மூசா நபி யும் சூனியக்காரர்களும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னுடைய தஃப்ஸிர் வகுப்பில் என்னுடைய ஆசிரியரிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம், ஃபிர்அவ்ன், சூனியக்காரர்கள் வசனங்களை பற்றி சில கேள்விகளை கேட்டேன்.
1) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியதற்கும் சூனியக்காரர்களின் கயிறு பாம்பாக மாறியதற்கும் என்ன வித்தியாசம்?
2) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் போட்ட கைத்தடி பாம்பாக மாறிய பின்பு வேறு சூனியம் செய்யாமல் சூனியக்காரர்கள் உடனடியாக ஏன் ஈமான் கொண்டார்கள்?
3) நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த ஃபிர்அவ்னும் மற்றவர்களும் ஏன் ஈமான் கொள்ளவில்லை?
அதற்கு என்னுடைய ஆசிரியர் இதற்கான விடை குர்ஆனிலே இருக்கிறது என்று கூறினார்கள்.
1,முதலாவது மூஸா அலைஹிவஸல்லம் அவர்கள் எறிந்த கைத்தடி உண்மையிலேயே பாம்பாக மாறியது. சூனியக்காரர்கள் எறிந்த கயிறும் கைத்தடியும் பாம்பாக மாறாமல் பாம்பு நெளிவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.
இதனை பற்றி திருக்குர்ஆனில்,
"மூஸாவே! நீங்கள் அதனை(த் தரையில்) எறியுங்கள்" எனக் கூறினான்.(20:19.)
அவர் அதனை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று.(20:20)
(அப்போது இறைவன்) "நீங்கள் அதைப் பிடியுங்கள்; பயப்படாதீர்கள். உடனே அதனை முன் போல் (தடியாக) ஆக்கி விடுவேன் (20:21)"
இந்த வசனத்தின் மூலம் மூஸா நபியுடைய கைத்தடி உண்மையிலேயே பாம்பாக மாறி பின் கைத்தடியாக மாறுவதாக அல்லாஹ் சொல்கிறான்.
அதே நேரத்தில் சூனியக்காரர்களின் செயலை பற்றி அல்லாஹ் சொல்லும் போது,
"அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவது போல் இவருக்குத் தோன்றின.(20:66.)
என்று அல்லாஹ் சொல்கிறான்.
இந்த வசனத்தில் அவர்களுடைய சூனியத்தின் காராணமாக கயிறுகள் பாம்பாக மாறியதை போன்று தோன்றியதே தவிர உண்மையான பாம்பாக மாறவில்லை என்று தெரிகிறது.
இது தான் மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியதற்கும் சூனியக்காரர்களின் கயிறுகள் பாம்பாக மாறியதற்கும் உள்ள வித்தியாசம்.
2,இரண்டாவது, சூனிய கலை என்பது நடக்காத ஒன்றை நடப்பது போன்று பிரமையை ஏற்படுத்தும் ஒரு கலையாகும். கைத்தடிகளும் கயிறுகளும் மற்றவர்களுக்கு பாம்பு நெளிவது போன்று தெரியுமே தவிர சூனியக்காரர்களுக்கு கைத்தடியாகவும் கயிறுமாகவே தோன்றும். ஆனால், மூஸா நபியின் கைத்தடி அல்லாஹ்வின் சக்தியால் உண்மையான பாம்பாகவே மாறியது. அதைக் கண்டு பயந்த சூனியக்காரர்கள் இது சூனியமாக இருந்தால் நம்முடைய கண்களுக்கு கைத்தடியாக தான் தெரியும். ஆனால், உண்மையான பாம்பாக மாறி இவர்கள் போட்ட கைத்தடியையும் கயிறையும் விழுங்கியதால் இது உண்மையிலேயே சூனியம் இல்லை என்று நம்பியதுடன் இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று புரிந்து கொண்டார்கள். அது என்ன சக்தி என்று புரியாத நிலையில் நாங்கள் மூஸா, ஹாரூன் ஆகியோரின் இறைவனை நம்பிக்கை கொண்டோம் என்று கூறினார்கள்.
3,ஆனால், ஃபிர்அவ்னுக்கும் அவனை சுற்றி உள்ளவர்களுக்கும் சூனியக்காரர்கள் போட்ட கைத்தடியும் கயிறுகளும் பாம்பாக மாறியதும், மூஸா நபி போட்ட கைத்தடி பாம்பாக மாறியதும் ஒன்றாகவே தெரிந்தது.
எனவே தான், ஃபிர்அவ்ன், ஈமான் கொள்ளாமல்
"நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தாம் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களுடைய தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டிப் பேரீச்ச மரத்தின் வேர்களில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். நிலையான வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார் என்பதையும் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்(2௦:71)" என்று கூறினான்.
ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கு ஈமான் கொண்ட சூனியக்காரர்கள் சொன்ன பதிலை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
"அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ செய்துகொள். நீ செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான் (2௦: 72)"
என்று சொன்னார்கள்.
மனிதர்களின் உள்ளங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சூரத்துன்னாஸ் அத்தியாயத்தில்,
"மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.) (114:4,5)"
"(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர். (114:6)"
என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.
ஆகவே தான், இந்த வசனங்களை ஓதி வந்தால் சூனியக்காரர்களின் சூனியத்தை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மீள் பதிவு : கணியூர் இஸ்மாயீல் நாஜி
