Saturday, November 16, 2019

எது பகுத்தறிவு

எது பகுத்தறிவு?
------கணியூர் நாஜி
-------------------------------------------------------------------
இஸ்லாத்தின் சில சட்டங்கள் அறிவிற்கு ஏற்புடையதாக இல்லையே? என இன்று சிலர் கூக்குரலிடுகிறார்கள்.

 இதனையே1966ம் ஆண்டு லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் கல்வி பயிலும்போது ஷைக் மில்லத் அல்லாமா அமானி ஹளரத் அவர்களிடம் கேட்டேன்.

அறிவிற்கு பொருத்தம் என்றால் எந்த அறிவிற்கு? என்று எதிர்க் கேள்வி கேட்டார்கள். எந்த அறிவு என்றால் எனக்கு புரியவில்லையே என்றேன்.

அறிவிலும் பல அறிவு உண்டா? என்று சக மாணவர்கள் வியப்புடன் எங்கள் உரையாடலைக் கேட்டனர்.

 அறிவை பற்றி விளக்கும் முன் நீங்கள் எல்லோரும் அவரவர்க்குப் பிடித்தமான பழம் என்னவென்று கூறுங்கள் என்று ஹளரத் அவர்கள் கேட்டார்கள். ஆப்பிள், மாம்பழம், திராட்சை, ஆரஞ்சு என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழத்தை குறிப்பிட அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்ட ஹளரத் அவர்கள் இறுதியில் சொன்னார்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழத்தை விரும்புவதாக சொன்னீர்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்று கேட்டால் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்புவதற்கு  ஒவ்வொரு காரணத்தை  சொல்வீர்கள் இல்லையா? இப்பொழுது ஒருவர் என்னிடம் பழங்களில் சிறந்தது எது ? என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். 

நான் ஆப்பிள் என்று சொன்னால் மற்ற பழங்களை விரும்புகிறவருக்கு இந்த பதில் திருப்தியாக இராதது மட்டுமல்ல இதென்ன ஹலரத் சொல்வது அறிவிற்கு பொருத்தமாக இல்லையே? இன்ன பழமல்லவா சிறந்த பழம் என்று தான் விரும்பும் பழத்தைச் சொல்வார்.
ஏன்?

ஏற்கனவே, ஒன்றை பற்றி முடிவெடுத்து தன் மூளையில் பதிவு செய்த  பின் மற்றொன்றைப் பார்க்கும் பார்வையும் சிந்திக்கும் முறையும் வேறுபட்டு விடுகின்றன. அவன் விரும்பும் பாதையிலேயே அவனின் அறிவும் வேலை செய்யும்.

ஒரு விஷயம் சரியா ? தவறா? என அறிய விரும்புகிறவன் திறந்த மனத்துடன் அதை ஆராய வேண்டும். அப்பொழுது தான் அவனறிவு தன் இயல்பான தன்மையுடன் சிந்திக்கும் நல்லமுடிவு எடுக்கும். அவ்வாறன்றி, வேறொன்றை தன் இதயத்தில் நிரப்பி அவன் சிந்திக்கும் பொழுது அவன் அறிவு நோய் வாய்ப்பட்டு விடுகிறது. அவன் சிந்திக்கும் முறையும் வேறுபட்டுவிடுகிறது.

அவ்வாறே, இஸ்லாத்தின் சகல அம்சங்களும் “ஸலிமான அக்ல்” நோய்வாய்ப்படாத நல்லறிவுடன் சிந்திப்பவர்களுக்கு இஸ்லாத்தின் சட்டங்கள் சிறந்தவையாக அறிவுக்கு பொருத்தமானவையாகத் தெரியும்.

எனவே தான் உலகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் மற்ற மதத்தினை ஒப்பிட்டு நோக்கி பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே எனக் கூறியுள்ளனர். 

 ஆனால், குர்ஆன் கூறுவது போன்று உள்ளத்தில் நோய் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இஸ்லாத்தின் சில சட்டங்கள் அறிவிற்கு ஏற்புடையதாக இராது” என்று  விளக்கம் தந்தார்கள். 

மவ்லானா அஷ்ரஃப் அலிதானவி  ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் ஒரு முறை சொன்னார்கள்,

 “மனிதர்கள் பகுத்தறிவு பகுத்தறிவு என்கிறார்கள் இது வரை யாரும் பகுத்தறிவிற்கு விளக்கம் தரவேயில்லை. எந்த ஒன்று அவர்களின் கண்ணிற்கு புலப்படவில்லையோ அவர்களின் சிந்தனைக்கு எட்டவில்லையோ அவைகள் எல்லாம் பகுத்தறிவிற்கு முரணானது என்று சொல்வார்கள். 

குழந்தை பிறப்பது எப்படி என்பதை தெரியாத ஒருவன் தன் தாயாரிடம் நான் எப்படி எங்கிருந்து வருகிறேன் என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தன் ஒட்டிய வயிற்றை சுட்டி காட்டி இங்கிருந்து தான் வந்தாய் என்று சொனால் அவன் நம்புவானா?

 எந்த பகுத்தறிவும் புரிந்து கொள்ள முடியாத ஒரு அற்புதம் உடலில் குழந்தை உருவாவது. ஆனால், அது நித்தம் நித்தம் நடை பெறுவதால் அதை ஒரு அற்புதம் என்று யாரும் சிந்திப்பதில்லை.

 எந்த ஒரு பகுத்தறிவாளனும் ஒரு சிறு விந்து துளி இன்னொரு ஜீவன் வழியாக குறைந்த எடை உள்ள  கருப்பப்பைக்குள் நுழைந்து கர்ப்பப்பையை  விட அதிக எடையுள்ள ஒரு ஜீவனை  உருவாக்கிறது என்றால் பகுத்தறிவு ஏற்று கொள்ளுமா? அது ஏன்  என்று எந்த பகுத்தறிவாளனால் அறிவுப்பூர்வமாக சொல்ல முடியுமா?

சிலருக்கு ஏன் குழந்தை  பிறப்பதில்லை ?சிலருக்கு ஏன் ஆண் குழந்தை மட்டும் பிறக்கிறது ? என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் விடை இருக்கிறதா ? 

ஏன் எப்படி என்று கேட்டால் அது ஒரு இயற்கையின் வினோதம் என்று சொல்லி விட்டு போய்விடுவான். விஞ்ஞானம் எப்படி என்பதற்கு தான் விளக்கம் தந்திருக்கிறதே தவிர ஏன் என்பதற்கு இதுவரையிலும் விளக்கம் தரவில்லை. எனவே, மனிதன் தன் அறிவிற்கு எட்டாததை பகுத்தறிவிற்கு முரணானது என்று சொல்லுகிறான். அவனது அறிவிற்கு எட்டாவிட்டாலும் நித்தம் நித்தம் நடக்கின்ற பல அற்புதங்களை அவன் பகுத்தறிவிற்கு ஏற்றது என்று சொல்லுகிறான்.”

   குர்ஆனும் ஹதீஸும் எதை சொல்லுகிறதோ அதை ஏற்று கொள்கின்றவன் தான்  உண்மையான பகுத்தறிவாளன், 

“ஹதீஸே குத்ஸி” யில் அல்லாஹ் முதல் முதலில் அறிவை படைத்தான். அதை பார்த்து  முன்னால் வா என்றான் அது முன்னாள் வந்தது. பின்னால் போ என்றான் அது பின்னால் போனது. 
இதற்கு ஹளரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள். “ இந்த ஹதிஸ் சொல்வது என்னவென்றால் அறிவுள்ளவன் அல்லாஹ் ஏவியதை செயல்படுத்துவான் அல்லாஹ் தடுத்ததை விலக்கி கொள்வான் “

      தேவ்பந்த் தாருல் உலூம் பல் கலை கழக  நிறுவனர் காஸிம் நாநூத்தவி ரஹீமஹுல்லாஹ்  அவர்கள் தன் மாணவர்களுடன் உரையாடி கொண்டிருக்கின்ற பொழுது “நபிகள் நாயகம்சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தங்கத்தை ஆண்களுக்கு ஏன் ஹராமாக்கினார்கள்? அதற்கு காரணம் என்ன? என்று ஒருவர் கேட்டார்.

அவரை நோக்கி முறைத்த ஹளரத் அவர்கள் நபி ஸல்லலாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னது உன் அறிவிற்கு ஏற்றால் தான் நீ கடைப்பிடிப்பாயா? நீ மூஃமினாக இருந்தால்  நபி சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றவுடன் அவர், தவ்பா தவ்பா என்று சொல்லிக் கொண்டே  போய்விட்டார்.

அதன்பின் மாணவர்கள் அந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு தங்கம் ஹராம்? என்று கேட்டார்கள். ஹளரத் அவர்கள் சில விளக்கங்களை சொன்னார்கள்.

அதை கேட்ட மாணவர்கள், இந்த விளக்கத்தை அந்த சகோதர ரிடத்திலும் சொல்லியிருக்கலாமே ஏன் நீங்கள் அவரிடம் கோபமாக பேசி அனுப்பி விட்டீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு ஹளரத் அவர்கள், அல்லாஹ்வும் ரஸூலும் ஒரு சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் நமக்கு தெரியாத பல காரணங்கள் இருக்கும். சிலவற்றை நாமாக யூகித்து சில விளக்கங்களை தருகிறோம். அல்லாஹ் அதற்காகத்தான் அந்த சட்டத்தை இறக்கினான் என சொல்ல முடியாது ஆழமான மார்க்க அறிவு இல்லாதவர்கள் அல்லாஹ் விதித்த கடமைக்கு இது தான் காரணம் என்று ஒருவன் சொல்ல அதை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டால் மற்றொரு திறமையான பேச்சாற்றல் உள்ள ஒருவர் அந்த விளக்கத்தை தவறு என்று நிருபித்தால் அல்லாஹ் வகுத்த  அந்த சட்டத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எனவே, அல்லாஹ் சொன்னான், நபி சொல்லியிருக்கிறார்கள் அதனால் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஒரு முஃமீன் சொல்வது தான்  உறுதியான  ஈமானின் வெளிப்பாடாகும். “ என்றார்கள்.

   நான் லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வாரில் ஓதும் பொழுது ஒரு பட்டம் பெரும் மாணவர் ஜும்மாவில் தொழுகையின் சிறப்பை பற்றி பேசினார் “ தொழுகை உடற்பயிற்சி செய்வது போன்றாகும் என்று சொல்லி ஸுப்ஹு, லுஹர், அஸர், மஃரிப், இஷா என்று ஒவ்வொரு வக்து தொழுகையும் எப்படி உடற்பயிற்சி ஆகிறது என்று சொல்லி விளக்கினார்.

 தொழுகை முடிந்து மதரஸாவிற்கு வந்த பொழுது மதரசாவின் வாயிலில் அமர்ந்து இருந்த அல்லாமா அமானி ஹளரத் அவர்கள் இன்று ஜும்மாவில் என்ன பயான் செய்தாய்?

உடல்நலத்திற்காக தான் அல்லாஹ் தொழுகையை கடமையாக்கினான் என்பதை போன்று உன் பேச்சு இருந்தது. அப்படியானால், ஒருவன் நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன் என் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது எனவே  நான் தொழ வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னால் உன்னிடம் பதில் இருக்கிறதா?அது போன்று சிலர் பசியின் கொடுமையை அறிவதற்காக தான் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று பேசுவார்கள். அப்படியானால் பசியால் வாடும் ஏழைகளுக்கு நோன்பு கடமையில்லையா?.

 எனவே, நாம் பேசும் பொழுது அல்லாஹ்வின் கட்டளையை நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதை ஏற்று தான் ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்படி ஏற்று செயல் படும் பொழுது இந்த உலகத்தில் உடலுக்கும் அது நன்மை பயக்கும் என்ற ரீதியில் தான் நாம் பேசவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

 என் அறிவிற்கு பொறுத்த மாக இல்லை என்றால் ஹதீஸை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என ஒரு முஸ்லிம் சொல்வதற்கும்  இறைவன் இருப்பது ,மறுமை என்பதெல்லாம் எங்கள் அறிவிற்கு பொறுத்த மாக இல்லை எனவே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லும் நாத்திக வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் ?

    1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6   اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7   صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

Monday, October 28, 2019

பஜ்ர் தொழுகை தூக்கத்தை விட ஏன் சிறந்தது?

ஏன் தொழுகை தூக்கத்தை விட சிறந்தது?
**************************
   ஏனென்றால் தூக்கம் மன இச்சையின் அழைப்பு
தொழுகை மனிதனைப் படைத்த இறைவனின் அழைப்பு.

#தொழுகை_தூக்கத்தை_விடசிறந்தது:
ஏனென்றால், தூக்கம் சிறு மரணம்
பஜ்ர் தொழுகை புதிய வாழ்க்கை.

#தொழுகை_தூக்கத்தை_விடசிறந்தது
ஏனென்றால்,தூக்கம் உடலுக்கு ஆரோக்கியம்
தொழுகை ஆன்மா விற்கு ஆரோக்கியம்.

#தொழுகை_தூக்கத்தைவிடசிறந்தது
ஏனென்றால் தூக்கத்தில் இறைநம்பிக்கையாளனும், 
 இறை நிராகரிப்போனும் ஒன்றாக இணைகிறார்கள்
ஆனால் தொழுகையை இறைவிசுவாசி மட்டுமே நிறைவேற்றுகிறான்.

"எங்கள் காலத்தில் தொடர்ந்து பஜ்ரு தொழுகைக்கு வராதவரைப் பற்றி அவர் முனாபிக்காக இருப்பாரோ என சந்தேகிப்போம்" என நபித்தோழர்கள் சொல்கிறார்கள்.

பஜ்ரு தொழுகையைத்  தொடர்ந்து தொழாதவர்கள் சுயபரிசோதனை  செய்யட்டும் 
'நாம் ஏன் தொழுவதில்லை? என்று' .

#பஜ்ரு_தொழுவோம்"
      ---கணியூர் இஸ்மாயீல் நாஜி

Sunday, October 27, 2019

ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்து சொல்லலமா

பிறந்த நாள் ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்து சொல்லலாமா?

---------------------------------------------------------------------------------------------
பிறந்த நாளை மாற்று மத சகோதரர்கள் சிறப்பான நாளாக கருதி அதை கொண்டாடுகிறார்கள் .கொண்டாட்டம் என்றால் அன்றைய நாளை பெருநாளாக கருதி கோவிலுக்கு போவது பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது சிறப்பு விருந்து மெழுகுவர்த்தி கொளுத்துவது என கொண்டாடுவார்கள்.இத்தகைய கொண்டாதிற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை ஏனென்றால் இரு பெருநாள்கள் மட்டுமே கொண்டாட தகுதி வாய்ந்தவை.
ஆனால் ஒரு முஸ்லிம் இன்று எனக்கு பிறந்த நாள் இத்துணை ஆண்டுகள் என அல்லாஹ் என்னை வாழ வைத்ததைப் போல
மேலும் பல ஆண்டுகள் வாழ துஆ செய்யுங்கள் என கேட்டாலோ அல்லது மற்றவர்கள் அவருக்காக துஆ செய்தாலோ அது பாவமாகுமா ? என்பது இன்றைய என்  கேள்வி  
 
பித் அத் என்பது அல்லாஹ் அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் வழியாக பரிபூர்ணப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபி அவர்கள் தங்கள் சொல்லால் ,செயலால் ,அங்கிகாரத்தால் அனுமதிக்காத ஒன்றை மார்க்கம் என்ற பெயரால் இதனை செய்வது சுன்னத் என்றோ அல்லாஹ்வின் கூலி கிடைக்குமென்றோ  சொன்னால் செய்தால் அதுதான்    பித் அத் ஆகுமே தவிர பிறந்த நாள் அன்று நமக்கு ஒரு வயது முடிந்துவிட்டது மேலும் பல ஆண்டுகள் வாழ அருள் புரி அல்லாஹ் என கேட்பதாலோ பிறரிடம் துஆ கேட்க சொல்வதாலோ
பிறர் நமக்கு துஆ செய்தாலோ அது பித் அத் எனும் வரம்புக்குள் வராது என்பது  என்  கருத்து.
ஹிஜ்ரி புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வது தொடர்பாக மறைந்த சவுதி தலைமை முப்தி அப்துல் அஜீஜ் இப்னு பாஜ் அவர்கள் அந்த நடைமுறை நபிகளார் காலத்திலோ ,நபி தோழர்கள் காலத்திலோ இல்லை இருப்பினும்  ஒருவர் இந்த வருடம் முழுவதும் நீங்கள் நன்றாக இருங்கள் என வாழ்த்தும்போது வ லக ஆமீன் உங்களுக்கு அப்படி ஆகட்டும் என்று சொல்வதோ அல்லது அவர் மற்றவர்களுக்கு துஆ செய்வதோ குற்றமில்லை என சொல்கிறார்.
எனவே அல்லாஹ் வும் நபியும் ஹராம் என சொல்லாத ஒன்றை ஹராம் என சொல்பவர்கள் அதற்கான சரியான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் 
இதில் நான் எந்த இடத்தில் தவறு கிறேன் என சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன் இன்ஷாஅல்லாஹ் 
இது ஒரு ஆரோக்கியமான விவாதம் குரான் ஹதீஸ் அடிப்படையில் பதில் சொல்பபவர்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம் 
அல்லாஹ் நேரான வழியைக் காட்டுவானாக

Thursday, October 17, 2019

பேராசையால் தனது மகனின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தந்தை

பேராசையால் தன் மகனின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தந்தை.
----
1967ம் ஆண்டு தேவ்பந்த் மதரஸாவிற்கு டெல்லிவரை ஒரு 'ரயிலிலும்', டில்லியிலிருந்து வேறொரு ரயிலிலிலும் தேவ்பந்த் செல்ல வேண்டும்.
அது தொடர்பாக  முன்பதிவு செய்ய அங்கே ஏற்கனவே கல்வி கற்று வரும் ஒரு சகோதரரிடம் ஆலோசனை கேட்டேன்.
    ரயிலில் செல்லும் மாணவர்களுக்கு இருவழி கட்டண சலுகை உண்டு.
இறுதியாண்டு மாணவர்கள் திரும்பிச் செல்லமாட்டார்கள்,ஆனால் அந்த பாஸ் அவர்களிடம் இருக்கும் அதை வாங்கி அவர் பெயரில் நீ கட்டண சலுகையுடன் டெல்லி செல்லலாம் ' என்ற ஆலோசனையை வழங்கினார்.
     இதை என் தந்தை - யாக்கூப் வாத்தியாரிடம் சொன்னேன்.
   அந்நேரம் என் தந்தை மிகவும் பொருளாதார சிரமத்தில் இருந்தார்.பயணக்கட்டணம் குறையும் என்றால் நல்லதுதானே என எண்ணுவார் என்றே எண்ணினேன்.
     ஆனால் என் தந்தை, 'போறது,நேர்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும் மார்க்கக் கல்வியைக் கற்க, அதன் துவக்கமே பித்தலாட்டமா? நீ அந்த கல்லூரியின் மாணவனாக இன்னும் சேராதபோது அந்தக் கல்லூரின் மாணவன் என இன்னொரு மாணவனின் பெயரைப் பயன்படித்தி கட்டண சலுகை பெறுவது,அரசாங்கத்தை ஏமாற்றும் செயலல்லவா? ஆலிமான நீயே மோசடி செய்யலாமா?' எனக்  கண்டித்தார்.
     என் தந்தை நான் தவறுசெய்த பொழுதெல்லாம் அடித்துக் கண்டிக்கத் தவறியதில்லை.
      என் தந்தை  என் பாட்டனாரால் ஆரம்பிக்கப்பட்ட கணியூர் இஸ்லாமிய துவக்கப் பள்ளியின் தாளாளராக இருந்தார்.
   எங்கள் பள்ளியில் ஒரு கிருத்துவர் ஆசிரியராக இருந்தார். ஒருமுறை அவர் சர்சிற்குச் செல்லும் வழியிலிருந்த வைக்கோல் போரின் மீது நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அவ்வழியே வந்த அந்த ஆசிரியரின் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஒளிந்துகொண்டோம். இது போன்று இரண்டு மூன்று முறை செய்தோம்.
    மறுநாள் அந்த ஆசிரியர் பள்ளிக்கு வந்தவுடன் என் தந்தையிடம் சொல்லிவிட என் தந்தை மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களை அவமானப் படுத்தும்வண்ணம்  நடப்பியா? என பிரம்பால் அடித்தார். அதே நேரத்தில் எங்களிடம் நகைச்சுவையாகவும் பேசுவார்.
     ஒழுக்கத்தைக் செயல்வடிவில் கற்றுக் கொடுப்பவர்தான் தந்தை.
      நீட்தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் இளந்தளிர்களான அம்மாணவர்களைப் பார்த்து ஒரு இளைஞனின் தந்தை என்ற முறையில் என் மனம் பதைபதைத்தது.
    தந்தையின் பேராசையால்  அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
     கல்லூரி செல்லவேண்டியவன் சிறைக்குச் சென்றது அவன் உள்ளத்தை எவ்வளவு பாதித்திருக்கும்?
    இது எதனால் தன் மகனுக்கு நேர்வழியைக் கற்றுத்தர வேண்டிய தந்தையே அவனை தவறாக வழிநடத்தியதுதான் காரணம்.
       எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் மல்லிப்பட்டினத்தில் நடந்த மீலாது விழாவில் கலந்து கொண்டு நானும் #மறுமலர்ச்சி_ஆசிரியர்_நாவலர்
#ஏ_எம்_யூசுப்சாஹிபும்
பேருந்தில் ஒன்றாக  பட்டுக்கோட்டை பயணித்தோம். அப்பொழுது  அவர் என்னிடம் என் மகன் மருத்துவம் படிக்க ஆசைப் படுகிறான். நான் அவனிடம் சொல்லிவிட்டேன், எம்ஜிஆர் என் நண்பர் என்பதால் உனக்கு மருத்துவசீட்டு வாங்கித் தருவேன் என எதிர்பார்க்காதே! மெர்ரிட்டில்  நீ பாஸ் செய்தால் உன்னை அரசு மருத்துவக்கலலூரியில் சேர்க்கிறேன்' எனச் சொல்லிவிட்டேன் என்றார்.
தந்தை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி.

التهنيةبعيد غير المسلمين

https://archive.islamonline.net/?p=120

Monday, February 11, 2019

எண்ணங்கள் தூய்மையானால் அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் வணக்கமே


எண்ணங்கள் தூய்மையானால்
அனுமதிக்கப்பட்ட செயல்கள்
அனைத்தும் வணக்கமே!
-----------கணியூர் இஸ்மாயீல் நாஜியின்
ஜும்மா உரையிலிருந்து
**;********************************
லால்பேட்டை அரபிக் கல்லூரியில் நான் கல்வி பயிலும் பொழுது முப்தியுல் அஃலம் ‘கைருல் மில்லத்’ அல்லாமா அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “ துன்யாவை வெறுக்க வேண்டும், துன்யாவிற்காக வாழக் கூடாது என்கிறார்களே. துன்யா என்றால் என்ன??’ என எங்கள் வகுப்பில் கேட்டார்கள்.
இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்றார் ஒருவர். திருமணம் செய்து குடும்பம் நடத்துவது துன்யா என்றால் அல்லாஹ்வும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதனை ஏன் வலியுறுத்தியுள்ளார்கள் என்றார்கள் ஹளரத்.
பொருள் தேடுவது என்றார் மற்றொரு மாணவர். தொழுகை முடிந்து விட்டால் பூமியெங்கும் பரவி அல்லாஹ்வின் அருளான பொருளைத் தேடுங்கள்” என குர்ஆன் கூறுகிறதே எனக் கூறி புன்னகை புரிந்தார்கள்.
ஒவ்வொரு மாணவரும் மனிதர்கள் விரும்பும் ஒவ்வொரு செயலினைக் கூற அத்தனைக்கும் ஒரு பதிலைக்கூறி அந்த செயலினை சரிதான் என்றார்கள். இறுதியில் பொறுமை இழந்த நாங்கள் தாங்களே சொல்லுங்கள் என்றோம்.
مأ انساك عن ذكرالله فهو للدنيا .
எவையெல்லாம் அல்லாஹ்வின் நினைவை விட்டும் உன்னை மறக்க வைக்கிறதோ அவையெல்லாம் துன்யா” என்றார்கள்.
ஆம்! அல்லாஹ்வின் நினைவின்றி நாம் தொழுதால் அதுவும் துன்யா தான். வீண் பகட்டுக்காக தான தர்மம் செய்தால் அதுவும் துன்யா தான். அதற்கு மாற்றமாக மனிதன் அல்லாஹ்வின் நினைவுடன் அவன் திருப்தியைப் பெறும் நோக்குடன் செய்யும் காரியங்கள் அனைத்தும் மறுமைக்கானது. அதற்கான நன்மை உண்டு. அது வெளிரங்கத்தில் இவ்வுலகத்திற்கான செயலாகத் தெரிந்தாலும் சரியே.
ஒருவர் தன் கடையை திறப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறும் போது,
“பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ், லா ஹவ்ல வஅலா குவ்வத இல்ல பில்லாஹ்” என்று கூறியவராக ஹலாலான முறையில் வியாபாரம் செய்து என் குடும்பத்தை பராமரிப்பதுடன், ஈட்டும் வருமானத்தில் தான, தர்மம் செய்வேன் என்ற நிய்யத்துடன் தன் கடைக்கு செல்கிறார்.
இஸ்லாம் வலியுறுத்தும் நெறியுடன் வியாபாரம் செய்கிறார். பொருட்களை அளவிலும், நிறுத்தலிலும் மோசடி செய்யாதே என்ற குர்ஆனின் வசனத்தை நினைவில் கொண்டு வியாபாரம் செய்கிறார்.
நிறுக்கின்ற பொருளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை வாடிக்கையாளரிடம் சுட்டிக் காட்டி அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு விற்பனை செய்கிறார்.
இவை அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்தார் என்றால், இந்த வியாபாரம் வணக்கமாக, மறுமைக்கானதாக மாறி விடுகிறது.
உங்கள் முன்னாள் நான் பயான் செய்கிறேன். குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் அடுக்கடுக்காக உங்கள் முன்னால் பேசுகிறேன். இந்த செயல் மறுமைக்கானதா? இவ்வுலகிற்கானதா? என்பது எனது எண்ணத்தை பொறுத்து தான் அமையும்.
நான் செய்கின்ற இந்த பயானின் மூலம் என் நோக்கம் எல்லோரும் பாராட்ட வேண்டும். நன்றாக பேசுகிறார் என்று புகழ வேண்டும் என்று இருந்தாலோ அல்லது உங்களிடமிருந்து எதாவது உதவி கிடைக்கும் என்ற நோக்கம் இருந்தாலோ நான் பேசிய குர்ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ எந்த நன்மையையும் தராது.
மாறாக, அல்லாஹ் எனக்களித்திருக்கின்ற கல்வி ஞானத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதன் மூலம் மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்று நிய்யத் செய்தால் இந்த செயல் மறுமைக்கானதாக, நன்மைக்குரியதாக மாறும்.
அதே போன்று ஒருவர் ஹஜ் செய்கிறார், உம்ரா செய்கிறார் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் செய்தால் அக்காரியம் துன்யாவுடைய காரியமாக மாறிவிடும். அல்லாஹ்வின் திருப்தியை பெரும் நோக்குடன் செய்தால் அந்த காரியம் மறுமைக்கானதாக மாறும்.
இவ்வாறே, நம் அன்றாடம் செய்யும், அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப்திக்காக என செய்தால் அவை அனைத்தும் வணக்கமாக மாறிவிடும்.
உதாரணமாக, நாம் காலையில் பல் விலக்குகிறோம் அந்நேரத்தில் பல் துலக்குவது சுன்னத் என்றும் மஸ்ஜிதிற்கு சென்றால் அருகில் தொழுபவர்களுக்கு துர்நாற்றம் அடிக்க கூடாது என்ற நோக்கத்தோடு நாம் பல் விலக்கினால் அவை நன்மை தரகூடியதாக இபாதத்தாக மாறி விடுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை. நாம் அனைவரும் காலையில் குளித்திருப்போம். இது எப்போதும் வழமையாக செய்யும் வேலை தான். அதே நேரத்தில், இன்று நாம் குளிக்கும் போது வெள்ளிக்கிழமை குளிப்பது நபிகளார் வலியுறுத்திய சுன்னத் என்று நிய்யத் செய்து குளித்தால் அது வணக்கமாக, நன்மை தரும் செயலாக மாறிவிடுகிறது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியால்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு தாங்கள் வசிக்கும் வீட்டின் தெருவழியாக போவார்களாம். தொழுது முடித்து செல்கின்ற போது கடைத் தெரு வழியாக வீட்டிற்கு செல்வார்களாம்.
அதை பார்த்த ஒரு மனிதர், நபி தோழரே! இடங்களில் மோசமானது கடைத்தெரு என்று நபிகளார் சொல்லியிருக்க நீங்கள் ஏன் கடை த்தெரு வழியாக செல்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு, தெரிந்தவருக்கும் தெரியாதவர்களு க்கும் ஸலாம் சொல்லுங்கள் என நபியவர்கள் சொன்னார்கள், வழக்கமாக செல்லும் தெரு வழியாக சென்றால் நமக்கு தெரிந்தவருக்கு மட்டும் தான் ஸலாம் சொல்ல முடியும் கடைத்தெரு வழியாக சென்றால், நமக்கு அறிமுகமில்லாத பலரை பார்த்து ஸலாம் சொல்ல முடியும். எனவே அந்த ஹதீஸை நிறைவேற்றுவதற்காக கடைத்தெரு வழியாக செல்கிறேன் என்று சொன்னார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் இமாம் ஜாஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், எப்பொழுதும் அனுமதியள்ளிக்கப்பட உயர் தர ஆடையையே அணிவார்களாம். அவர்களிடம் ஒருவர் கேட்டார். நபியுடைய பேரராக இருந்துக் கொண்டு ஏன் நீங்கள் ஆடம்பரமான ஆடையை அணிகிறீர்கள். உங்களுக்கு இவ்வுலக ஆசை வந்துவிட்டதா என்று கேட்டார்.
அதற்கு இமாம் அவர்கள் தான் அணிந்திருந்த மேல் சட்டையை கழட்டிக் காட்டினார்கள். உள்ளே, குத்துகின்ற கம்பளி ஆடையை அணிந்திருந்தார்கள். இந்த உலக இன்பங்களை அனுபவிக்க கூடாது என்பதற்காக நான் இந்த ஆடையை அணிந்திருக்கிறேன். வெளியே ஏன் செல்வந்தர்களுக்கான ஆடையை அணிந்திருக்கிறேன் என்றால், உதவி கேட்டு வரும் ஏழைகள் நான் செல்வந்தரை போன்று காட்சியளித்தால், என்னிடம் வந்து உதவி கேட்பார்கள் என்பதற்காக தான் இந்த ஆடையை அணிகிறேன் என்றார்கள்.
தன்னுடைய புதிய வீட்டிற்கு மாணவர் ஒருவர் தன்னுடைய குருநாதரை அழைத்துச் சென்றார். அந்தவீட்டின் கூடத்தின் மேல் பகுதியில் சின்ன சின்ன ஜன்னல்களை அமைத்திருப்பதைக்கண்டு இது எதற்காக என குருநாதர் கேட்டார்
நன்றாக காற்றுவருவதற்காக என்றார மாணவர்.
அடடா நன்மையை வீணாக்கிவிட்டாயே
மஸ்ஜிதில் சொல்லப்படும் பாங்கொலி தெளிவாக கேட்கவேண்டும் என நிய்யத்துடன் இந்த ஜன்னல்களை அமைத்திருந்தால் நன்மையும் கிடைத்திருக்கும் காற்றும் தானாக வந்திருக்கும் என்றார்.
உணவு பரிமாறும் மனைவிக்கு அன்புடன்வாயில் உணவூட்டுவதும் தர்மம் என நபிபெருமான்ﷺ சொன்னதை நினைவில் கொண்டு உங்கள் மனைவிக்கு உணவூட்டினால் மனைவி மகிழ்வடை வதுடன் அல்லாஹ்வின் நற்கூலியும் கிடைக்கும்.
இவ்வாறு, அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியை பெரும் நோக்குடன் செய்தால் அவை அனைத்தும் இபாதத்தாக, வணக்கமாக, மறுமைக்கானதாக மாறிவிடும்.