துஆ செய்யுங்கள்
-------------------------------------------------------------------------------------------------------
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த ரமலான் அமல்களில் முக்கியமானது இஃதிகாஃப் என்ற அமலாகும்.
ரமலான் மாதத்தின் கடைசி பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருந்ததுடன் மற்றவர்களும் இருக்க ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் கடந்த பல ஆண்டுகளாக இஃதிகாஃப் இருந்து வருகிறேன்.
இதற்கு என்னை தயார்படுத்திய என தந்தை முஹம்மது யாக்கூப் ஸாஹிப் அவர்களை பற்றிய ஒரு பதிவு தான் இது. அவர்களுக்கு நீங்கள் துஆ செய்யும் நோக்கத்துடன் இதை பதிவிடுகிறேன்.
என் தாத்தா முஹம்மது இஸ்மாயில் ராவுத்தரால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய பள்ளியின் தாளாளராகவும், ஆசிரியராகவும் இருந்தவர். என் தந்தை தான் எனக்கு முதல் குரு. அ,ஆ, என்ற தமிழிலும், ب،ألفஎன்று அரபியிலும் ب،ا, என்று உருதிலும் अ,आ, என்று ஹிந்தியிலும் A,B என்று ஆங்கிலத்திலும் எழுத படிக்க கற்று கொடுத்தவர்.
அவரிடம் இருந்து இரண்டு விஷயங்களை நான் கற்று கொண்டேன். ஒன்று, எது நடந்தாலும், அது அல்லாஹ்வின் நாட்ட படியே நடக்கிறது,
இரண்டு இஃதிகாஃப் இருத்தல்.
நான் பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த பொழுது என் தந்தை எங்கள் ஊர் பள்ளியில் இஃதிகாஃப் இருப்பார்கள்.
நானும் பள்ளியிலே படுத்து கொள்வேன். சுமார் இரண்டு மணியளவில், என் தந்தை என்னை எழுப்பி விடுவார். நான் பள்ளியின் ஒலி பெருக்கியில் மணி இரண்டு ஆகி விட்டது ஸஹருக்கு உணவு தயாரிப்பவர்கள் தயாரித்து கொள்ளுங்கள் என்று மூன்று முறை சொல்லுவேன்.
பின்பு, என் வீட்டிற்கு சென்று என் தாயாரை எழுப்பி விட்டு பிறகு மறுபடியும் தூங்கி விடுவேன். திரும்பவும் மூன்றரை மணிக்கு எழுப்பி விடுவார். மீண்டும் ஒலி பெருக்கியில் மணி மூன்று முப்பது ஸஹருக்கு சாப்பிடுபவர்கள் எழுந்து சாப்பிட்டு கொள்ளலாம் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வருவேன்.
என தந்தையுடன் சேர்ந்து நானும் நோன்பு வைத்து கொள்வேன். நான்கு மணிக்கு ஒலி பெருக்கியில் ஸஹர் நேரம் முடிவடைய இருப்பதால் விரைவாக உணவை உண்ணுங்கள் என்பேன்.
என வீட்டிற்கு செல்லும் வழியில் முக்கூட்டு என்று சொல்லப்படும் மூன்று தெருக்கள் சந்திக்கும் இடம் இருக்கிறது. அங்கு, ஒரு வீட்டை ஒட்டி விளக்கு தூண் ஒன்று இருக்கும். அங்கு பேய் இருக்கிறது. தனியாக போனால் உன்னை கூப்பிட்டு உன் மீது ஏறி கொள்ளும் என்று என் நண்பர்கள் சொல்லுவார்கள். அதை பற்றி என் தந்தையிடம் கேட்டேன்.
பேய் என்று எல்லாம் ஒன்றும் கிடையாது நீ போகும் பொழுது யாராவது உன்னை கூப்பிடுவது போன்று தோன்றினால் திரும்பி பார்க்காமல் ஸலவாத் ஓதிக் கொண்டே போ என்று சொன்னார்.
சில நேரங்களில் அவ்விதம் என்னை கூப்பிடுவது போன்று தோன்றும் என் தந்தை சொன்ன படியே ஸலவாத் ஓதி கொண்டே சென்று விடுவேன்.
1967ம் ஆண்டு லால்பேட்டையில் மதரஸாவிலிருந்து மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்ற பின்னால் வந்த ரமளானில் ஏதோ காரணத்தினால் என் தந்தையால் இஃதிகாஃப் இருக்க முடியவில்லை. ஜமாத்தார்கள் என்னை இருக்கும் படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த வருடம் நான் இஃதிகாஃப் இருந்தேன். எங்கள் ஊரில் இரண்டு முறை இஃதிகாஃப் இருந்திருக்கிறேன்.
அதன் பின்னால் 1997 ஆம் ஆண்டு தான் மீண்டும் இஃதிகாஃப் சிதம்பரம் நவாப் பள்ளியில் இருக்க தொடங்கினேன். அல்லாஹ்வின் அருளால் இடையில் சில ஆண்டுகளை தவிர தொடர்ந்து இஃதிகாஃப் இருந்து வருகிறேன்.
என்னை இஃதிகாஃப் இருக்க பக்குவ படுத்திய என் தந்தை யின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு ஜன்னதுல் பிர்தவ்ஸில் இடம் பெற துஆ செய்யுங்கள்
ஒவ்வொரு முறை இஃதிகாஃப் இருக்கும் பொழுதும் என்னில் ஒரு மாற்றம் உருவாவதை காண்கிறேன்.
அல்லாஹ் என் உயிரை கைப்பற்றும் வரை நான் தொடர்ந்து இஃதிகாஃப் இருக்க துஆ செய்யுங்கள்!............
குறிப்பு: இஃதிகாஃப் இருப்பதால் முகநூலில் என்னை பார்க்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
