பத்து கேள்விகள் எழுதி இதற்கு பத்வா கொடுங்கள் என  கேட்டிருந்தார்.
அத்தனை கேள்வியும் இமாமைப் பற்றியே இருந்தது
பாவம் அந்த இமாமின் மீது அவருக்கு என்ன கோபமோ?
அதில் இரண்டு கேள்விகள் நினைவில் இருக்கிறது.

ஓன்று,எங்கள் இமாம் மொட்டைஅடிக்காமல் கிராப் வைத்திருக்கிறார் இது கூடுமா?

இரண்டு ,இமாம் சிறுநீர் கழித்துவிட்டு டேலா கட்டி உபயோகிக்காமல் வெறும் தண்ணீரை மட்டுமே உபயோகிக்கிறார் இது கூடுமா?

அக்காலத்தில் மண்ணைக் குழைத்து வட்டவட்ட மாக வரட்டி தட்டுவது போல் செய்து வைத்திருப்பார்கள்
அது சிறு துளிகளை உறுஞ்சிவிடும்.
வயோதிகர்கள் அந்த டேலக்கட்டியை வைத்துக் கொண்டு சிறுது நேரம் எழுந்து நின்றோ, சிறிது நேரம் நடந்த பின்தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வார்கள்.
இதைப் போன்று அந்த இமாம் செய்வதில்லை என்பதே குற்றச்சாட்டு.

டேலா கட்டியை கட்டாயம் உபயோகிக்கவேண்டிய அவசியமில்லை.
எனினும் இமாம் பேணுதலுக்காக இரண்டையும் உபயோகிப்பது விருப்பத் தக்கது என பதில் தரப்பட்டது.

இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் பொதுமக்கள் இமாமுடைய செயல்களை கூர்மையாக அவதானிக்கிறார்கள்.
இமாமிடம் என்ன குறை இருக்கிறது என்று ஆராய்வதற்காகவே ஒவ்வொரு மஹல்லா விலும் இரண்டு பேர் இருப்பார்கள்.
இமாம்கள் அல்லாஹ்விற்கு பயந்துதான் 
தொழுக வைப்பதற்கு தயாராகிறார்கள்.

இமாம் என்ற பொறுப்பை  பொது மக்கள் பலரும் அலட்சிமாக நினைக்கிறார்கள்.
அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றுவதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது இமாம்களுக்குத்தான் தெரியும்.

 குறிப்பு :நான் இமாமாக பணியற்றியது இல்லை.
வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான்  தொண்டியில் ஏழு வக்துகள் தொடர்ச்சியாக இமாமத் செய்துள்ளேன்.

அதன்பின்  அந்தப் பக்கமே போனதில்லை.
----கணியூர் இஸ்மாயீல் நாஜி

Monday, May 24, 2021

அடி உதவுவதுபோல்

Kaniyur Ismail Najee Manbayee 

இரண்டாம் கலிபா அமீருல் முஃமீனின் உமர் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்  ஆட்சி காலத்தில் “ஸுபய்க்” என்ற ஒரு மனிதர் இருந்தார்.
“தாரியாத்” என்ற அத்தியாயத்திற்கு நூதனமான விளக்கங்களை கூறி ஈராக் பகுதி முழுவதும் சுற்றி வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.
 விதவிதமான அவருடைய விளக்கத்தை கேட்டு முஸ்லிம்கள் மத்தியிலே தவறான எண்ணங்களும் கொள்கை குழப்பங்களும் ஏற்பட்டன.
மக்கள் பலவாறு எடுத்துக் கூறியும் அவர் தனது பரப்புரையை நிறுத்தவில்லை. இறுதியில், அப்பகுதியின் அதிகாரி அவரை கைது செய்து ஒரு தூதுவரின் துணையுடன் மதினாவிற்கு அனுப்பி வைத்தார்.

கலீபா விற்கு அந்த அதிகாரி எழுதிய கடிதத்தில் இந்த மனிதரின் பரப்புரையினால் வெகுஜன மக்களிடையே பெரிய குழப்பமும் கருத்து வேற்றுமையும் ஏற்பட்டிருக்கிறது இவரை விசாரியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தை படித்த கலீபா அந்த குற்றவாளியை அழைத்து விசாரித்து அவருடைய கருத்து தவறு என்பதை உணர்த்தினா்கள்
ஆனால், அவர் திரும்ப திரும்ப தனது கருத்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். பொறுமையை இழந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது சாட்டையை வரவழைத்து அவரை அடிக்க ஆரம்பித்தார்.
ரத்தம் பெருக்கெடுத்து ஓட வலி தாங்க முடியாமல் அம்மனிதர் சத்தமிட்டு,

“"قذ ذهب الذي كنت أجده في راسي
 
( ألاصابه لابن حجر)
"என் மண்டையில் எதை ஏற்றி வைத்திருந்தேனோ அது போய் விட்டது” என கத்தினார்.

அதற்கு மேல் தண்டிக்காமல் கலீபா அவர்கள், அவரை விடுவித்து விட்டார்.

அம்மனிதர் அதன் பின் வாழ்நாள் முழுதும் அந்த பேச்சையே எடுக்கவில்லை.

சில நேரங்களில், ஆதாரங்களை காட்டி பேசுவது பலனளிப்பதில்லை.
சாட்டை வழியாக பேசுவது பலனளிப்பதாக இருக்கிறது.

உண்மை என்னவென்றால், பயம் இல்லாத மனப்பாங்கு தான் பல தவறுகளுக்கு வழி வகுக்கிறது. மனிதனுக்கு தண்டனை கிடைக்கும் என்ற பயம் இருக்குமேயானால், அவன் நேர்மையாக நடக்க முயற்சிப்பான்.
பயம் ஒரு மனிதனை நிதானமாக சிந்திக்க செய்கிறது.
நிதானமாக சிந்திப்பவன் தவறு செய்ய துணிய மாட்டான்.
தேவையில்லாத பேச்சுகளை பேச மாட்டான்.
பயம் மனிதனை திருத்தும் ஒரு கருவி.

                                                      
 _மவ்லானா வஹீதுத் தீன் கான் அவர்களின் “அர்ரிஸாலா” என்ற மாத இதழிலிருந்து.. (ஜனவரி 1983)
- தமிழில் கணியூர் இஸ்மாயில் நாஜி ஃபாஜில்மன்பஈ

Saturday, May 15, 2021

துக்கம் விசாரிக்கும் போது என்ன சொல்ல வேண்டும்

துக்கம் விசாரிக்கும் போது என்ன சொல்லவேண்டும்
------------------------------------------------------------==-----
என்னுடைய inபாக்ஸில் ஒரு சகோதரர் 
عظم الله أجركم وأحسن عزاءكم وغفر لميتكم
என்ற இந்த துஆ விற்கு என்ன பொருள்எனக்  கேட்டிருக்கிறார்.

அல்லாஹ் உங்களின் கூ லி யை அதிகமாக் குவானாக 
உங்களின் பொறுமையை அழகாக்குவானாக 
உங்களின் மய்யித்தை அல்லாஹ் மன்னிப்பானாக 
என்பது பொருள் 
முஸ்லீம் மவ்தாகி விட்டால் அவரின் குடும்பத்தாரிடம் துக்கம் விசாரிப்பது நபி வழி மட்டுமின்றி ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லிமிற்  கு செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாகும் 
அவ்வாறு துக்கம் விசாரிக்கும் போது என்ன  சொல்லவேண்டும் என்பதற்கு பல பெரியார்கள் பல்வேறு  வாக்கியங்களை சொல்லியுள்ளார்கள் .அதில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது 
ஆனால் நபி சல்லல் லாஹு அலைஹிவ ஸல் லம்  அவர்கள் தமது மகள் ஜைனப்(ரழி) அவர்களுக்கு சொன்ன ஆறுதல்   வார்த்தைகள் சிறப்பானது 
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ ، وَلَهُ مَا أَعْطَى ، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى ، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ) رواه البخاري (1284) ، ومسلم (923) . 
எதை எடுத்தானோ அது அல்லாஹ்விற்கே சொந்தம் ,எதை கொடுத்தானோ அதுவும் அவனுக்கே. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு
எனவே பொறுமையாக இரு அதற்குரிய நன்மையை எதிர்பார்த்திரு.
புகாரி ,முஸ்லீம்
    மீள் பதிவு கணியூர் நாஜி

Thursday, May 13, 2021

படித்ததினால் மட்டும் பண்பு வந்திடுமா?

ஒரு முறை லால்பேட்டை மதரஸாவில் ஒரு மாணவர் திருடிவிட்டார் 
மதரஸா நிர்வாகிகளில் ஒருவர் ஓதரபிள்ளை திருடானாக இருக்கிறாரே என்றார் 

அதற்கு எங்கள் உஸ்தாத் அமானி ஹஜரத்(ரஹ்) அவர்கள் ஓதரபிள்ளை திருடனாக இருக்கிறார் எனச் சொல்லாதீங்க திருடுபவன் ஓத வந்திருக்கிறான் எனச்சொல்லுங்கள் எனறார்கள்.

  அவ்வாறே  மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லுபவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்களே எனச் சொல்லாதீர்கள். கீழ்த்தரமான குணமுடையவர்கள் அறிவுரை சொல்லும் இடத்திற்கு வந்துவிட்டார்களே என வேதனைப் படுங்கள்.

 டாக்டர். மு.வரதாசன். அவர்கள் ஒரு நாவலில் "படித்தவர்கள் பாவம் செய்கிறார்களே 
அவர்களின் படிப்பு அவர்களுக்கு பயன் தரவில்லையா?" என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் சொல்வார்:
     "படிப்பு என்பது ஒளி தரும் விளக்கைப் போன்றது. விளக்கு இருட்டான ஒரு அறையில் இருக்கும் குப்பைகளை காட்டுமே தவிர, விளக்கே குப்பைகளை நீக்காது.  படிப்பும் அப்படித்தான்,கற்ற கல்வி நம் உள்ளத்தில் உள்ள அழுக்கை சுட்டிக்காட்டும் நாம் தான் அழுக்கை நீக்கவேண்டும்"

எனவே படித்துவிட்டகாரணத்தினாலேயே அவர்கள் பரிசுத்தமானவர்களாக மாட்டார்கள்
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில்மன்பயீ

Tuesday, March 30, 2021

சகோதரர்களுக்காக துவா செய்வோம்

சகோதரர்களுக்காக துஆ செய்யுங்கள்
உங்கள் தேவையும் நிறைவேறும்

---------------------=--=----=============------
عْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ۗ وَاللَّهُ
 يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ  ﴿47:19﴾
47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - மேலும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ  ﴿59:10﴾
59:10. அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:,
"தன் கண்முன் இல்லாத தன் சகோதரருக்காக ஒருவர் செய்யும் துஆ ஏற்றுக்  கொள்ளப்படும். துஆ செய்பவரின் தலைக்கு மேல் ஒரு மலக்கு நியமிக்கப்படுவார்,தன் சகோதரருக்காக நல்லவற்றை கேட்கும் பொழுதெல்லாம் அம்மலக்கு உனக்கு அதே போன்று கிடைக்கட்டும் என்று துஆ செய்வார்"
நூல் முஸ்லிம்
இந்த ஹதீஸிற்கு விரிவுரை எழுதிய இமாம் நவவி குறிப்பிடுகிறார்கள்.

சில பெரியார்கள் தங்களுக்கு ஒரு தேவை ஏற்படும் போது அதே தேவையுடைய ஒரு சகோதரருக்காக துஆ செய்வார்கள் அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் இவருடைய தேவையும் நிறை வேறிவிடும்
 ::_கணியூர் இஸ்மாயில் நாஜி

Tuesday, March 16, 2021

ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பலன்கள்

مكتبة الأناشيد الإسلامية🎤:
هل تعلم ماذا يحدث عندما تصلي على النبي ؟؟
اللهم صل وسلم علي نبينا محمد
عجائب الصلاة على الرسول الكريم

1_ يرد عليك الحبيب
2_ تنزل عليك عشر رحمات بكل صلاة
3_ تنال شفاعة الرسول يوم القيامة
4_ يشرق نور من قلبك لينير وجهك
5_تشعر بلذة وسكينة وسعادة 
حتى لو مشغول إرسلها من باب التذكير 
( اللهمـ صل وسلم على نبينا محمد)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்வதால் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
--------=======----------------------------------------
1, நமது பாசத்திற்குறிய நபி அவர்கள் அதற்கு பதிலளிக்கிறார்கள்

2,  உங்கள் மீது ஒவ்வொரு ஸலாத்திற்கும்
பத்து ரஹ்மத்கள் இறங்குகின்றன.

3, கியாமத் நாளில் அண்ணலாரின்
ஷபாஅத் கிடைக்கும்

4, உங்கள் உள்ளத்தில் ஒளி ஏற்படும் 
அதன் பிரதிபலிப்பு உங்கள் முகத்தில் தெரியும்.

5,  ஸலவாத்தை சொல்ல சொல்ல  இன்பமும்,மனஅமைதியும்,மகிழ்ச்சியும் ஏற்படும்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

 ------தமிழாக்கம் கணியூர் நாஜி

Friday, March 5, 2021

நிகாஹ் நாமா

நிகாஹ்நாமா எனும்
திருமண ஒப்பந்தப் பதிவேடும்
மணமகள் இடும் நிபந்தனைகளை பதிவு செய்தலும் ....
------------------------------------------------
.நிக்காஹ் என்பது இஸ்லாத்தில் வாழ்க்கை ஒப்பந்தமாகும். ஒப்பந்தம் எனும் போதே ஒப்பந்தம் செய்யும் இரு சாராரும் தங்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சில நிபந்தனைகள் இடுவார்கள்.

அதே போன்று, நிக்காஹ்வில் மணமகனும், மணமகளும் மணவாழ்க்கையில் ஒருவர் மற்றவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை இடுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

உரிமைகள் பொறுத்த வரையில், பெண்களுக்கு கடமைகள் உள்ள அளவிற்கு உரிமைகளும் உண்டு. (அல்குர்ஆன் – 22:28).

.எனினும், இஸ்லாம் ஆணுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கியுள்ளது. குறிப்பாக, இஸ்லாத்தை பொறுத்த வரை குடும்பத்தை பாரமரிக்கின்ற பொறுப்பு ஆணுக்கே சேரும். (அல்குர்ஆன்-4:34).என்ற அடிப்படையில் உடலாலும், பொருளாலும் இரு மனைவிகளை நீதமுடன் நிர்வகிக்கும் ஆற்றல் இருந்தால் நான்கு பெண்கள் வரை மணந்துக் கொள்ளும் சலுகை உண்டு.

இரண்டு , மனைவியுடன் வாழ விருப்பமில்லையென்றால், மூன்று முறை கால இடைவெளியில் தலாக் விடும் உரிமையும் உண்டு.

இந்த சிறப்பு சலுகையை தற்காலத்தில் பலர் முறை தவறா கப் பயன்படுத்துகிறார்கள் எனவே, திருமண ஒப்பந்தத்தின் போதே ஒரு பெண், தன்னுடைய வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கத்துடன் இது தொடர்பான சில நிபந்தனைகளை நிக்காஹ் ஒப்பந்தத்தில் இணைப்பதற்கு உரிமையுண்டா என்பது தான் கேள்வி.

.இது தொடர்பாக, ஃபுகஹாக்கள் எனப்படும் ஷரியத் சட்ட அறிஞர் பெருமக்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் உண்டு. நீண்ட விவாதங்களும் நடைபெற்று வருகின்றன

.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :“ நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்படவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.”

இமாம் புஹாரி அவர்கள், “ திருமணத்தில் முன் நிபந்தனைகள்” என்ற தலைப்பில் இந்த ஹதீஸை (ஹதீஸ் எண் : 2721, 5151) பதிவிட்டிருக்கிறார்கள்.இமாம் முஸ்லிம் அவர்கள், “திருமணத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றல்” என்ற தலைப்பில் இந்த ஹதீஸை (ஹதீஸ் எண் : 2772) பதிவிட்டிருக்கிறார்கள்.

புஹாரி ஷரீஃபின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரியில் இந்த ஹதீஸின் (ஹதீஸ் எண் : 5151) விரிவுரையில் கீழ்கண்ட சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து, தான் திருமணம் செய்து கொண்ட போது தன்னுடைய மனைவி அவளுடைய வீட்டிலேயே தங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டாள் என்றும், இப்போது வேறோர் இடத்திற்கு செல்ல தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.அதற்கு, “அவளுக்கு அவளுடைய நிபந்தனை உண்டு” என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். அதற்கவர், அப்படியானால், ஆண்கள் அழிந்தார்கள்.ஏனெனில், திருமணத்தின் போதே முன் நிபந்தனையிட்ட ஒரு பெண் தான் விரும்பும் போதே கணவனிடமிருந்து விவாக விலக்கு பெற எண்ணுவாள்.(கணவன், தான் விரும்பும் போது விவாக பந்தத்தை விலக்கிக் கொள்ள முடியாது) என்று தெரிவித்தார்.“ நிபந்தனைகள் விதிக்கப்படும் போது உரிமைகள் துண்டிக்கப்படுகின்றன. நீ எதனை நிபந்தனையிட்டயோ அது உனக்கு உண்டு” என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களும், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களும், மணப்பெண் நிபந்தனை விதிப்பது கூடும் எனவும் அந்த நிபந்தனையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அதை நிறைவேற்றுவது கடமை எனவும் கூறியுள்ளார்கள்.

வாழ்க்கை ஒப்பந்த பதிவுகளில், மணமகன், மணமகள் சார்பில் விதிக்கப்படும் நிபந்தனைகள் பதிவு செய்யப்படா விட்டாலும் தனிப்பட்ட முறையில் இரண்டு குடும்பத்தாரும் சில நிபந்தனைகளை தங்களுக்குள் எழுதி வைத்துக் கொள்கிறார்கள்.

உதாரணமாக, திருமணத்திற்கு பின்னும் மணப்பெண் மேற்படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும், பணிபுரிய அனுமதிக்க வேண்டும், மணமகன் மணப்பெண் வீட்டிலேயே தங்கி விட வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.

ஆண்களும்சில நிபந்தனைகளை விதிக்கிறார்கள்
இவையெல்லாம் பெரும்பாலும் பொருளாதரத்தை சார்ந்த தாகாவே இருக்கும்.

ஆனால் ஒரு பெண் மணவாழ்க்கையில் மனதளவில் பாதிக்கப்ப டும் விடயங்களைப்பற்றி முன்னதாக பேசப்படுவதில்லை.
அவைகள் என்ன என்பதை நாளை பார்ப்போம்
இன்ஷா அல்லாஹ் .

-----நீண்ட பதிவுகள் வேண்டாம். படிக்க சிரமமாக இருப்பதாக சில சகோதரர்கள் சொல்கிறார்கள்
எனவே சுருக்கமாகவே எழுதுகிறேன்.

Wednesday, March 3, 2021

நாவண்மை மிக்க சிராஜுல்மில்லத்

நாவண்மை மிக்க சமுதாய தலைவர் சிராஜூல்மில்லத் A.K.A அப்துஸ்ஸமது  ஸாஹிப் 
 ***************************************
நான் இளம் வயதிலிருந்தே அரசியல், ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவுகளை கேட்பதில் ஆர்வம் உடையவன். 
தமிழகத்தின் மிக பிரபல்யமான அத்தனை சொற்பொழிவாளர்களின் பேச்சையும் கேட்டிருக்கிறேன்.
காங்கிரஸ் இயக்கத்தை சார்ந்த என் தந்தை முஹம்மது யாக்கூப் வாத்தியார் எங்கள் ஊரில் எந்த கட்சியின் கூட்டம் நடந்தாலும் என்னை அழைத்து செல்வார். நமக்கு பிடித்திருந்தாலும் பிடித்திராவிட்டாலும் எல்லாருடைய பேச்சையும் கேட்க வேண்டும்.
அப்பொழுது தான் விசாலமான சிந்தனையும் ஆழ்ந்த பொது அறிவும் நமக்கு கிடைக்கும் என்பார். என் தந்தையுடன் நான் இறுதியாக கலந்துக் கொண்ட கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவரான பி.ராமமூர்த்தியின் கூட்டமாகும்.

நான் லால்பேட்டையில் ஓதுகின்ற பொழுது நமது சமுதாயத்தின் மிக சிறந்த பேச்சாளர்களின் கூட்டம் லால்பேட்டையில் அதிகமாக நடைபெறும்.அதில் பெரும்பாலானோர் மதரஸாவில் தான் தங்குவார்கள். அப்பொழுது அவர்களுக்கு அருகில் இருந்து பணிவிடை செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன். 
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மரியாதைக்குரிய தலைவர் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள், பன்மொழி புலவர் அப்துல் லத்தீஃப் ஸாஹிப், நாவலர் ஏ.எம்.யூஸுப் ஸாஹிப், சொல்லின் செல்வர் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது ஸாஹிப், திருப்பூர் மைதீன்  ஸாஹிப் ஆகியோரின் பேச்சுக்களை மிகவும் ரசித்து கேட்பவன் நான்.
அவர்களில் முதலில் பேச்சாளர் என்ற முறையில் நான் தலைவர் அப்து ஸ்ஸமது ஸாஹிப் அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அவர்களை முதன்முதலில் 1966 ஆம் ஆண்டு லால்பேட்டையில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு காயிதே மில்லத் அவர்களுடன்  வந்திருந்த பொழுது சந்தித்தேன்.
அன்று வெள்ளிக்கிழமை. காயிதே மில்லத் அவர்கள் ஜும்ஆவில் பயான் செய்வார்கள் என்று அறிவிக்குமாறு என்னை மவ்லானா இக்லீல் அவர்கள்  ஏவினார்கள் .
நான் ஒலிபெருக்கியில் இன்று ஜும்ஆவில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்கள் உரையாற்றுகிறார்கள். எனவே, அனைவரும் சீக்கிரம் வாருங்கள்.சீக்கிரம் வாருங்கள் என்று திரும்ப திரும்ப கூறி கொண்டிருந்தேன்.
அப்பொழுது ஒரு மாணவர் என்னிடத்தில் வந்து ஸமது பாய் உன்னை கூப்பிடுகிறார் என்று சொன்னார்.
நான் அவரிடம் சென்ற பொழுது தலைவர் அவர்களை காயிதே மில்லத் என்று சொன்னால் போதாதா? மக்களுக்கு அவரைப் பற்றி தெரியாதா? ஏன் தேவையில்லாமல் அவர் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறாய்.
பெரியவர்களின் பெயரை தேவையில்லாமல் சொல்லக்கூடாது என்று என்னை  கண்டித்தார். அவர்கள் எங்கு  சொற்பொழிவு ஆற்றினாலும் அங்கு சென்று ஆர்வத்துடன் கேட்பேன்.
அந்தாண்டில் (1967) நடைபெற்ற எனது ஃபாஜில் பட்டமளிப்பு விழாவில் காயிதே மில்லத் அவர்களும் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது ஸாஹிப், திருப்பூர் மைதீன்  ஸாஹிப் அவர்களும் சிராஜி மில்லத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
உரத்த குரலில் உணர்சிகரமாக பேசும் திருப்பூர் மைதீன் அவர்கள் பேசும் பொழுது எங்களை நோக்கி “பட்டம் பெரும் நீங்கள் எங்கும் யாரிடத்திலும் உண்மையை சொல்ல தயங்க கூடாது. நீங்கள் பணி புரியும் பள்ளியின் நிர்வாகி வட்டி வாங்குகிறார் என்றால் அதை சொல்வதை விட்டுவிட்டு மவ்லாய ஸல்லி வஸல் என்று வேறு பைத்துகளை பாடி விட்டு உண்மையை சொல்லாமல் சும்மா இருந்து விடக் கூடாது” என்று பேசினார்.
அதற்கு பின் பேசிய சிராஜூல்மில்லத் அவர்கள், “மைதீன் அண்ணன் அவர்கள் சொன்னதை போல உண்மையையே பேசுங்கள்” என்று வரலாற்றில் அரசர்களுக்கு முன்னால் உண்மையை பேசிய சில ஆலிம்களின் வரலாற்றை சுட்டி காட்டினார்கள்.
அவர்கள் மேலும் பேசியபோது,”இன்று பட்டம் வாங்கும் இளம் ஆலிம்களின் முகத்தில் தென்படும் குறுந்தாடிகளை பார்க்கும் பொழுது தாடி வைக்காத பெரியவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே சொல்லிய வண்ணம் மைதீன் சாஹிப்  அவர்களை பார்த்தார்.(அவர் தாடி வைக்காமல் இருந்தார்)
உடனே அவர் “ஆமாம்,ஆமாம். நானும் வெட்கப்பட வேண்டும் என்றார்.எல்லோரும் புன்னகை பூத்தார்கள். 
இடமறிந்து, பொருளறிந்து, காலமறிந்து, பேசுவதில் வல்லவர், சிராஜூல்  மில்லத். பிற மத அன்பர்கள்  கூட அவர்களுடைய பேச்சை ஆர்வத்துடன் கேட்பார்கள்.
1980களில் மயிலாடுதுறை தாலுக்காவின் அனைத்து ஜமஅத்தார்களும் இணைந்து ஒரு மாபெரும் மீலாது விழா பேரணியையும் நகர பூங்காவில் பொது கூட்டமும்  நடத்துவார்கள்.
அதில்,ஒரு முறை சிராஜூல்மில்லத் அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.அவர்கள் பேச ஆரம்பித்த பொழுது பூங்காவின் அருகே இருந்த சினிமா அரங்கின் முதல் காட்சி முடிவுற்று மக்கள் கூட்டம் கூட்டமாக பூங்காவின் வழியே பேருந்து நிலையம் சென்றனர்.
தலைவர் அவர்களின் கம்பீரமான குரலை கேட்டு பெரும்பாலானோர் அப்படியே நின்று விட்டார்கள். பிற மத சகோதரர்கள் அதிகமாக குழுமி இருந்த கூட்டத்தில், தலைவர் அவர்கள்  நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றிய பொழுது மக்கத்து குறைஷியர்களின் மூட நம்பிக்கைகளை பற்றியும் சிலை வணக்கத்தை பற்றியும் சுவைப்பட கூறினார்கள்.
  வியப்பு என்னவென்றால் அவர்களின் பேச்சு அங்கு குழுமி இருந்த இந்து சகோதாரர்களின் மனதில் எந்த ஒரு காயத்தையும் ஏற்படுத்தாமல் “அவர் பேசுவது சரிதானே” என்று எண்ணுகிற வகையில் பேசினார்கள்.
என்னுடைய பல இந்து நண்பர்கள் அந்த பேச்சை பெரும் அளவு பாராட்டினார்கள்.

ஷஃபான் வழக்கில் விவாகரத்து செய்யப்பட மனைவிக்கு ஜீவனாம்சம் தொகை கொடுக்கப்பட வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஷரீஅத் விளக்க மாநாடு நடைபெற்றது.

பாண்டிச்சேரி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற பெருந்திறள் கூட்டத்தில் தலைவரின் பேச்சு என்றும் மறக்க முடியாது.

“முஸ்லிம்களான எங்களை தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.தேசிய நீரோட்டம் என்றால் என்ன? இந்து சமுதாயத்தின் கொள்கைகளை பின்பற்றுவது தான் தேசிய நீரோட்டமா?

சமீபத்தில் கல்கத்தாவில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராமகிருஷ்ணமடம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தங்களை இந்து என்று சொல்ல கூடாது என்றும் தங்களை இந்து அல்லாதசிறுபான்மையினர்  என்று அறிவிக்க வேண்டுமென வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

 நான் சட்டமன்றத்தில் மாண்புமிகு ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை நோக்கி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வருகிறதா? என்று கேட்டேன்.(அப்பொழுது தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்). அதற்கு மாண்பு மிகு அமைச்சர் அவர்கள், மேல்மருவத்தூர் கோவில் நிர்வாகிகள் தாங்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், எனவே, அந்த துரையின் கீழ் நாங்கள் வரமாட்டோம் என்று அறிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னார். 

நாங்கள் யார்யாரெல்லாம் ஹிந்துக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எல்லாம் தங்களை ஹிந்துக்கள் அல்ல என்று சொல்கிற பொழுது நாங்கள் உறுதியான மார்க்கத்தை பின்பற்றி முஸ்லிம்கள் என்று அறிவித்திருக்கின்ற பொழுது எங்களை எந்த தேசிய நீரோட்டத்தில் சேர சொல்கிறீர்கள்.

(காமன் சிவில் கோடு) இந்தியா முழுமைக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
 நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம் ஆனால், ஒரு நிபந்தனை: உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு சிவில் சட்டங்களையும் கொண்டு வாருங்கள். நாங்கள் எங்கள் இஸ்லாம் வகுத்துள்ள சிவில் சட்டத்தை யும் கொண்டு வருகிறோம். அனைத்தையும் ஒப்பிட்டு பாப்போம். இஸ்லாமிய சிவில் சட்டத்தை விட பிற நாட்டு சிவில் சட்டங்கள் சிறப்பானதென்று நீங்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அந்த சட்டத்தை ஏற்று கொள்ள தயாராக இருக்கிறோம். உங்களால் ஒருபோதும் இஸ்லாத்திற்கு நிகரான சட்டத்தை கொண்டு வரவே முடியாது.” என்று உணர்ச்சிகரமாக பேசினார்.
மைதானமே தக்பீரால் அதிர்ந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறந்த இலக்கிய பேச்சாளரான முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் கா.காளிமுத்து அவர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார். அதற்கு பின் பேசிய சிராஜூல்மில்லத்  பேச்சை கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் கேட்டது.
கூட்டம் முடிந்து திருநெல்வெலி செல்லும் பஸ்ஸில் நான் சென்று கொண்டிருந்தேன். அந்த பஸ்ஸில் வந்த தி.மு.க தொண்டர்கள் “இன்று பாய் நம்முடைய தலைவர் பேச்சையே சாப்பிட்டு விட்டார். அவர் பேச்சு தான் சூப்பர்.” என்று பேசி கொண்டு வந்தார்கள். எனக்கு மிக பெருமையாக இருந்தது.

தலைவர் சிராஜூல் மில்லத் அவர்களின் சில அரசியல் முடிவுகள் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகின. ஆனால், தலைவர் அவர்களின் நாவன்மையை பற்றியோ, அவரின் தனிமனித ஒழுக்கத்தை பற்றியோ யாரும் குறை சொல்ல முடியாது. தன்னை சந்திக்க வருபவர்களிடத்தில் எங்களை போன்ற சிறு வயது உடையவர்களாக இருந்தாலும் கூட இன்முகத்துடன் பேசும் சிறந்த பண்பாளர் அவர்.தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வார்கள் என கேள்விபட்டுள்ளேன் 
அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் சேர்ப்பானாக.ஆமீன் 
 ___ மீள் பதிவு கணியூர் இஸ்மாயீல் நாஜி

Friday, February 19, 2021

அராஜக ஆட்சியும் குழப்பமும்

அராஜக ஆட்சியும் ,குழப்பமும் ,வறட்சியும் 
தோன்றியதின் காரணம் என்ன?
------------------------------------------------------------------------
--------கணியூர் இஸ்மாயில் நாஜி யின் ஜும்மா உரையி லிருந்து  
=================================================
30:41 ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ 
30:41. மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன; அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகிவிடக்கூடும்.
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ فَقَالَ: (يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ) [رواه ابن ماجة والحاكم] 

இவ்வுலகை படைத்த அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஒரு நியதியை உருவாக்கினான் 

வானம் பூமி ,சூரியன் ,சந்திரன் ,கால்நடைகள்,இன்ன பிற மிருகங்கள் முதல் கொண்டு மனிதன் வரை அவரவர் செல்ல வேண்டிய பாதைகளையு,ம் நிர்ணயித்து அதனை பின்பற்ற ஆணையுமிட்டான்....

கடலிலும் கரையிலும் ஃபஸாதுகள் வெளிப்பட துவங்கி விட்டன என அல்லாஹ் சொல்கிறான். 
ஃபஸாத் என்ற அரபி வார்த்தைக்கு கெட்டு போதல், வீணாக போதல், இயல்புக்கு மாறாக மாறுதல் என்று பொருளாகும்.
 
சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து சீராக நடைபெற பாதைகள் அமைத்திருப்பார்கள். பாதசாரிகள் நடந்து செல்ல ஒரு நடைமேடை. இரு சக்கர வண்டிகள் செல்வதற்கு ஒரு பாதை. நான்கு சக்கர வண்டிகள் செல்ல ஒரு பாதை. பேருந்துகள் செல்ல ஒரு பாதை என்று பிரித்திருப்பார்கள்.
இடது பக்கமோ வலது பக்கமோ செல்ல விரும்புகின்றவர்கள் எந்த இடத்தில் பிறிய வேண்டும் என்பதற்காக ஒரு பாதை அமைத்திருப்பார்கள்.
எப்போது செல்ல வேண்டும், சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற விளக்குகள் அமைத்திருப்பார்கள். 

இந்த போக்குவரத்து விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் எவ்வித குழப்பமும் வராது. விபத்துகளும் ஏற்படாது. மாறாக, அப்பாதைகளில் செல்பவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்திற்கு செல்ல ஆரம்பித்தால் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாவதுடன் விபத்துகளும் ஏற்படும்.

இதை போன்று தான், அல்லாஹ் இவ்வுலகும் சீராக நடைபெற ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை அமைத்து கொடுத்திருக்கிறான்.

சூரியனும் சந்திரனும் பல்லாயிரம் ஆண்டுகளாக தனக்கென வகுக்கப்பட்ட பாதையில் சுழன்று கொண்டிருக்கின்றன. அவைகள் பாதை மாற ஆரம்பித்தால் இவ்வுலகம் இயங்க முடியாது. 

அது போன்று தான் மனிதர்களுக்கும் இந்த பாதையில் தான் செல்ல வேண்டும் என்ய்ற்று வரையறுத்துன் கணவன் மனைவி, தாய் தந்தை, குடும்பம், வியாபாரி, விவசாயி இன்னும் பிற அலுவலர்கள், ஆட்சியாளர்கள், என மனிதர்களில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றார்களோ அவர்கள் அனைவர்களுக்கும் ஒரு பாதை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவர்களும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் இருந்து மாறி வெவ்வேறு பாதைகளில் செல்ல ஆரம்பித்த காரணத்தால் இன்று குழப்பங்களும், கொந்தளிப்பும் உலகில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதாக இப்னுமாஜாவிலே ஒரு ஹதீஸ் ஓன்று வந்துள்ளது. 

முஹாஜிரீன்களே! ஐந்து விடயங்களில் நீங்கள் சோதிக்கப்படுவீர்களானால் அவைகள் உங்களை பாதிக்காமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள்.
 
1 – ஒரு சமுதாயத்தில் வெக்கக்கேடான, மானக்கேடான விஷயங்கள் பகிரங்கமாக நடைபெற ஆரம்பித்தால் அவர்களுக்கு மத்தியிலே கொடும் நோய்கள், அவர்களுக்கு முன்னாள் கடந்து சென்ற சமூகத்தினர் அனுபவிக்காத நோய்களும், வேதனைகளும், பரவாமல் இருக்காது.

(((இன்று தொலைக்காட்சிகளிலேயும், பீச், பார்க் போன்ற பொது இடங்களிலும் கண்கள் கூசும் வெக்கக்கேடான காட்சிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
நபிகள் நாயகம் சொன்னதை போன்று இன்று HIV போன்ற கொடிய நோய்களும் நம் முன்னோர்கள் கண்டறியாத பிற நோய்களுக்கும் இந்த சமூகம் ஆளாகி கொண்டிருக்கிறது.)))

2 – எந்த சமுதாயத்தில் அளவிடுவதிலும், நிறுத்தலிலும் மோசடி செய்கிறார்களோ அந்த சமுதாயம் வறட்சியாலும் கடுமையான சிரமத்தாலும் ஆட்சியாளர்களின் அநியாயத்தாலும் பாதிக்கப் படுவார்கள்.

((( இன்று நாம் பார்க்கின்றோம். வியாபாரத்தில் பெரும்பாலானோர் நியாமாக நடப்பதில்லை. நேர்மையாக இருப்பதில்லை. அதனின் காரணமாக ஆட்சியாளர்கள் தாங்கள், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்காக மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காக, மக்களின் மீது அநியாயமாக வரிகளை விதிப்பதை பார்க்கின்றோம்.)))

3 – எந்த சமுதாயம் தங்களின் பொருட்களில் இருந்து கணக்கிட்டு ஜகாத் கொடுப்பதை தடுத்துக் கொள்கிறார்களோ அந்த சமுதாயம் வானத்திலிருந்து ஒரு  துளி கூட கீழே விழாமல் தடுக்கப்பட்டு விடுவார்கள். கால் நடைகள் மட்டுமில்லை என்றால் ஒரு போதும் மழையே பெய்யாது.

((( இன்று நாம் பார்க்கின்றோம். பெரும்பாலான செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை கணக்கிட்டு ஜகாத் கொடுப்பதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் சீர் என்ற பெயரில் 3௦ பவுன், 4௦ பவுன் என்று நகையை பெறுகிறார்கள். ஆனால், அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும் ஏற்று உணர்வு கூட இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் தான் இன்று பருவ மழை தவறி விடுவதை பார்க்கின்றோம்.)))

4 -  எந்த சமுதாயம் அவர்கள் அல்லாஹ்விற்கும், ரஸுலிற்கும் கொடுத்த வாக்குகளை மீறுகிறார்களோ அவர்களின் மீது, அவர்களுக்கு தொடர்பே இல்லாதவர்களை அல்லாஹ் ஏவிவிடுவான். அவர்களின் கைகளில் உள்ள அனைத்தையும் பறித்து விட்டு சென்று விடுவார்கள். 

5 – எந்த சமுதாயத்தில் அவர்கள் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை கொண்டும், அல்லாஹ் இறக்கியதிலிருந்து தேர்ந்தெடுக்காமல் தீர்ப்பு வழங்கு கிறார்களோ அல்லாஹ் அவர்களுக்கு மத்தியிலே நெருக்கடியை ஏற்படுத்துவான்.

Saturday, January 23, 2021

மகிழ்ச்சி என்றால் என்ன?

.
#மகிழ்ச்சிகரமான வாழ்க்கை என்பது எவ்வித சிக்கல்களும் இன்றி வாழ்வது என்று அர்த்தமல்ல,

 மாறாக  நேர்மறையான, நம்பிக்கையான உள்ளமுடையவனாக இருந்தால் நீங்கள் #மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்

 விதியையும் அல்லாஹ்வுடைய ஏற்பாட்டின் மீதும்  நம்பிக்கை யுடன் இருந்தால் நீங்கள் #மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்

 உங்களை வந்தடைந்தவைகள்  எவ்விதத்திலும் உங்களை வந்தடையாமல் இருக்காது என்றும் 

உங்களுக்கு கிடைக்காமல் போனவைகள் எந்நிலையிலும் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் நீங்கள்  நம்பினால் நீங்கள் #மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்

அருட்கொடைகிடைக்கும் போது நன்றி செலுத்துதல்
துன்பம் நேரிடும் போது பொறுமையுடன்
இருத்தல்
நற்கூலி கிடைக்குமென நற்செய்தி சொல்லுதல்
இத்தன்மைகள் உங்களிடத்தில் இருந்தால்
எந்நிலையிலும் நீங்கள் #சிறப்பாகவே இருப்பீர்கள்.
___முனைவர் ஷைக் ஆயிளுல் கர்னி அவர்களின் பதிவு விரிவாக்கப்பட்டுள்ளது
____கணியூர் இஸ்மாயில் நாஜி

Friday, January 22, 2021

கணவனைக் கவர்ந்தது எவ்வாறு?

கணவனைக் கவர்ந்தது எப்படி?
*************************************
உன்னை உன் கணவன் ஏன் அதிகம் நேசிக்கிறான்?
உன்னைத் தவிர வேறெந்தப் பெண்ணையும் பார்ப்பதில்லை,
ஆனால் அவனைச் சுற்றி உன்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்களே?"
என ஒரு மனைவியிடம் கேட்கப்பட்டது?

அப்பெண் சொன்னாள்:
நான் மிக அழகானவளாக,சிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்.
#என் கணவன் என்னை வேதனைப்படுத்தினால் #மன்னித்துவிடுவேன்.

#அவர் கவலையுடன் வந்தால்
அக்கரையுடன் அவர் சொல்வதைக்
#காதுகொடுத்துக்_கேட்பேன்.

#அதிகமாகக் கொடுத்தால்
#அவரைப்_பாராட்டுவேன்.

 #குறைவாகக் கொடுத்தால் 
இருப்பதைக் கொண்டு
#போதுமாக்கிக்_கொள்வேன்.

#இப்படித்தான் என் இறைவன் 
எனக்கு கற்றுகொடுத்துள்ளான்.

காதலை நான் #துண்டித்ததில்லை.
அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதைவிட்டும்
#விலகிக்கொண்டதுமில்லை

#முட்கள் நிறைந்த பூமியானாலும்
அதில் நான் #ரோஜாவைத் தான் விளைவிப்பேன்.
    --அரபி இணைய தளத்திலிருந்து #கணியூர்நாஜி

Tuesday, January 12, 2021

நோயாளியை சந்திப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வை

நோயாளியை சந்திப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை
--------------------
 முதலில் நோயாளியை சந்திப்பது நபிவழி என்பதையும்,அதற்கான நன்மை அல்லாஹ் தருவான் என்பதையும் நிய்யத்தாக கொள்ளவேண்டும்..

2.நோயுற்றிருக்கிறார் என கேள்விப்பட்டவுடனேயே நோயாளியைச் சந்திக்கவேண்டும்.

3,நோயாளியை  அவருக்கு சிரமமில்லாத நேரத்தில் சந்திக்க வேண்டும்.

4, நோயாளியின் தலைமாட்டு பகுதியில் அவரின் முகத்தை பார்த்த வண்ணம் அமர வேண்டும். பின், 
أسأل الله العظيم رب العرش العظيم  ان يشفيك 
அஸ்அலுல்லாஹ ல்அழீம் ரப்பல் அர்ஷில் அழீம் அய் யஷ்பீக
மகத்தான அர்ஷின் ரப்பான மகத்தான அல்லாஹ்விடம்  உங்களை குணப்படுத்த கேட்கிறேன்
என்று ஏழு முறை சொல்லவேண்டும்.
  
5 .நோயுற்றவருக்கு  அல்லாஹ் விடமிருந்து பாவமன்னிப்பு,இன்னும் பல நன்மைகள்கிடைக்கும் என்பதை அவருக்கு நற்செய்தியாக கூறுவதுடன்,அல்லாஹ் வின் மீது நல்லெண்ணம் வைக்கவேண்டும் என்றும் அவனிடம் குணப்படுத்த துஆ செய்யவேண்டுமென அவருக்கு ஆறுதலாக பேசவேண்டும்.

6, நீண்ட நேரம் அமர்ந்து நோயாளிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சிரமம் தாராமல்  சீக்கிரமாக சந்திப்பை நிறைவு செய்யவேண்டும்.
-------من كتاب أن الدين  عند الله  الإسلام / محمد يسري إبراهيم 
தமிழில்: கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ ,தேவ்பந்த்