Saturday, June 5, 2021

நான் கண்ட காயிதேமில்லத்

நான் கண்ட காயிதேமில்லத்(ரஹ்) (மீள்),
---------------------------
என் தந்தை காங்கிரஸ் காரர்.
எப்பொழுதும் முஸ்லிம் லீக்கை விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். எனவே எனக்கு முஸ்லிம்  லீக் தலைவர்களின் மீது நல்ல அபிப்பிராயம் இல்லாததிருந்தது.

இந்நிலையில் 1966ம் ஆண்டு லால்பேட்டையில் ஓதும் போது முஸ்லிம் லீக் கூட்டத்தில் கலந்து கொள்ள காயிதேமில்லத் அவர்கள் வருகைதந்து மதரஸாவில் தங்கியிருந்தார்கள்.
அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்பொழுதுதான் எவ்வளவு எளிமையான இறையச்சமுள்ள தலைவர் என்பதை அருகே இருந்து உணர்ந்து கொண்டேன்.
 மாலை கூட்டத்திற்கு புறப்படுமுன் தாங்கள் அணிந்திருந்த ஷேர்வானியை கழட்டி அங்கிருந்த ஆணியில் மாட்டிவிட்டு பெட்டியிலிருந்து ஒரு புதிய ஷேர்வானியை எடுத்து அணிந்து கொண்டு புறப்பட்டார்கள்.
கூட்டம் முடிந்து  அறைக்கு வந்த அவர்கள் ஊர் திரும்பும் பொழுது  ஆணியில் மாட்டியிருந்த ஷேர்வானியை எடுத்து மடிக்க ஆரம்பிக்க நான் வேகமாக அருகில் சென்று கொடுங்க தலைவரே நான் மடிக்கிறேன் என்றேன்.
அப்பொழுது அங்கே இருந்த #சிராஜுல்மில்லத், தம்பி எங்கே அவர்களிடமிருந்து அதை வாங்கிவிடுங்கள் பார்ப்போம்,அவங்க வேலையை அவங்கதான் பார்ப்பாங்க மற்றவர்களை வேலை வாங்க மாட்டார்கள் என சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
அதே போன்று அவர்களும் புன்னகை யுடன்  மடித்து பெட்டியில் வைத்தார்கள்.
பின் அவர்களுக்கு கூட்டத்தில் அணிவிக்கப் பட்ட சால்வைகளும்,கொள்ளுமேடு ஜமாஅத்தினர் சார்பில் அளிக்கப் பட்ட குர்ஆனும் இருந்தன.
தலைவர் குர்ஆனை மட்டும்  எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு குர்ஆனை மட்டும் பெட்டியில் வைத்துக் கொண்டார்கள்.

அப்பெட்டியை அவர்களே எடுத்துக் கொண்டு காரை நோக்கிச் சென்றார்கள்
அப்பொழுதும் நான் கேட்டேன் கொடுக்க மறுத்துவிட்டார்கள்

லால்பேட்ட  மு.லீக் சார்பில் கவர் ஒன்றை தலைவரிடம் நீட்டினார்கள்.
இது என்ன என்றார்? தலைவர்
போக்குவரத்து செலவிற்கு எனச் சொன்னார்கள்.

எனக்கெதற்கு டெல்லியிருந்து அரசு செலவில்  ரயிலில் சிதம்பரத்திற்கு வந்தேன்
சிதம்பரத்திலிருந்து காரில் நீங்க அழைத்துவந்து விட்டீங்க.
இடையில் டீ,டிபன் எல்லாம், என்னுடன்  வந்தவங்க கவனித்துக் கொண்டார்கள் 
எனக்கு எந்த செலவுமே இல்லையே என்று அந்தக் கவரை வாங்க மறுத்துவிட்டார்கள்.

கொடுத்த பணம் போதாது என்று வாங்க மறுத்த தலைவர்களை பார்த்த எனக்கு அவர்களின் பற்றற்ற தன்மை வியப்பாக இருந்தது.
    1969ல் கணியூரில் நடைபெற்ற எனது உறவினர் திருமணத்திற்கு இரவு ஒரு மணியளவில் காயிதேமில்லத் தமது சகாக்களுடன் வந்தார்கள்.
சுப்ஹுத் தொழுகைக்குக்குப் பாங்கு சொல்வதைக் கேட்டு எழுந்த அவர்கள் யாரையும் எழுப்பாமல் பாங்கு சொல்லும் சத்தம் வரும் திசையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்கள்
மெயின் ரோட்டிலிருந்து வலது புறம் செல்லும் தெருவில் திரும்பி மஸ்ஜிதிற்குச் செல்வதற்கு பதிலாக நேராக கடத்தூர் செல்லும் பாதையில் செல்வதைக் கவனித்த ஒருவர் தலைவரிடம் விசாரித்து மஸ்ஜிதிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
நான் சுப்ஹுத் தொழுக சென்ற பொழுது அங்குள்ளவர் சொன்னார்கள்.
 அறிமுகமில்லாத வெளியூரில் இருட்டாக இருக்கும் நிலையில் இருப்பிடத்திலேயே தொழுதிருக்கலாம் ஆனாலும் ஜமாஅத்துடன் தொழவேண்டும் எனும் ஆர்வம் அவர்களின் ஈமானின் வெளிப்பாடு.
தொழுகை முடிந்தபின் முத்தவல்லி, அருகில் இருக்கும் தன் வீட்டிற்கு வாருங்கள் டீ சாப்பிட்டுப் போலாம் என அழைத்தார்.
எந்த பாசாங்குமில்லாமல் எளிய மனிதராய் வீட்டிற்கு வந்தார்கள்.
நானும்  கூட சென்றேன்.
இவர் தேவ்பந்த் மதரஸாவில் ஓதுகிறார்
ஜும்மாவில் நன்றாக உணர்ச்சிகரமாகப் பேசுவார் என என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் முத்தவல்லி.
தலைவர் அவர்கள் "பனீஇஸ்ரவேலர்களில் இருந்த ஆலிம்களைப் போல கற்றது ஒன்று செய்றது ஒன்று என இல்லாமல் அல்லாஹ் விற்குப் பயந்து  நீங்களும்  நடந்து மக்களையும்  நல்வழிப்படுத்த வேண்டும்" என்றார்கள்.
நிகாஹ் நடக்கும் நேரத்தில் அவர்கள் தங்கிருக்கும் இடத்திற்குச் சென்றேன்.
ஊர் பிரமுகர்கள் பலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
நானும் உள்ளே சென்று தலைவரின் அருகே அமர்ந்து கொண்டேன்.
திடீரென வாழ்க,வாழ்க என ரோட்டில் சத்தம் கேடேடது.
அங்கிருந்தவர்கள் அமைச்சர் மதியழகன் வந்துவிட்டார் என  எல்லோரும் வேகமாக சென்றுவிட நான் மட்டும் அமர்ந்திருந்தேன்.
தலைவர் புன்னகையுடன்  ஏன் தம்பி நீங்க அமைச்சரைப் பார்க்கப் போகல என்றார்கள்.
இல்லைங்க எனக்கு ஆசை இல்லைங்க என்றேன்.
லேசாக சிரித்துக்கொண்டார்கள்.

அவர்களின் மறைவு செய்திகேட்டு அவர்களின் ஜனஸா வைக்கப்பட்டிருந்த நியூகாலேஜ் மைதானத்திற்குச் சென்றேன்.
பெரிய மைதானம் முழுக்க மக்கள் கூட்டம்
தொழுகை முடிந்து ஜனஸா திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலிற்கு ஊர்வலமாஆகக் கொண்டு செல்லப்பட்டது.
எம்ஜிஆர் இறுதிவரை நடந்தே வந்தார்.

மறைவிற்கு அஞ்சலி செய்யும் வண்ணம் துக்ளக் பத்திரிக்கை தலைவரின் புகைப்படத்தைப் போட்டு அதன் கீழ் #கண்ணியம்_மறைந்தது என எழுதிஇருந்தது.

 _கணியூர் இஸ்மாயீல் நாஜி மனபயி

No comments:

Post a Comment