Saturday, June 26, 2021

மறக்க வியலா பண்பாளர் கவிக்கோ

மறக்கவியலா பண்பாளர்
கவிக்கோஅப்துர்ரஹ்மான் 
******************************
இன்று ஈது பெருநாள். மறைந்த கவிக்கோ அண்ணனின் நினைவு அதிகமாக வந்து சென்றது. ஒவ்வொரு ஈது பெருநாள் அன்றும் சன் தொலைக்காட்சியில்  பெருநாள் தொடர்பான நிகழ்ச்சியில் அண்ணன் கலந்துக் கொள்வார். 
நிகழ்ச்சி முடிந்தவுடன் அண்ணனிடம் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு அவர்களின் உரையிலிருந்து நான் ரசித்த சில வரிகளை சுட்டிக் காட்டுவேன்.
அதை கேட்டு அவர் மகிழ்ச்சியடைவது அவர் குரலிலேயே தென்படும்.
1960களில் வானொலியில் பொங்கல் அன்று சிறப்பு கவியரங்கம் ஒலி பரப்பாகும்.
அதை என் தந்தை அவரும் ஒரு கவிஞர் என்பதால் ஆர்வமுடன் கேட்பார். நான் அவர் அருகில் இருந்து அதை கேட்பேன்.
அப்போது கவியரங்கின் தலைவர் அடுத்து அதியமானை பற்றி அப்துர் ரஹ்மான் என்று அறிவித்தார். அவர் கவிதை வாசிக்க வாசிக்க என் தந்தை சபாஷ் சபாஷ் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது என் மனதில் அப்துர் ரஹ்மான் என்ற பெயர் பதிந்து விட்டது.
அதற்குபின் பல கவியரங்க மேடைகளில் அண்ணன் கவிக்கோ அவர்களை தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். ஏறக்குறைய 48ஆண்டுகளுக்குப் பின் நீடூரில் ஒரு விழாவிற்கு கலந்துக் கொள்ள வந்த அண்ணன் கவிக்கோவிடம் நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதாவின் பொதுச் செயலாளர் சாதிக், இவர் எங்கள் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். 
‘வாங்க ஆலிம்ஸா’ என்று கூறிய அண்ணன் கவிஞர் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.
கவிக்கோ அண்ணனுடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். அவர் எப்போதும் சற்று இறுக்கமாகவே இருப்பார். புதிய நபரிடம் கலகலப்பாக பேச மாட்டார்.

ஆனால், கவிதையை பற்றி பேச ஆரம்பித்தால் பேசுவதை நிறுத்த மாட்டார். அவரிடம் நானாகவே சிறுவயதில் வானொலியில் உங்களின் கவிதைகளை கேட்டிருக்கிறேன் என்று ஆரம்பித்தேன். அப்படியா ஆலிம்ஸா விற்கு கவிதையெல்லாம் பிடிக்குமா என்று கேட்டார். 

ஆம். நிறைய உங்கள் கவிதைகளை படித்திருக்கிறேன். காயல்பட்டினத்தில் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் சாரண பாஸ்கரன் கலந்துக் கொண்டார். அதில் மிகவும் பிரசித்தி பெற்ற #”படிக்காத அவரிடம் தான்  பல்கலைக்கழகங்கள் பாடம் படித்தன”. என்ற கவிதையை நீங்கள் சொன்னீர்கள் என்று சொன்னேன். ஆலிம்ஸா விற்கு கவிதை மேல் ரொம்ப நாட்டம் போல் தெரிகிறதே என்று சொன்னார்.
மிகவும் உற்சாகம் அடைந்த அண்ணன் தொடர்ந்து மார்க்க கல்வி, உலக கல்வி பற்றிய விவாதம் “MUTUAL FUND” போன்ற விஷயங்களை பற்றி பேசினோம்.
அப்பொழுது கவிக்கோ அண்ணன் அங்கே இருந்த கேப்டன் அமீர் அலியிடம் நமக்கு ஒரு ‘ஹைடெக் ஆலிம்ஸா’ கிடைத்திருக்கிறார் என்றார்.

அதன்பின் நண்பர் சாதிக்குடன் சென்னை செல்லும் போதெல்லாம் கவிக்கோ அண்ணனை சந்திக்காமல் வந்ததில்லை.
வக்ஃப் வாரிய தலைவராக போகிறார் என்று செய்தி வந்தவுடன் அலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன்.
‘என்ன அண்ணே! பெரிய பொறுப்பு ஏற்க போகிறீர்களாமே, அதற்கெல்லாம் நீங்கள் ஆசை பட மாட்டீர்களே எப்படி சம்மதித்தீர்கள்’ என்று கேட்டேன்.

‘ஓ! சிதம்பர ஆலிம்சாவுக்கும் தகவல் வந்துவிட்டதா? என்றவர் இதே கேள்வியை தான் தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார். தலைவரிடம் வக்ஃப் வாரிய தலைவராக என் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது , ‘அவனை கேட்டிங்களா? அவன் பொறுப்பெல்லாம் ஒத்துக்க மாட்டானே. எத்தனையோ முறை அவனிடம் பல பொறுப்புகள் கொடுக்க முயன்றேன். அவன் மறுத்து விட்டான் இதை ஏற்றுக் கொள்வானா? என்று கேட்டிருக்கிறார்.
நான் தலைவரை நேரில் சந்தித்தேன். சமுதாயத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள் எமது சமுதாயத்திற்கு பலனில்லாமல் அநியாயக்காரர்கள் கைகளில் இருக்கிறது. உங்கள் ஆட்சி காலத்தில் அவைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். அரசியல் குறுக்கீடு இல்லையென்றால் நிச்சயமாக நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று சொன்னாதாக அண்ணன் சொன்னார்.

அவர் சொன்னதை போன்றே அவர் பொறுப்பில் பல கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டன. பொது மேடைகளில் வக்ஃப் வாரியத்தின் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.  

ஒரு கூட்டத்தில், “ஹிந்துக்கள் சிவன் சொத்து குல நாசம் என்று கூறி சிவன் சொத்தை சாப்பிடுவதற்கு பயப்படுவார்கள். ஆனால், நம்மாட்களோ அல்லா சொத்தை அல்வா சாப்பிடுவது போன்று சாப்பிடுகிறார்கள். எப்படி பொய் கணக்கு எழுத வேண்டும் என்பதை எங்கள் ஆட்களே சொல்லிக் கொடுக்கிறார்கள்” என்று சொன்னார்.
ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃப் இடங்களை மீட்டு அங்கே கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் போன்றவைகளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அண்ணனின் துணைவியார் மறைவு அவரை பெரிய அளவு பாதித்தது. உரத்த குரலில் பேசி அறியாத தன் துணைவியுடன் பணிச்சுமையின் காரணமாக அதிக அளவு அவருடன் இருக்க முடியவில்லை என்ற மனக் குறை  அண்ணனிடம் இருந்தது. அண்ணியார் மறைவதற்கு முதல் நாள் கூட வக்ஃப் வாரிய பணிக்காக கேரளா சென்றிருந்தார். தன் துணைவியாரை பற்றி ஆனந்த விகடனில் உருக்கமான கட்டுரை எழுதியிருந்தார்.
பாலைவனத்திற்காகவே படைக்கப்பட்ட ஒட்டகம் போல் எனக்காகவே அவள் படைக்கப்பட்டாள்.

இளமையில் பாலாய் இருந்தாள்.
நடுமையில் மதுவாய் இருந்தாள்.
முதுமையில் மருந்தாய் இருந்தாள்.

என்ற வரிகள் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது.
படித்தவுடன் அண்ணனுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். மனைவியை  ஒரு புதிய கோணத்தில் அறியப்படுத்திருக்கிறீங்க

நடுமையில் மதுவாய் இருந்தாள் என்ற வார்த்தை பல அர்த்தங்களை சொல்கிறதுஎன்றேன். அவர் சிரித்துக் கொண்டே மனைவியை மதுவுடன் ஒப்பிட்டிருக்கிறாரே என்று ஆலிம்சாக்கள் எனக்கு காஃபிர் பட்டம் கொடுத்து விட மாட்டிர்களே என்று வழக்கம் போல் ஆலிம்களை கலாய்த்தார்.

அவர் மறைவதற்கு இரு வாரங்களுக்கு முன் ஒரு உருது கவிதை தொடர்பாகவிளக்கம் கேட்பதற்காக அவரை அழைத்தேன். அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.  பின் மறுபடியும் அவரே என்னை தொடர்பு
 கொண்டார்.
உடல்நிலை பற்றி விசாரித்தேன். சிறுநீரக பிரச்சனைத்தான் கொஞ்சம் தொல்லை கொடுக்கறது. துஆ செய்யுங்கள் ஆலிம்சா என்றார். உருது கவிதையில் ஒரு சந்தேகம் என்றேன். ஆலிம்சாவிற்கு உருது கவிதையெல்லாம் பிடிக்குமா என்றார். ‘பல்’ என்ற உருது வார்த்தைக்கு தமிழில் என்ன வார்த்தை போடலாம் என்றேன். அடுத்த கணம் என்றார்.

அவரிடம் நான் கேட்ட கவிதை இது தான்.
தன்னுடைய மரணத்தை பற்றி எந்த மனிதனுக்கும் முன்னறிவிப்பில்லை.
பொருட்களோ நூறாண்டிற்க்கு இருக்கின்றன.
அடுத்த கணம் என்ன நடக்கும் என்று தெரியாது."
அல்லாஹ் அண்ணன் கவிக்கோவின் பாவங்களை மன்னித்து அவருடைய கப்ரை விசாலமாக்குவானாக.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி.

Saturday, June 5, 2021

பெண்ணுக்குள் இரண்டு இதயங்கள் உண்டா?

பெண்ணுக்குள் இரண்டு இதயங்கள் உண்டா?
__சுவராஸ்யமான விவாதம்
-----
ஆராய்ச்சி மாணவர்கள் நிறைந்த அவையில் குர்ஆனில் மொழிவளம் சொல்லாட்சி இலக்கிய நயம் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் பேராசிரியர் ஒருவர்.

 உரையில் அவர் குர்ஆனுடைய சொல்வளம் எத்தகையது என்றால் அது பயன்படுத்திருக்கின்ற சொல்லிற்கு பதிலாக வேறு ஒரு சொல்லை பயன்படுத்தினால்  குர்ஆன் கூற வரும் கருத்தே மாறிவிடும் என்ற சொன்னவர்
அதற்கான சில எடுத்துக்காட்டுகளை யும் சுட்டிக்காட்டினார்.

அப்பொழுது ஒரு மாணவர் எழுந்து  பேராசிரியர் அவர்களே! நீங்கள் சொல்லுவது ஒரு வசனத்திற்கு முரணாக இருக்கின்றது குர்ஆன் பயன்படுத்தி உள்ள சொல்லுக்கு  மாற்றாக வேறு சொல்லை  பயன்படுத்தினால் அதனுடைய கருப்பொருள் மாறிவிடும்  எனக் கூறுகிறீர்கள்
 ஆனால் குர்ஆனின் 33வது அத்தியாயம் நான்காவது  வசனத்தில்
#அல்லாஹ் எந்த ஆணினுள்ளும் இரண்டு இதயங்களை அமைக்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது 

   இவ்வசனத்தில்  #ரஜ்ல் ஆண் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது
ஆனால் ஆணுக்கும்  பெண்ணுக்கும்    ஒரு இதயம் தானே   இருக்கிறது அவ்வாறானால்  இந்த வசனத்தில் #ரஜ்ல் என்ற சொல்லுக்குப் பகரமாக  #பஷர்   
மனிதனுக்குள் என்ற சொல்தானே பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும்
அப்பொழுது தானே  அது ஆணையும்  பெண்ணையும் குறிப்பிட்டிருக்கும் 
இந்த ரஜ்லு என்ற சொல்லின் மூலம் ஆணுக்கு மட்டும்தான் இரண்டு இதயம் இல்லை பெண்ணுக்கு இருக்கிறது என்பது போன்ற கருத்து வருகிறதே 
இது உங்களுடைய கூற்றுக்கு முரணாக இல்லையா? என்று கேட்டார்.

 ஒரு நிமிடம் அரங்கம் நிசப்தமானது அனைவருக்கும் அவர் கேட்டதுசரியான கேள்வி தானே இரண்டு பாலாருக்கும் ஒரே இதயம்தானே இருக்கிறது அவ்வாறு இருக்க குர்ஆன் 'ஆண்'என்று ஏன் குறிப்பிட வேண்டும் என்கின்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டது 
இதற்குப் பேராசிரியர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை அனைவரும்
அவரை உற்று நோக்கியபடி இருந்தனர்.

புன்னகையுடன்  பேராசிரியர்  பேச ஆரம்பித்தார்
#சகோதரரே நீங்கள் கேட்ட கேள்வி சரிதான் ஆனால் "ஆணுக்குள்ளே இரண்டு இதயங்கள் இருப்பது சாத்தியம் இல்லாத ஒன்றுதான் ஆனால் பெண்ணுக்குள்ளே இரண்டு இதயங்கள் இருப்பது சாத்தியமான ஒன்று" என்றார். 
கேள்வி கேட்டவர் வியப்புடன் அவரை பார்க்க தொடர்ந்த  பேராசிரியர் சொன்னார்:
#ஒரு பெண் கருவுற்று அது குழந்தையாக உருவாகின்ற பொழுது அந்த குழந்தைக்கும் ஒரு இதயம் இருக்கும் அல்லவா அவ்வாறாயின் அக்காலகட்டத்தில் பெண்ணுக்குள்ளே இரு இதயங்கள் இருக்கும் இல்லையா?
மனிதன்  என்று போட்டிருந்தால்  கருவுற்ற பெண்ணுக்குள் இரண்டு இதயங்கள் இருக்க சாத்தியம் இருக்கிறதே எனும் கேள்வி எழும்   எனவே ஆணினுள்ளே இரண்டு இதயங்களை அல்லாஹ் அமைக்கவில்லை என்பதுதான்  பொருத்தமான சொல்லாக இருக்கமுடியும் என முடித்தார் பேராசிரியர் 
அரங்கத்தில் கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆனது
----அரபு இணையதளத்திலிருந்து 
கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி

நான் கண்ட காயிதேமில்லத்

நான் கண்ட காயிதேமில்லத்(ரஹ்) (மீள்),
---------------------------
என் தந்தை காங்கிரஸ் காரர்.
எப்பொழுதும் முஸ்லிம் லீக்கை விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். எனவே எனக்கு முஸ்லிம்  லீக் தலைவர்களின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாததிருந்தது.

இந்நிலையில் 1966ம் ஆண்டு லால்பேட்டையில் ஓதும் போது முஸ்லிம் லீக் கூட்டத்தில் கலந்து கொள்ள காயிதேமில்லத் அவர்கள் வருகைதந்து மதரஸாவில் தங்கியிருந்தார்கள்.
அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்பொழுதுதான் எவ்வளவு எளிமையான இறையச்சமுள்ள தலைவர் என்பதை அருகே இருந்து உணர்ந்து கொண்டேன்.
 மாலை கூட்டத்திற்கு புறப்படுமுன் தாங்கள் அணிந்திருந்த ஷேர்வானியை கழட்டி அங்கிருந்த ஆணியில் மாட்டிவிட்டு பெட்டியிலிருந்து ஒரு புதிய ஷேர்வானியை எடுத்து அணிந்து கொண்டு புறப்பட்டார்கள்.
கூட்டம் முடிந்து  அறைக்கு வந்த அவர்கள் ஊர் திரும்பும் பொழுது  ஆணியில் மாட்டியிருந்த ஷேர்வானியை எடுத்து மடிக்க ஆரம்பிக்க நான் வேகமாக அருகில் சென்று கொடுங்க தலைவரே நான் மடிக்கிறேன் என்றேன்.
அப்பொழுது அங்கே இருந்த #சிராஜுல்மில்லத், தம்பி எங்கே அவர்களிடமிருந்து அதை வாங்கிவிடுங்கள் பார்ப்போம்,அவங்க வேலையை அவங்கதான் பார்ப்பாங்க மற்றவர்களை வேலை வாங்க மாட்டார்கள் என சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
அதே போன்று அவர்களும் புன்னகை யுடன்  மடித்து பெட்டியில் வைத்தார்கள்.
பின் அவர்களுக்கு கூட்டத்தில் அணிவிக்கப் பட்ட சால்வைகளும்,கொள்ளுமேடு ஜமாஅத்தினர் சார்பில் அளிக்கப் பட்ட குர்ஆனும் இருந்தன.
தலைவர் குர்ஆனை மட்டும்  எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு குர்ஆனை மட்டும் பெட்டியில் வைத்துக் கொண்டார்கள்.

அப்பெட்டியை அவர்களே எடுத்துக் கொண்டு காரை நோக்கிச் சென்றார்கள்
அப்பொழுதும் நான் கேட்டேன் கொடுக்க மறுத்துவிட்டார்கள்

லால்பேட்ட  மு.லீக் சார்பில் கவர் ஒன்றை தலைவரிடம் நீட்டினார்கள்.
இது என்ன என்றார்? தலைவர்
போக்குவரத்து செலவிற்கு எனச் சொன்னார்கள்.

எனக்கெதற்கு டெல்லியிருந்து அரசு செலவில்  ரயிலில் சிதம்பரத்திற்கு வந்தேன்
சிதம்பரத்திலிருந்து காரில் நீங்க அழைத்துவந்து விட்டீங்க.
இடையில் டீ,டிபன் எல்லாம், என்னுடன்  வந்தவங்க கவனித்துக் கொண்டார்கள் 
எனக்கு எந்த செலவுமே இல்லையே என்று அந்தக் கவரை வாங்க மறுத்துவிட்டார்கள்.

கொடுத்த பணம் போதாது என்று வாங்க மறுத்த தலைவர்களை பார்த்த எனக்கு அவர்களின் பற்றற்ற தன்மை வியப்பாக இருந்தது.
    1969ல் கணியூரில் நடைபெற்ற எனது உறவினர் திருமணத்திற்கு இரவு ஒரு மணியளவில் காயிதேமில்லத் தமது சகாக்களுடன் வந்தார்கள்.
சுப்ஹுத் தொழுகைக்குக்குப் பாங்கு சொல்வதைக் கேட்டு எழுந்த அவர்கள் யாரையும் எழுப்பாமல் பாங்கு சொல்லும் சத்தம் வரும் திசையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்கள்
மெயின் ரோட்டிலிருந்து வலது புறம் செல்லும் தெருவில் திரும்பி மஸ்ஜிதிற்குச் செல்வதற்கு பதிலாக நேராக கடத்தூர் செல்லும் பாதையில் செல்வதைக் கவனித்த ஒருவர் தலைவரிடம் விசாரித்து மஸ்ஜிதிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
நான் சுப்ஹுத் தொழுக சென்ற பொழுது அங்குள்ளவர் சொன்னார்கள்.
 அறிமுகமில்லாத வெளியூரில் இருட்டாக இருக்கும் நிலையில் இருப்பிடத்திலேயே தொழுதிருக்கலாம் ஆனாலும் ஜமாஅத்துடன் தொழவேண்டும் எனும் ஆர்வம் அவர்களின் ஈமானின் வெளிப்பாடு.
தொழுகை முடிந்தபின் முத்தவல்லி, அருகில் இருக்கும் தன் வீட்டிற்கு வாருங்கள் டீ சாப்பிட்டுப் போலாம் என அழைத்தார்.
எந்த பாசாங்குமில்லாமல் எளிய மனிதராய் வீட்டிற்கு வந்தார்கள்.
நானும்  கூட சென்றேன்.
இவர் தேவ்பந்த் மதரஸாவில் ஓதுகிறார்
ஜும்மாவில் நன்றாக உணர்ச்சிகரமாகப் பேசுவார் என என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் முத்தவல்லி.
தலைவர் அவர்கள் "பனீஇஸ்ரவேலர்களில் இருந்த ஆலிம்களைப் போல கற்றது ஒன்று செய்றது ஒன்று என இல்லாமல் அல்லாஹ் விற்குப் பயந்து  நீங்களும்  நடந்து மக்களையும்  நல்வழிப்படுத்த வேண்டும்" என்றார்கள்.
நிகாஹ் நடக்கும் நேரத்தில் அவர்கள் தங்கிருக்கும் இடத்திற்குச் சென்றேன்.
ஊர் பிரமுகர்கள் பலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
நானும் உள்ளே சென்று தலைவரின் அருகே அமர்ந்து கொண்டேன்.
திடீரென வாழ்க,வாழ்க என ரோட்டில் சத்தம் கேடேடது.
அங்கிருந்தவர்கள் அமைச்சர் மதியழகன் வந்துவிட்டார் என  எல்லோரும் வேகமாக சென்றுவிட நான் மட்டும் அமர்ந்திருந்தேன்.
தலைவர் புன்னகையுடன்  ஏன் தம்பி நீங்க அமைச்சரைப் பார்க்கப் போகல என்றார்கள்.
இல்லைங்க எனக்கு ஆசை இல்லைங்க என்றேன்.
லேசாக சிரித்துக்கொண்டார்கள்.

அவர்களின் மறைவு செய்திகேட்டு அவர்களின் ஜனஸா வைக்கப்பட்டிருந்த நியூகாலேஜ் மைதானத்திற்குச் சென்றேன்.
பெரிய மைதானம் முழுக்க மக்கள் கூட்டம்
தொழுகை முடிந்து ஜனஸா திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலிற்கு ஊர்வலமாஆகக் கொண்டு செல்லப்பட்டது.
எம்ஜிஆர் இறுதிவரை நடந்தே வந்தார்.

மறைவிற்கு அஞ்சலி செய்யும் வண்ணம் துக்ளக் பத்திரிக்கை தலைவரின் புகைப்படத்தைப் போட்டு அதன் கீழ் #கண்ணியம்_மறைந்தது என எழுதிஇருந்தது.

 _கணியூர் இஸ்மாயீல் நாஜி மனபயி

தந்தையின் மதிநுட்பம்

ஒரு தந்தையின் மதிநுட்பம்

தன் தந்தையின்  மரணத்திற்கு பிறகு ஆட்சிக்கு வந்த மன்னன்  ஒருவன் வயது முதிர்ந்தவர்கள் இந்த பூமிக்கு பாரம் என எண்ணி அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டான்.

தன் தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு இளைஞன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக தன் வீட்டின் கீழே ரகசிய அறையில்  அவரைத் தஙக வைத்தான்.

சில நாட்களுக்குப் பின், ஒற்றர்கள் மூலமாகவோ அல்லது காட்டி கொடுப்பவர்கள் மூலமாகவோ மன்னனுக்கு இந்த தகவல் தெரிந்து விட்டது.

அந்த இளைஞனை விசாரித்து விட்டு அவனைத் தண்டிக்கவும் அவன் தந்தையை கொல்லவும் விரும்பியவன் ,அந்த இளைஞனை

 #காலால் நடந்தவனாகவும் راكيا#ஏறியவனாகவும் 
வரச் சொல்  என ஆணையிட்டான்

ஒரே நேரத்தில் எப்படி வாகனத்தில் ஏறிய வண்ணமும் நடந்தும் வர முடியும் என தந்தையிடம் கேட்டான்.

தந்தை சொன்னார்: 
 ஒரு குச்சியை   ஒரு காலில் கட்டிக்கொண்டு
 அதை ஊன்றிக் கொண்டும் மற்றொரு காலால் நடந்தும்செல் என்றார். 

அவ்வாறே அவன் மன்னனின் முன் சென்றான்

அவனுடைய புத்திசாலித்தனத்தை கண்ட மன்னன் நாளை காலனி அணிந்தும்  வெறுங்காலுடனும் நடந்து வரவேண்டும் என உத்திரவிட்டான்

இது எப்படி சாத்தியமாகும் என அவன் தந்தையிடம் கேட்க அவனுடைய ஷூ வடிவிலான காலணியின் கீழ்ப்பகுதியை எடுத்து விட்டு அணிந்து போகச் சொன்னார். 

அந்நிலையில் காலணியை அணிந்திருந்தாலும்
அவனின பாதம் தரையில் பட்டதால் வெறுங்காலுடன்  நடந்ததைப் போன்றிருந்தது

அதைப் பார்த்த மன்னன் அவனின் புத்திக் கூர்மையைக் கண்டு அவன் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 

நாளை, உன்னுடன் இருக்கும் எதிரியையும்  விசுவாசமுள்ள நண்பனையும் அழைத்து வா என்றான்.

இது தொடர்பாக, தந்தையுடன் ஆலோசனை செய்தான்.

 நாளை உன் மனைவியையும் உன் வளர்ப்பு நாயையும் அழைத்து சென்று மன்னர் முன் அவர்களை அடி என்றார்.

அப்பொழுது என்ன நடக்கும் என்றான் மகன்.
என்ன நடக்கும் என்பது அப்பொழுது உனக்குக் தெரியும் என்றார் தந்தை.

அவனும் மன்னனின் முன் நாயையும் மனைவியையும் அடித்தான் 
நாய் கத்திக் கொண்டே அவனை விட்டும் சற்றுத் தள்ளிப் போய் நின்றது.
அடிவாங்கிய மனைவியோ கடுங் கோபத்துடன் மற்றவர்கள் முன் என்னை அடிக்கிறாயா? என்ன நடக்கிறது என்று பார் என  அலறிய வண்ணம் மன்னா! இவன் வீட்டு ரகசிய அறையில் அவனின் தந்தையை ஒளித்து வைத்துள்ளான் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
மன்னன்,"எதிரியைக் காட்டிவிட்டாய், விசுவாசம் உள்ள நண்பன் எங்கே? எனக் கேட்டான்
அந்த இளைஞன் அவனிடமிருந்து விலகி தள்ளி நின்று கொண்டிருந்த நாயை அழைத்தான்
அந்நாய் தன் வாலை ஆட்டிக் கொண்டு வேகமாக அவன் அருகே வந்து அவனின் காலில் தனது முகத்தைத் தேய்த்தது

மன்னா! நான் அடித்தாலும் நான் கூப்பிட்டவுடன் ஓடிவருகிறதே இதுதான் எனது விசுவாசமிக்க நண்பன்" என்றான் இளைஞன்.

இளைஞனின் புத்திசாலித்தனமும் பண்பட்ட நடைமுறையும் மன்னனைப் பெரிதும் கவர  இவ்வளவு திறமைகளை யாரிடம் கற்றாய் எனக்கேட்டார்

எல்லாமே என்தந்தையிடமிருந்து தான் மன்னா!
எனக்கு குரு வழிகாட்டி எல்லாமே அவர்தான் என 
 உருக்கமுடன் கூறினான்

மனம் நெகிழ்ந்த மன்னன் நாளை உன் தந்தையை அழைத்து வா என்றான்.

மறுநாள் வந்த தந்தையிடம் அரசியல் தொடர்பான சில கேள்விகளைக் கேட்டு தனது ஆலோசகராக நியமித்ததுடன் முதியவர்களை கொலை செய்யும் ஆணையையும் நீக்கியதுடன் இளைஞனுக்கும் பல வெகுமதிகளையும் வழங்கினான்.

நீதி: தந்தை ஒரு குடும்பத்தினருக்கு க் கிடைத்த பொக்கிஷம். அவர் அனுபவத்தின் பல்கலைகழகம்.
தன் தந்தையின் ஆலோசனைப் படி நடந்த காரணத்தினால் அந்த இளைஞன் உயர்வு பெற்றான்

தந்தை முதியவர் என்பதற்காகப் புறக்கணிக்காதீர்.
அவரிடம் உங்கள் பிரச்சினையைப் பேசிப்பாருங்கள் நீங்கள் எதிர்பார்க்காத  பல யுக்திகள்  
உங்களுக்குக் கிடைக்கும்.
பெற்றோர்களைப் பேணுங்கள்

குர்ஆன் கூறுகிறது

 உங்களது இறைவன் தன்னைத் தவிர மற்றெவரையும் வணங்கக்கூடாதென்று கட்டளையிட்டி ருப்பதுடன்
 தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் 
கட்டளை யிட்டிருக்கிறான்.
 உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!
(அல்குர்ஆன் : 17: 23,24)

-----அரபு இணைய தளத்திலிருந்து
கணியூர் இஸ்மாயில் நாஜி மன்பயி

Friday, June 4, 2021

கிராமவாசிகளின் மதிநுட்பம்

கிராமவாசிகளின் மதிநுட்பம் 1
_________&

  அரபு கிராமவாசி ஒருவர் #அப்துல்லாஹ் என்ற பெயரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக மூன்று மகன்களுக்கும் #அப்துல்லாஹ் என்று பெயர் சூட்டினார்

ஒருநாள் அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணப்படுக்கையில் மூன்று அப்துல்லாவையும் கூப்பிட்டு அப்துல்லாஹ் வாரிசாவார் அப்துல்லாஹ் வாரிசாக மாட்டார் அப்துல்லாஹ் வாரிசாவார் எனச் சொல்லியவாறு மரணம் அடைந்து விட்டார்

இறுதி சடங்குகள் முடிந்த பின் எந்த அப்துல்லாஹ் வாரிசாக மாட்டார் எந்த அப்துல்லாஹ் வாரிசாவார் என்ற குழப்பம் அவர்களிடையே எழுந்தது 

இது தொடர்பாக நகர நீதிபதி-காழி யிடம் சென்று பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று புறப்பட்டார்கள் 

 வழியில்  வியாபாரி  ஒருவர் அவர்களைத் தடுத்து என் ஒட்டகம் ஒன்றைக் காணவில்லை நீங்கள் பார்த்தீர்களா? எனக் கேட்டார் 
அதற்கு முதலாம் அப்துல்லாஹ், அதற்கு ஒரு கண்ஊனமாக எனக் கேட்டான் 
ஆமாம் ஒரு கண் தெரியாது என்றார வியாபாரி
இரண்டாம் அப்துல்லாஹ் அதற்கு ஒரு கால் ஊனமா எனக் கேட்டான்
ஆமாம் ஆமாம் சரிதான் அது நொண்டி நொண்டி நடக்கும் என்று சொன்னான் வியாபாரி 
மூன்றாம் அப்துல்லாஹ் அதனுடைய வால் துண்டிக்கப்பட்டு இருந்ததா எனக் கேட்டான்
வியாபாரி மகிழ்ச்சியுடன் ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்கிற அதே ஒட்டகம் தான் எங்கே பார்த்தீர்கள்? என்று கேட்டான் மூவரும் கோரசாக நாங்கள் பார்க்கவே இல்லை என்றார்கள்

வியாபாரிக்கு ஆத்திரம் பீறிட்டு வந்தது ஒட்டகத்தின் உடைய அங்க அவயங்களைச் சரியா சொல்கிறீர்கள் ஆனால் பார்க்கவில்லை என்கிறீர்கள்
நீங்கள் தான் அதை அறுத்து சாப்பிட்டு விட்டீர்கள் வாருங்கள் நகர நீதிபதியிடம் சென்று இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் எனச்சொல்ல அங்கே தான் நாங்களும் போகிறோம் வாருங்கள் போகலாம் என்று
மூன்று பேரும் அந்த வியாபாரியுடன் நீதிபதியிடம் வந்தனர்.

நீதிபதி முதலில் வியாபாரியின் முறையீட்டைக் கேட்க
வியாபாரி இவர்கள் என் ஒட்டகத்தின் அங்க அடையாளங்களைச் சரியாகச் சொல்கிறார்கள் ஆனால் நாங்கள் பார்க்கவில்லை என்கிறார்கள் இவர்கள் பொய் சொல்கிறார்கள் விசாரித்து நல்ல தீர்ப்பு வழங்குங்கள் என்றான்

முதலாவது அப்தல்லாஹ்விடம் அந்த ஒட்டகம் கண் ஊனம் என்று அதைப் பார்க்காமல் எவ்வாறு சொன்னாய்?என வினவினார் நீதிபதி

 நான் அதைப் பார்க்கவில்லை ஆனால் நாங்கள் வருகின்ற பாதையில் இருபுறமும் புல் பூண்டுகள் முளைத்து இருக்க ஒரு பக்கம் மட்டும் அந்த ஒட்டகம் மேய்ந்து இருப்பதை நாங்கள் பார்த்தோம் எனவே அதற்கு ஒரு கண் ஊனம் என யூகித்தேன்.
ஆனால் நான் பார்க்கவில்லை எனச் சொன்னான்

இரண்டாம் அப்துல்லாவிடம் கேட்டபோது நானும் பார்க்கவில்லை. ஒட்டகத்தின் காலடிகள் அழுத்தமாக மணலில் பதிந்திருக்கும்
ஆனால் இதனுடைய காலடிகளில் ஒன்று சரியாக பதியாமல் இருந்தது அதனால் ஒரு கால் ஊனமென ஊகித்தேன் என்றான்

முன்றாம் அப்துல்லாஹ்வும் நானும் பார்க்கவில்லை ஆனால் அதனுடைய புளுக்கையைப்பார்த்தேன் 
ஒட்டகம் புழுக்கை போடும்போது வலை ஆட்டிக்கொண்டே இருக்கும் அதனால்  புழுக்கைகள் குவியலாக ஒரே இடத்தில் விழாமல்  பரவலாக சிதறிக்கிடக்கும்  ஆ னால் இந்த ஒட்டகம் போட்ட புழுக்கைகள் குவியலாக ஒரே இடத்த்தில் இருந்ததால் அதனுடைய வால் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என ஊகித்தேன்  என்றான் 

அவர்களின் மதிநுட்பத்தை கண்டு வியந்த நீதிபதி
இவர்கள் உண்மையைத்தான்  சொல்லுகிறார்கள் அவர்கள் ஒட்டத்தைப் பார்க்கவில்லை நீ போய் வேறு இடத்தில் தேடிப் பார் என்று அந்த வியாபாரியை  அனுப்பிவிட்டார்

 பின் உங்களுடைய வழக்கு என்ன என்று கேட்டார் இவர்கள் தங்களுடைய  பிரச்சனையை சொல்லி எங்களில் யார் யார் வாரிசு என்று நீங்கள் தீர்ப்பளியுங்கள் என்றனர்

  வழக்கைக் கேட்டவுடன் நீதிபதிக்கு  ஒரு கணம் தலை சுற்றிவிட்டது இதுவரை அவர் எதிர்   கொண்ட வழக்குகளில் இதுபோன்ற வழக்கைக் கேள்விப்பட்டதே இல்லை

  "நீங்கள் இந்த இரவு எனது விருந்தினர் விடுதியில் தங்குங்கள்  நாளை  உங்களுக்கு நான் தீர்ப்பு அளிக்கிறேன் என்று அவர்களை அனுப்பி விட்டு,
காவலாளியை அழைத்து விருந்தினர் மாளிகைக்குச் சென்று ரகசியமாக அவர்களை கண்காணித்து என்ன  நடந்தது என்பதை என்னிடம்சொல் என்று அனுப்பிவைத்தான்.
கிராமவாசிகளின்  மதிநுட்பம் (தொடர்ச்சி)

இன்றிரவு என் விருந்தினர் மாளிகையில் தங்குங்கள்.
நாளை உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறேன் என்ற நீதிபதி அவர்கள் சென்ற பின்  காவலாளியை அழைத்து அவர்களைப் பின் தொடர்ந்து செல் விருந்தினர் மாளிகையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ரகசியமாக கண்காணித்து என்னிடம் சொல் என உத்தரவிட்டார்.

மாளிகைக்கு சென்ற மூவரும் தாங்கள் கண்காணிக்கப் படுகிறோம் என்பதை உணர்ந்துக் கொண்டார்கள். . இரவு உணவாக ரொட்டியும்  இறைச்சியும் பரிமாறப்பட்டது

  இறைச்சி த்துண்டை எடுத்து ஒருவன்  சொன்னான் :  இது நாய்க்கறி(இறைச்சி) 

மற்றொரு வன் சொன்னான் : இந்த ரொட்டியை நிறைமாத கர்ப்பிணி தயாரித்து இருக்கிறாள் 

இன்னொருவன்  சொன்னான்: இந்த நீதிபதி முறை தவறி பிறந்தவர் 

இவர்கள் பேசிக் கொண்டிருந்தததை செவி மெடுத்த காவலாளி  மறுநாள் நீதிபதியிடம் சென்று நடந்ததைச் சொன்னான்

நீதிபதி  அவர்கள் மூவரையும் வரவழைத்து 
 நாய்க்கறி என்று சொன்னவன் யார் என்க
 நான்தான் என்றான் முதலாம் அப்துல்லாஹ் 
எவ்வாறு சொன்னாய் என்று கேட்டார். 

பொதுவாக, ஆடு, , ஒட்டகம் போன்ற இறைச்சிகளில் கொழுப்பு எலும்புக்கு கீழே இருக்கும். நாய் இறைச்சியில் மட்டும் தான் கொழுப்பு எலும்புக்கு மேலே இருக்கும். அதை வைத்து நான் நாய்க்கறி என்று சொன்னேன் என்றான்.

அதை கேட்டு மகிழ்ந்த காஜி உன் தந்தைக்கு நீ வாரிசு ஆவாய் என்றார்

ரொட்டியை நிறைமாத கர்ப்பிணி தயாரித்ததாக சொன்னவன் யார் என்று கேட்டார். இரண்டாம் அப்துல்லாஹ் நான் தான் என்க
எவ்வாறு சொன்னாய் என்று வினவினார். 

நான் ரொட்டியை எடுத்துப் பார்த்தேன். அது ஒரு பக்கம் உப்பலாகவும் மறுபக்கம் தட்டையாகவும் இருந்தது. அதை தயாரித்தவள் வயிறு பெரிதாக இருந்த காரணத்தால் நெருப்பின் அனலுக்குப் பயந்து  அடுப்புக்கு அருகே சென்று  குனிந்து அதை சரியாக  பிரட்டி ப் போட முடியாததால் அவ்வாறு அரைகுறை யாக வெந்து  இருக்கிறது என்று யூகித்தேன்  என்றான்.
அதை கேட்ட நீதிபதி உற்சாகத்துடன் நீயும் வாரிசு ஆவாய் என்றார்.

மூன்றாம் அப்துல்லாஹ்விடம் கேட்பதற்கு முன்னால் வீட்டிற்குள் சென்று தன தாயாரிடம் உறுதிபடுத்திவிட்டு வந்தவர் என்னை முறைதவறி பிறந்தவன் என்று எவ்வாறு சொன்னாய்  என அவனிடம்  கேட்டார். 

 விருந்தாளிகளுக்கு நாய் இறைச்சியையும், வேகாத ரொட்டியையும் பரிமாரியதுடன் அவர்களை ரகசியமாக கண்காணிக்கச் சொன்னவன் ஒரு நீதிபதி  குடும்பத்தை சேர்ந்தவனாக இருக்க முடியாது என யூகித்தேன் . எனவே தான்  நான் அவ்வாறு சொன்னேன் என்றான்.

நீ சொன்னது சரிதான் என்று சொன்ன நீதிபதி உன் தந்தைக்கு நீ வாரிசுஆக மாட்டாய் என்று தீர்ப்பளித்தார்
எவ்வாறு அவ்விதம் சொல்கிறீர்கள் என்று இவன் கேட்க. முறை தவறி பிறந்தவனுக்கு தான் மற்றவனை முறை தவறி பிறந்தவன் என்று எண்ணத்தோன்றும். 
எனவே, நீ உன் தந்தைக்கு பிறந்திருக்க முடியாது, ஊருக்கு சென்று உன் தாயிடம் கேட்டுப் பார் என்று அனுப்பிவைத்தார்

அவர்கள் மூவரும் கிராமத்திற்கு திரும்பிச் சென்று தாயாரிடம் நடந்ததை கூறினார்கள்.

நீதிபதி சொன்னது சரிதான் என்ற  தாய்,    
உங்கள் தந்தை பள்ளிவாசலுக்கு தொழச் சென்றிருந்போது வாசலில் பச்சிளம் குழந்தையாக அழுதுக் கொண்டிருந்தவனை எடுத்து வந்து நாங்கள் எங்கள் பிள்ளையைப் போன்று வளர்த்தோம்  அவன் தான் மூன்றாவது அப்துல்லாஹ் என்றார். 

கிராமத்து அரபுகள் மிகவும் மதி நுட்பம் உடையவர்களாகவும் ஊகித்தறியும் திறன் உள்ளவர்களாகவும்  இருந்தார்கள் என்பதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதில், இதுவும் ஒன்று.
-------கணியூர் இஸ்மாயில் நாஜி