ஆன்மீக குருவும் நவாப் பிரதிநிதியும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஹகீமுல் உம்மத் மவ்லானா அஷ்ரப் அலி தானவி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள், ஆடம்பரங்களை விரும்பாத எளிமையானவர். வெளிப்பகட்டை விரும்பாதவர். அவர்கள் மாணவர்களின் அழைப்பின் பேரில் ஹைதராபாத் வந்தார்கள். மவ்லானா அவர்களை சந்திக்க ஹைதராபாத் நவாப் நிஜாமின் பிரதிநிதி வந்தார். அப்பொழுது அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடலைக் கேளுங்கள்:
நவாபின் பிரதிநிதி : மவ்லானா! தாங்கள் நவாபை சந்தித்தால் பயனுள்ளதாக இருக்கும்
மவ்லானா : யாருக்கு பலனுள்ளதாக இருக்கும்.
பிரதிநிதி : இருவருக்குமே!
மவ்லானா : அவரிடம் எனக்கு எந்த தேவையும் இல்லை. ஆதலால், அவரால் எனக்கு எந்த பயனும் இல்லை.
பிரதிநிதி : சரி தான். ஆனால், நவாபுக்கு பலனுள்ளதாக இருக்கும் மவ்லானா.
மவ்லானா : அப்படியானால் சந்திக்கலாம்.
பிரதிநிதி : மகிழ்ச்சி. நவாபிடம் நேரம் கேட்டு தங்களை வந்து அழைத்து செல்கிறேன்.
மவ்லானா : அவரை சந்திப்பதற்கு எனக்கு அவசியம் இல்லை. அவர் தான் என்னை சந்திக்க விரும்புகிறார். எனவே, அவர் தான் என்னை தேடி வர வேண்டுமே தவிர நான் அவரைத் தேடி அங்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
பிரதிநிதி : நல்லது. நவாபிடம் அவருக்கு எப்பொழுது நேரம் கிடைக்கும் என்று கேட்டு அவரை அழைத்து வருகிறேன்.
மவ்லானா : மீண்டும் தவறு செய்கிறீர். என்னை சந்திக்க அவர் தான் விரும்புகிறார். என்னிடம் தான் நீங்கள் நேரம் கேட்க வேண்டுமே தவிர அவரிடம் இல்லை.
பிரதிநிதி:நல்லது, மவ்லானா ஒரு நேரம் சொல்லுங்கள் ,நான் நவாபை அழைத்து வருகிறேன்
மவ்லானா:மன்னிக்கவும், இங்கே நான் விருந்தினாராக வந்திருக்கிறேன் ,என்னுடைய ஊரான தானாபவனாக இருந்தால் நான் என விருப்பத்திர்கேற்ப நேரம் ஒதுக்குவேன்,ஆனால் இங்கே என்னை அழைத்தவர்கள் தான் நேரம் ஒதுக்கவேண்டும் ஏனென்றால், அவர்கள் என்னை அழைக்கும்போதே சில நிகழ்சிக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் ,இங்கே அவர்களின் விருப்பதிற்கேற்பவே நான் செயல் பட முடியும் எனவே அவர்களை அணுகி நீங்கள் என்னுடைய நேரத்தை கேட்டு வாங்குங்கள்
திகைத்து போன நவாபின்
பிரதிநிதி : நல்லது மவ்லானா! மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
இந்த வரலாற்றை எங்கள் வகுப்பில் சொன்ன ஆசிரியர், இமாம் கஜ்ஜாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள், இஹ்யா உலூமுத் தீன் என்ற தங்களின் நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்கள்:
"ஒரு சிறந்த செல்வந்தன் யாரென்றால், மார்க்க அறிஞரின் வீட்டு வாசலில் நிற்பவன். மோசமான மார்க்க அறிஞர் யாரென்றால், ஒரு செல்வந்தரின் வீட்டு வாசலில் காத்து கிடப்பவர்."
யா அல்லாஹ்! உன்னை அல்லால் யாரிடமும் எத்தேவைக்கும் கையேந்தாத நிலையை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!
ஆமீன்!!!!