Tuesday, December 19, 2017

போராட்டங்கள் தோல்வியடைவது ஏன்?

போராட்டங்கள் தோல்வியடைவது ஏன்?
********************************************
  மதரஸாவில் கல்வி கற்கும் போதும்,உஸ்தாதாக பணியாற்றும் போதும்  நான் படித்ததில் பிடித்ததை எழுதிவைக்கும் வழக்கமுண்டு. ஏறக்குறைய முப்பது,நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்த கையெழுத்துப்பிரதிகள் பல கரையான்களால் அழிக்கப்பட்டுவிட்டன.
இன்றும் பல கிதாபுகளும் ,நோட்டுபுக்குகளும் சற்று சிதிலமடைந்த நிலையில் கைவசம் இருக்கின்றன.
  இன்று வேறொரு கிதாபைத் தேடும்போது ஒரு குறிப்பு புத்தகம் கிடைத்தது. அதில் பல ஹிகாயத்கள்,சம்பவங்கள் படிக்க சுவையாக இருந்தன.
   அதில் ஒரு கதை தான் இது,
      அக்காலத்தில் ஒரு வணக்கசாலி இருந்தார். ஒரு ஊரில் மக்கள் ஒரு மரத்தை வணங்குவதை அறிந்து  அதை வெட்டி வீழ்த்த கோடலியுடன் சென்றார்.
    அந்த மரத்தை வைத்து வருமாணம் ஈட்டும் பூசாரி அதை வெட்ட விடாமல் தடுத்தான். இருவருக்கும் சண்டை நடந்தது.
அதில் வணக்கசாலி வெற்றி பெற்று கோடலியால் மரத்தை வெட்ட ஆரம்பித்தார்.
    அருகே  வந்த பூசாரி சற்று நான் சொல்வதை கேளுங்கள்.
இந்த மரத்தை நீங்கள் வெட்டினாலும் ,நான் வேறொரு மரத்தை வைத்து மக்களை வணங்கச்செய்வேன். உங்களால் எத்தனை மரத்தை வெட்ட முடியும். உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது, வறுமையில் வாடுவதைப் போல் தெரிகிறது, உங்களுக்கு நான் தினந்தோறும் காலை இரண்டு தினார் உங்கள் வீட்டு வாசலில் வைத்து விடுகிறேன், நீங்கள் திரும்பிப்போங்கள் எனச்சொன்னான்.
   ஷைத்தானின் வலையில் விழுந்த வணக்கசாலி  மரத்தை வெட்டாமல் திரும்பி விட்டார்.
  பூசாரி சொல்லிய வண்ணம் தினந்தோறும் தினார்கள் வந்து கொண்டிருந்தன.
    சில நாட்கள்  சென்ற பின் தினார்கள் வருவது நின்று போனது கோபமடைந்த வணக்கசாலி பூசாரியிடம்  சென்று கேட்க அவன் திமிராக இனிமேல் கொடுக்க முடியாது என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள் என்றான்.
   ஆத்திரமடைந்த வணக்கசாலி கோடலியை எடுத்துக்கொண்டு மரத்தை வெட்ட முயன்றார், பூஜாரி தடுக்க இருவரும் சண்டை இட  இம்முறை பூஜாரி வெற்றி பெற்றான்.,
       வியப்படைந்த வணக்கசாலி அன்று தோற்றுப்போன நீ   இன்று எப்படி வென்றாய்? என கேட்டார்.
     அதற்கு பூஜாரி சொன்னான்:
     அன்று நீ சண்டையிட்டது சத்தியத்திற்காக, இன்று நீ சண்டையிட்டது தீனாருக்காக எனவே நீ தோல்வியுற்றாய்"
என்றான்.
     இந்த நிகழ்வு கதையாக இருக்கலாம்,ஆனால் அது சொல்லவரும் நீதி சிந்திக்கத்தக்கது.
    சத்தியத்தை நிலைநாட்ட நடைபெறும் போராட்டத்தால் உடனடியாக வெற்றி கிடைக்காவிட்டாலும்,அது மக்கள் மத்தியில்  மெதுவாக தாக்கத்தை ஏற்படுத்தி ஒருநாள் வெற்றிபெரும்.
   ஆனால் இவ்வுலக ஆதாயத்தைப் பெறும் நோக்கோடு நடைபெறும் போராட்டங்களால்  அசத்தியத்தை ஒரு நாளும் வீழ்த்த முடியாது.
     ---**-கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி.

Wednesday, December 13, 2017

பெண் பிள்ளைகள்

எனக்காக கதவை திறப்பவள் இவள்தான்
ஒரு குட்டிக் கதை
**************************
புதிதாக  திருமண அந்த இளம்ஜோடி
ஒருநாள் "இன்று முழுவதும் நாம் யாரையும்
சந்திக்காமல் தனியாக இன்றைய நாளை கழிப்போம்,
யார் வந்து கதவைத்தட்டினாலும் எந்த பதிலும்
சொல்லாமல் மவ்னமாக இருந்துவிடுவோம்"என முடிவு செய்தனர்.
   
சற்று நேரத்தில் கணவனின் பெற்றோர் வந்து கதவைத்
தட்டினர்.கணவன் மனைவியைப் பார்த்தான்.
மனைவி நம் முடிவின்படி கதவைத் திறக்கக்கூடாது என கிசுகிசுத்தாள். கணவன் அமைதியாக இருந்துவிட்டான்.
பெற்றோர் திரும்பிச் சென்று விட்டனர்.

   கொஞ்சநேரத்தில மீண்டும் கதவைத்தட்டும் சத்தம் கேட்டது, இம்முறை மனைவியின் பெற்றோர்.
    கணவன் மனைவியைப் பார்த்தான்,அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியதைக் கண்டு பதறிப் போய் "என்னம்மா என்னாச்சு" என்றான்,
     என் நல்வாழ்விற்காக எவ்வளவோ தியாகம் செய்த என் பெற்றோர்களை என்னை பார்க்காமல் திருப்பி அனுப்புவதை எண்ணி மனம் கலங்குகிறது"என்றாள் மனைவி.
    மனமுருகிய கணவன் அழாதே! நம் முடிவை கைவிட்டு உன் பெற்றோரை அனுமதிப்போம் என்று கூறியவாறு கதவைத் திறந்தான்.
    ஆண்டுகள் பல கடந்தன. அடுத்தடுத்து நான்கு ஆண்குழந்தைகள் பிறந்தன.
ஐந்தாவதாக பெண்குழந்தை பிறந்தது .கணவன் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான்.
   ஊர்மக்கள் அனைவரையும் அழைத்து பெரியளவில் விருந்தளித்தான்,
      வந்திருந்த மக்கள், "நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றபோது ஏற்படாத பெருமகிழ்ச்சி ஒரு பெண் பிள்ளை பெற்றவுடன் ஏற்பட்டது ஏன்? என வினவினர்..
      கணவன் சொன்னான்:
இந்த செல்லப்பெண்தான் எங்களது வயதான காலத்தில் எங்களுக்காக தனது வீட்டு வாசற்கதவைத் திறப்பவள்"
------- அரபு சிறுகதை. தமிழில் கணியூர் இஸமாயீல் நாஜி பாஜில்மன்பஈ,தேவ்பந்தி

Sunday, December 10, 2017

குர்ஆனின் வாரத்தைகள் இறைவனுடையதா?

குர்ஆனின் வார்த்தைகள் இறைவனுடையதா?
முஹம்மது நபி(ஸல்) அவர்களுடையதா?
------அல்லாமா இக்பால் அவர்களிடம் கேட்கப்பட்ட
கேள்வி.
******************************************************
     லாஹூர் கிருத்துவ கல்லூரி யில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு கவிஞர் அல்லாமா இக்பால் அழைக்கப்பட்டிருந்தார்.
விழாவின் முடிவில் கல்லூரி முதல்வர் கவிஞரை தனியே அழைத்து என்னுடைய கேள்விக்கு அறிவுபூர்வமாக பதில் சொல்லுங்கள் என ஆரம்பித்து ,
#உங்கள் முஹம்மத் நபிக்கு  உங்கள் இறைவன் குர்ஆனின் கருத்துகளை அவர்களின் உள்ளத்தில் உதிக்கச்செய்து அக்கருத்திற்கு பொருத்தமான   வார்த்தைகளை  முஹம்மதுநபி அமைத்துக்கொண்டார்களா?
இல்லை,கருத்துகளும்,அரபிவார்த்தைகளும் இறைவனால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டதா?"எனக்கேட்டார்.

   சற்றும் யோசிக்காமல், "கருத்தும்,வார்த்தைகளும்,வாக்கியங்களும் இறைவனால் நபியவர்களுக்கு அருளப்பட்டவை என பதிலளித்தார் கவிஞர்.

வியப்புடன் அவரைப் பார்த்த கல்லூரி முதல்வர் "என்ன கவிஞரே! நீங்கள் எவ்வளவு பெரிய அறிஞர்,கவிஞர்,சிந்தனையாளர் அப்படிப்பட்ட நீங்கள் அடிப்படை ஆதராமில்லாத ஒரு செய்தியை எப்படி நம்புகிறீர்?
அவ்வாறு நம்புவதற்கு என்ன ஆதாரம்? எனக்கேட்டார்.
     எனது கவிதைகள்தான் ஆதாரம் என்ற   கவிஞர் "  நான் ஒரு மனிதன்,கவிஞன் எனக்கு  கவிதை எழுதும் மனநிலை  ஏற்படும் தருணங்களில்  என் உள்ளத்தில் கவிதைக்கான கருவும்,அதை ஆழமாக வெளிப்படுத்தும் சொற்களும் வெள்ளமென பெருகும்
நான் அவைகளை எழுத்தில் கொண்டு வருவேன்.எழுதி முடித்தபின் கவிதையின் சொற்களில் ஏதேனும்  மாற்றம் செய்யலாமா? என பல முறை முயற்சிசெய்திருக்கிறேன்.ஆனால் முதலில் எனதுள்ளத்தில் ஏற்பட்ட அந்த சொல்லிற்கிணையான வேறு சொல்லை என்னால் அந்த இடத்தில் அமைக்க இயலவில்லை. அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன் இதுதான் இறைவன் விரும்பும் சொல் என.
     என்னைப் போன்ற ஒரு கவிஞனின் உள்ளத்திலேயே ஒரு கவிதைக்கான வார்த்தைகளை-சொற்களை இறைவன் தேர்ந்தெடுத்து அவன் உள்ளத்தில் உதிக்கச் செய்யும் பொழுது 
மக்களுக்கு நேர்வழிகாட்ட இறைவன் அனுப்பிய இறுதி தூதர் முஹம்மது நபி ﷺ  அவர்களுக்கு அருளப்பட்ட இறுதி வேதமான குர்ஆனின் வார்த்தைகள் மட்டும் இறைவனின் வார்த்தைகளாக இல்லாமலிருக்குமா?"
என்றார்கள் அல்லாமா இக்பால்(ரஹ்)
    கல்லூரி முதல்வர் வாயடைத்துப் போய் நின்றார்.
       ------------Islamic Movement(urdu) Fortnighty April,May 1984
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ ,தேவ்பந்தி
  ------

Saturday, December 2, 2017

اتمام الصفوف

https://islamqa.info/ar/158560

Monday, November 27, 2017

http://www.saaid.net/Doat/hamesabadr/120.htm

வேடிக்கை மனிதன்

தினந்தோறும் மனிதன் இரவு பகல் மூன்று வகையாக சோதிக்கப்படுகிறான்.ஆனால் அவன் அவைகளில் ஒன்றிலிருந்தும் படிப்பினைப் பெறுவதில்லை.

1.ஒவ்வொரு நாளும் தன் வாழ்நாட்களில் ஒன்றை இழக்கிறான்.ஆனால் அதைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை,அதற்கு முக்கியத்துவத்தையும் கொடுப்பதில்லை.. மாறாக பொருளாதார இழப்பு ஏற்பட்டால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்,அதைப்பற்றி கவலைப்படுகிறான்.

2. ஒவ்வொரு நாளும் அல்லாஹ் அளிக்கும் ரிஜ்கை உண்ணுகிறான். அது ஹலாலாக இருந்தால் மறுமையில்  அதற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினாயா?எனக் கேட்கப்படுவான். அது ஹராமான வழியில் வந்திருந்தால் மறுமையில் தண்டிக்கப்படுவான்.
அதைப் பற்றி அவன் சிந்திப்பதில்லை.

3. ஒவ்வொரு நாளும் மெது,மெதுவாக மறுமையின் பால் நெருங்கிக் கொண்டிருக்கிறான், அதே அளவு இவ்வுலக வாழ்க்கையிலிருந்து தூரமாக நகர்ந்து கொண்டிருக்கிறான். நிலைமை  இவ்வாறிருக்க
அழியப்போகும் இவ்வுலக வாழ்க்கைக்கு  கொடுக்கும் முக்கியத்துவத்தை அழியாத மறுமைவாழ்க்கைக்குக் கொடுப்பதில்லை.
நாம் செல்லுமிடம் சொர்க்கமா எனும் சிந்தனையின்றி வாழ்க்கையை கடக்கிறான்.
    வேடிக்கையான மனிதன்.
-----------அரபு  இணைதளத்திலிருந்து கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி

வேடிக்கை மனிதன்

தினந்தோறும் மனிதன் இரவு பகல் மூன்று வகையாக சோதிக்கப்படுகிறான்.ஆனால் அவன் அவைகளில் ஒன்றிலிருந்தும் படிப்பினைப் பெறுவதில்லை.

1.ஒவ்வொரு நாளும் தன் வாழ்நாட்களில் ஒன்றை இழக்கிறான்.ஆனால் அதைப்பற்றி அவன் கவலைப்படுவதில்லை,அதற்கு முக்கியத்துவத்தையும் கொடுப்பதில்லை.. மாறாக பொருளாதார இழப்பு ஏற்பட்டால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்,அதைப்பற்றி கவலைப்படுகிறான்.

2. ஒவ்வொரு நாளும் அல்லாஹ் அளிக்கும் ரிஜ்கை உண்ணுகிறான். அது ஹலாலாக இருந்தால் மறுமையில்  அதற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினாயா?எனக் கேட்கப்படுவான். அது ஹராமான வழியில் வந்திருந்தால் மறுமையில் தண்டிக்கப்படுவான்.
அதைப் பற்றி அவன் சிந்திப்பதில்லை.

3. ஒவ்வொரு நாளும் மெது,மெதுவாக மறுமையின் பால் நெருங்கிக் கொண்டிருக்கிறான், அதே அளவு இவ்வுலக வாழ்க்கையிலிருந்து தூரமாக நகர்ந்து கொண்டிருக்கிறான். நிலைமை  இவ்வாறிருக்க
அழியப்போகும் இவ்வுலக வாழ்க்கைக்கு  கொடுக்கும் முக்கியத்துவத்தை அழியாத மறுமைவாழ்க்கைக்குக் கொடுப்பதில்லை.
நாம் செல்லுமிடம் சொர்க்கமா எனும் சிந்தனையின்றி வாழ்க்கையை கடக்கிறான்.
    வேடிக்கையான மனிதன்.
-----------அரபு  இணைதளத்திலிருந்து கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ,தேவ்பந்தி

Tuesday, November 21, 2017

காலை துஆ

எங்களை படைத்த ஏக இறைவா!
இந்த அதிகாலை நேரத்தில் நபி யாக்கூப் (அலை) அவர்கள் சொன்னது போல என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் உன்னிடத்தில் முறையிடுகிறேன்
.நீ தான் எங்களை படைத்தவன் என்பதிலும் நீ மட்டும் தான் எங்களைக் காப்பவன் என்பதிலும் எங்களுக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை.
அதே போன்று அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி தூதர் என்பதிலும் அவர்கள் காட்டிய வழி நடந்தால் தான் எங்கள் மறுமை வாழ்வு சிறக்கும் என்பதிலும் எங்களுக்கு சந்தேகம் இல்லை.
உன் மீதும் உந்தன் நபி மீதும் எங்களுக்கு அளவுகடந்த முஹப்பத் இருக்கிறது.தேவைப்படுமாயின் இஸ்லாத்திற்காக ஷஹிதாக வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது.
     ஆனால் எங்கள் ரப்பே நாங்கள் வாழுகின்ற இடம் குஃப்ரியத்தாலும் ஜாஹிலியத்தாலும் வழிகேட்டாலும் சூழ்ந்திருக்கிறது.அவைகள் எங்கள் ஈமானைப் பதம் பார்க்கின்றன.எங்கள் உள்ளம் மக்களிடம் கண்ணியத்தையும் மரியாதையையும் எதிர் பார்க்கிறது.
பெருஞ்செல்வம் இருந்தால் தான் கண்ணியம் என நினைத்து எங்களில் பலர் செல்வத்தை தேடி ஓடுகிறார்கள்.
அரசியல் அதிகாரம் இருந்தால் தான் நமக்கு மரியாதை என எண்ணி சிலர் அரசியல் நோக்கி ஓடுகிறார்கள்.

ஆபாசங்களும் அனாச்சாரங்களும் தலை விரித்து ஆடுகின்றன. அதில் எங்களின் இளைஞர்களும் இளைஞிகளும் சிக்கி சீர் அழிகின்றனர்.அதனை தடுக்க வழி இன்றி எங்களைப் போன்றோர் தடுமாறுகின்றனர்.
நாங்கள் எங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்கின்றோமோ என்ற குற்ற உணர்ச்சி எங்களை வாட்டுகிறது.
      யா அல்லாஹ்!இந்த நேரத்தில் தாயிஃப் நகர மக்கள் நபி (ஸல்) அவர்களை துன்புறுத்திய பொழுது,நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆவை தான் உன்னிடத்தில் நான் கேட்கின்றேன்.
      “யா அல்லாஹ்!என் பலவீனத்தையும் மக்கள் என்னை லேசாக கருதுவதையும் உன்னிடம் முறையிடுகிறேன்! கிருபையாளர்களில் மிகப்பெரும் கிருபையாளனே!நீ கிருபையாளர்களில் மிகக் கிருபையனவனாக இருக்கிறாய்.நீ என்னை யாரிடத்தில் ஒப்படைக்கிறாய்? என்னிடம் கடுகடுக்கும் எதிரியிடமா? அல்லது என் மீது நீ ஆதிக்கத்தை வழங்கிய உறவினரிடமா?
   யா அல்லாஹ்!நீ என் மீது கோபப்படவில்லையானால் அதுவே போதும்.நான் எதையும் பொருட்படுத்தவில்லை.உன் பாதுகாப்பே எனக்கு போதுமானது.”
  யா ரஹ்மானே! நபி கேட்ட துஆவுடன் நானும் என் கோரிக்கையை முன் வைக்கிறேன்.எங்களுக்கு ஹஜ்ரத் அபூ பக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களைப் போல் உண்மை பேசும் நாவைக் கொடு. ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களைப் போல் தவறுகளைத் தட்டி கேட்கும் தைரியத்தைக் கொடு. ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களைப் போல் பாவம் செய்யாமல் இருக்கும் வெட்கத்தைக் கொடு.ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களைப் போல் அறிவு ஞானத்தைக் கொடு.ஹஜ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்கு வழங்கியதைப் போன்று மார்க்கத்திற்கு செலவு செய்யும் பொருளாதாரத்தைக் கொடு.யாரிடமும் கை ஏந்தாமல் மார்க்கத்தை சொல்லும் நாவைக் கொடு.எங்களுடைய செயல்களில் இஹ்லாஸ் எண்ணும் தூய எண்ணத்தைக் கொடு.வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உனது ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து, மரணிக்கின்ற பொழுதும் உனக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே மரணிக்கும் பாக்கியத்தை தருவாயாக.ஆமீன்.
 

 

Sunday, November 19, 2017

அர்ஷின் நிழலில்

படிக்க வேண்டிய நல்ல செய்திகளை உள்ளடக்கிய
Assk Abdurrahman Umari  அவர்களின் பதிவு
*******************
நிழலே இல்லாத நாளில்
.............................................
அல்லாமா இப்னு ஹஜ்ர் அஸ்கலானி எழுதியுள்ள ஒரு கட்டுரை
.
அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழல் தவிர வேறு நிழலே இல் லாத அந்நாளில் நிழல்தரும் மரங்களோ தருக்களோ இதம் தரும் நீர்நிலைகளோ தென்படாது; கூரைவேய்ந்த வீடுகள் எங்கு மிருக்காது. ஒதுங்க ஏதும் வாய்ப்பான இடம் கிடைக்காதா என எல்லா மனிதர்களும் விரண்டோடுவார்கள். தலைக்கு நேர்மே லாக சுட்டெரிக்கும் கதிரவன். திகைப்பும் தவிப்பும் தலைக்கு மேலாக கவிழ்ந்து காணப்படும் அந்நாளில் இறைவன் புறத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்படும். நற்பேறு பெற்றோர் ஒருசிலர் கூவிக்கூவி அழைக்கப்படுவார்கள்.
.
இந்நற்செய்தியை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்  நமக்கு உரைக்கிறார்கள்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது, நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலின் கீழ் ஏழு பேர் காணப்படுவார்கள். (1) நெறிதவறா தலைவன் (2) இறைவழிபாட்டில் இளமையைக் கழித்த இளைஞன் (3) இறையில்லத்தோடு இணைந்திருக்கும் உள்ளம் கொண்ட மனி தன் (4) அல்லாஹ் வுக்காகவே ஒருவரையொருவர் நேசித்த இரு வர் -இறைவனுக்காகவே ஒன்று சேர்ந்து, இறைவனுக்காகவே ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தவர்கள்- (5) அழகும் உயர்குடிச் சிறப்பும் கொண்ட பெண்ணொருத்தி மையலோடு அழைத்த போது தான் இறைவ னுக்கு அஞ்சுகிறேன் என்றவாறு ஒதுங்கிக் கொண்டவர் (6) இடக்கரம் அறியாதவாறு வலக்கரத்தால் தானம் செய்தவர் (7) விழிகளில் கண்ணீர் கசியும் வண்ணம் தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர் ஆகியோரே அவ்வேழு பேர் என இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
.

அல்லாஹும்ம அஜ்அல்னா மினஹும் பிமன்னிக்க வ கரமிக்க!
.

இந்நபிமொழியில் நிழல் எனக் குறிப்பிடப்படுவது அல்லாஹ் வின் அர்ஷின் நிழல் ஆகும். இறைமறையில் அல்வாகிஆ (56:30) அத்தியாயத்தில் இதேபோன்றதொரு நிழல் குறிப்பிடப்படு கின்றது. பரந்து விரிந் திருக்கும் நிழல்!,
.

செய்த செயல்களின் தகுதிக்கேற்ப பெறும் நன்மைகளின் படிநிலைகள் அமைகின்றன. இறைவனுக்குக் கீழ்ப்படிதல் (இதாஅத்) என்பது இரு நிலைகளில் அமைகின்றது.
.

(1) இறைவனுக்கும் அடியானுக்கும் இடையிலான தொடர்பி லும் உறவிலும்
.

(2) இறை அடியார்களுக்கும் அவனுக்குமான தொடர்பிலும் உறவிலும்
.

ஓர் அடியானுக்கும் அவனது இறைவனுக்கும் இடையிலான உறவை எடுத்துக்கொண்டால் அதில் நாவு இடம் பெறுகின்றது. நாவால் நினைவு கூருகிறான்.
.
உள்ளம் இடம் பெறுகின்றது. அவனுடைய உள்ளம் இறையில்லம் பள்ளிவாசலோடு இணைந் தும் பிணைந்தும் உள்ளது.
.
அவன் ஈட்டிய பொருளுக்கு இடம் உள்ளது. அதை இறைவனின் பாதையில் செலவு செய்கிறான்.
.
அவனுடைய உடலுக்கு பங்கு உள்ளது. அதன் கற்பையும் தூய்மையையும் கட்டிக் காக்கிறான்.
.

அபூ யுஸ்ர் வழியே பதிவாகும் அறிவிப்பொன்று முஸ்லிம் நூலில் உள்ளது. கஷ்டத்தில் உழல்கின்ற ஒருவனைக் கண்டு அவனுடைய சுமையை இறக்கி அவனது கஷ்டத்தை நீக்கு பவருக்கு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தனது நிழலில் இடம் அளிக்கிறான் என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.
.
இவ்விரண்டு பண்புகளும் மேற்கண்ட எழுவர் நபிமொழியில் இடம்பெற வில்லை. ஆகையால், ஏழு என்னும் எண்ணிக்கை இறுதியன்று என்பது உறுதியாகின்றது.
இந்நபிமொழியை தொடர்ந்து நான் ஆராய்ச்சி செய்துவந்தேன்.
.
இந்த எண்ணிக்கையில் மேலும் ஏழு கூடிவிட்டது.
.
இறைவழிப் போராளிக்கு நிழல் ஏற்பாடு செய்பவர் (இந்நபிமொழி இப்னு ஹிப்பானில் உள்ளது)
.
முஜாஹிதிற்கு உதவி செய்பவர் (இது அஹ்மதிலும் ஹாக்கிமிலும் உளளது)
.
கஷ்டங்களில் உழல்பவருக்கு உதவி ஒத்தாசை செய்பவர், அவரது சுமையை இலேசாக்கு பவர் (முன்பே கண்டபடி இது முஸ்லிமில் உள்ளது)
.
கடனாளி யின் கடன் சுமையைக் குறைப்பவர், சாசனம் எழுதப்பட்ட அடிமைக்கு உதவுபவர் (இது அஹ்மதிலும் ஹாக்கிமிலும் உளளது)
.
சொல்லிலும் செயலிலும் வாய்மையோடு நடந்து கொள்ளும் வணிகர் (இமாம் பகவீ / ஷர்ஹுஸ் ஸுன்னா)
தொடர்ந்து மேலும் ஆராய்ந்ததில் மேலும் எழுவர் என் பார்வையில் பட்டனர்.
.
ஆயினும் அவைகுறித்த நபிமொழிகள் யாவும் பலவீனமானவை.
.

இறைவனின் நிழல்?
...................................
இறைவனின் நிழல் என்றால் என்ன? அது எதனைக் குறிக்கின் றது?
.
இறைவனின் தனிக்கருணையையும் தனிப்பட்ட அரு ளையும் குறிக்கின்றது என்கிறார் இயாழ்.
.
நிழல் அனைத்தும் அல் லாஹ்விற்கு உரியன. ஆயினும் ஒரு குறிப்பிட்ட நிழலை தனது நிழல் என்கிறான் இறைவன். அது அந்த அடியார்களுக்கு கிடைக் கவுள்ள சிறப்பையும் மாண்பையும் உணர்த்துகின்றது.
.
இறை யில்லங்கள் யாவும் அல்லாஹ்விற்குரியன. ஆயினும், கஅபத் துல்லாஹ் மட்டும் பைத்துல்லாஹ் எனப்படுகின்றது. காரணம் அதற்கென உள்ள தனிச்சிறப்பு.
.
அதுபோலவே இங்கே குறிப் பிட்ட சிறந்த சான்றோர்களுக்கு வழங்கப்பட உள்ள நிழல் இறை வனின் நிழலாக உருவகப்படுத்தப்படுகின்றது.
.
‘அவர் இறைவ னின் நிழலில் இருக்கிறார்!’ என்பது இறைக் கருணையையும் இறையருளையும் முற்றாக வெளிப்படுத்தும் அற்புதச் செய்தி.
.

இறைவனின் அர்ஷின் நிழல்?
..............................................
இறைவனின் அர்ஷின் நிழலில் என்றால் என்ன பொருள்? இறைவனின் சிறகுவிரிப்பின் கீழ், இறைவனின் பாதுகாப்பில், இறைக்கருணையின் போர்வையில் - எனப்பொருள்.
.

தூபா என்னும் நிழல், சொர்க்கத்தின் நிழல் என்றெல்லாம் ஒருசிலர் இதற்குப் பொருள் தருகிறார்கள்.  ஆனால் அவை சரி யல்ல!. ‘நிழலே இல்லாத நாளில்!’ ‘கியாமத் நாளில்!’ என்னும் சொற்கள் நபிமொழிகளில் உள்ளன. இவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.
.
முதலாவதாக, சொர்க்கத்திற்குச் சென்றபின் தான் இவற்றின் நிழலில் ஒதுங்கமுடியும்.
.
இரண்டாவதாக, சொர்க்கத்திற்குச் செல்வோர் அனைவருக்கும் இந்நிழல் கிடைத் தே தீரும். அர்ஷின் நிழல் என்பதுதான் சரியான பொருள். கியா மத் நாள் என்னும் சொல் அதனைத் தீர்க்கமாக உணர்த்தி விடுகின் றது.
.
‘கியாமத் நாளன்று இறைவனுக்கு மிகவும் பிரியமானவர், இறைவனுக்கு அருகில் அமரும் தகுதியுள்ளவர் நேர்மையான நெறிதவறான தலைவர் ஆவார்’ என்றொரு தகவல் திர்மிதீயில் பதிவாகியுள்ளது.
.

‘கியாமத் நாளில் தனது அர்ஷின் நிழலின் கீழ் எழுவருக்கு அல்லாஹ் இடமளிப்பான். (1)நேர்மையான நெறிதவறாத தலைவர் (2) இடக்கரத்திற்குக்கூட தெரியாமல் வலக்கரத்தால் இறைவழியில் செலவு செய்தவர் (3) அழகும் அந்தஸ்த்தும் மிக்க அழகுநங்கை தன்னையே ஒப்படைக்க முன்வந்தபோது ‘உலகா ளும் இறைவனுக்கு நான் அஞ்சுகிறேன்’ என ஒதுங்கிக்கொண்ட வர் (4) அல்லாஹ்வை நினைவு கூருகையில் அல்லாஹ்வின் மீதான பயத்தால் அழுதவர் (5) இருவர் சந்தித்துக் கொண்டார்கள். -அல்லாஹ்வுக்காக உன்னை நான் நேசிக்கிறேன், அல்லாஹ்வின் மீது சத்தியம் என்றார் இவர். நானும் அல்லாஹ் வுக்காக உன்னை நேசிக்கிறேன் என்றார் அவர்- இவ்விருவர்.’ (ஸுஹைல் இப்னு அபூ ஸாலிஹ்/ முஅஜமுல் கபீர் / தபுரானி)
.

நெறிதவறான நீதிமிக்க தலைவர்
.....................................................
அத்லு என்றால் நீதி, நெறி தவறாமை. இமாம் மாலிக் பதிவு செய்துள்ள ஓர் அறிவிப்பில் அத்லு என்னும் சொல்லே பண்புரிச் சொல்லின் இடத்தில் கையாளப்பட்டுள்ளது. நீதியின் உருவா கவே வடிவமாகவே அவர் மாறி விட்டார் என்னும் ஒப்பற்ற பொருளை இது தருகின்றது. முஸ்லிம்களின் ஏதேனும் ஒரு பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் படுகையில் நெறிதவறாது நீதி நேர்மையோடு அவர் நடந்துகொண்டார். இக்கருத்துக்கு வலுசேர்க்கும் பதிவொன்று முஸ்லிம் நூலில் உள்ளது.
.

‘அல்லாஹ்விடத்தில் நீதிநெறியாளர்களின் நிலை என்ன? ரஹ்மானின் வலப்புறத்தில் உள்ள ஒளியாலான மேடைகளில் வீற்றிருப்பார்கள். பொறுப்புகளை ஒப்படைக்கப்பட்டபோது தம் கட்டளைகளிலும் தம்மைச் சார்ந்தோரிடத்திலும் நெறிதவ றாது நடந்துகொண்டவர்கள் இவர்கள்.’ (சஹீஹ் முஸ்லிம்)
.

எப்பொருளை எங்கு வைக்க வேண்டுமோ அப்பொருளை இறை நியதிகளுக்கு உட்பட்டு கூடக்குறைவின்றி அங்கேயே வைக்கும் பண்பாளர்கள் இவர்கள்.
.

இளைஞன்
.....................
ததும்பும் இளமை வேகத்தையும் வீரத்தையும் தருகின்றது. மனம் ஆசைப்படுவதை எல்லாம் செய்ய முனைகின்றன வேக மும் வீரமும்! இவற்றோடு போராடி இறைவழிபாட்டில் இல யித்திருப்பதும் தக்வாவைக் கைக்கொள்வதும் மிகவும் கஷ்டம்!
.

‘தன் இறைவனுக்கு அடிமைப்பட்டிருப்பதில்’ என்பதற்குப் பதிலாக ‘அல்லாஹ்விற்கு அடிமைப்பட்டிருப்பதில்’ என்னும் சொல் முஸ்லிமிலும் அஹ்மதிலும் இடம் பெறுகின்றது.
.

அவ்வாறே வேறுசில பதிவுகளில் ‘அதே நிலையில் இறப்பைத் தழுவியவன்’ என்பதும் ‘அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதிலேயே தன் இளமையைத் தொலைத்தவன், வளர்ந்து ஆளாகியவன்’ என்பதும் காணப்படுகின்றன.
.

மஸ்ஜிதில் தொங்குபவன்
................................
இறையில்லத்தோடு இணைந்திருக்கும் உள்ளம் கொண்ட மனி தன் - என நாம் கூறுகிறோம். நபிமொழியில் முஅல்லக்குன் ஃபில் மஸாஜித் என்னும் சொற்றொடர்தான் உள்ளது.
.
முஅல்லக் என்றால் தொங்குவது!. பள்ளிவாசலில் தொங்குவது என்றால் தொங்குசீலை, தொங்கும் சர விளக்குகள் போன்றவை
.
.
தொங்குதல் என்பது எதைக் குறிக்கின்றது? தொடர்ந்த ஊழியத்தை!
.
உடல் பள்ளியில் இருக்கின்றதோ இல்லையோ உள்ளம் பள்ளிவாசலிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து பள்ளிவாசல் ஊழியத்திலேயே ஈடுபட்டுக் கொண் டிருக்கின்றது.
.

அதாவது அவனுடைய உள்ளம் பள்ளிவாசலிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றது என்னும் விளக்கமும் ஓர் அறிவிப்பில் உள்ளது.
.
பள்ளிவாசல் மீதுள்ள மிகுந்த பிரியம் அதனோடு இடை விடாத தொடர்பைக் கொண்டிருக்குமாறு அவனைத் தூண்டுகின் றது.
.
‘பள்ளிவாசலோடு தொங்கிக் கொண்டிருப்ப வன்’ என்னும் அஹ்மதுடைய பதிவும் ‘நேசத்தின் காரணத்தால்’ என்னும் ஸல் மானின் அறிவிப்பும் இதனை மேலும் தெளிவு படுத்துகின்றன.
.

‘பள்ளியை விட்டு வெளியே சென்றால் மறுபடியும் எப்போது பள்ளிக்குத் திரும்புவோம் என்று அவனது உள்ளம் தவித்துக் கொண்டிருக்கின்றது’ என விளக்குகின்றது இமாம் மாலிக்கில் உள்ள பதிவு. இவ்வறிவிப்பு முஸ்லிமிலும் உள்ளது.
.

இந்நபிமொழியின் உண்மையான கருத்தை இவ்விளக்கம் தெளிவுபடுத்துகின்றது எனலாம். பள்ளிவாசலுக்கு உள்ள சிறப் பும் மாண்பும் அனைவரும் அறிந்ததே. பள்ளிவாசல் ஊழியத் தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்க வேண்டும். உடல் ஒருக்கால் பள்ளிக்கு வெளியேபோக நேரிட்டாலும் உள்ளம் இடைவிடா மல் பள்ளியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும்.
.

அல்லாஹ்வுக்காகவே நேசித்தோர்
......................................................
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கடுமையான நேசம் பாராட்டு கிறார்கள், அல்லாஹ்வுக்காக! நேசம் கொள்வதில் ஒருவருக் கொருவர் சளைத்தவர்களாக இல்லை. வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் நேசம் அன்று, உண்மையிலேயே உளப் பூர்வமாக நேசிக்கிறார்கள்.
.

‘அல்லாஹ்விற்காக உன்னை நேசிக்கிறேன் எனச்சொல்லி ஒருவரை ஒருவர் நேசித்துக்கொள்ளும் இருவர். (உதட்டளவில் நில்லாது) உளப்பூர்வமாக நேசிப்பவர்கள்’ என்றோர் அறிவிப்பு இதனைத் தெளிவு படுத்துகின்றது. (ஹம்மாத் இப்னு ஸைத்)
.

(‘இறைவனுக்கான) அந்த நேசத்தில் இணைந்து நிற்பார்கள். அதற்காகவே பிரிவார்கள்’ என விளக்குகின்றது மற்றோர் அறிவிப்பு. (காண்க: முஅத்தா இமாம் மாலிக்)
.

இது இறைவனுக்காக ஏற்பட்ட நேசம். ஆகையால் உலக நாட் டமோ உலகப் பொருட்களோ இந்நேசத்தை குலைக்க முடிவ தில்லை. அவர்கள் உலகை விட்டுப் பிரிந்தாலும் இந்நிரந்தர நேசம் ஒருபோதும் அழிவதில்லை.
ஆழ்ந்து கவனிக்கவேண்டிய அம்சமாகும் இது.
.
நேசம் என் பதே இருவருக்கிடையில் ஏற்படுவதுதான். நேசம் பாராட்டிக் கொள்கின்ற இருவருக்கிடையிலான நேச அளவு ஒன்றுபோல இருப்பதில்லை. இருப்பது சாத்தியமுமில்லை. நேசத்தில் ஏற்ற யிறக்கம் காட்டயியலாத அளவு இறைவனுக்காக நேசத்தில் நெருங்கி நிற்பவர்கள் இவர்கள்.
.

அழகுமங்கை அழைத்தபோது!
...............................................
அடுத்து, அழகும் உயர்குடிச்சிறப்பும் கொண்ட பெண்ணொ ருத்தி மையலோடு அழைத்தபோது தான் இறைவனுக்கு அஞ்சுகிறேன் என்றவாறு ஒதுங்கிக் கொண்டவர். நாடியபோது என்றுதான் அறிவிப்பில் உள்ளது. கூப்பிட்ட போது என்னும் சொற்கள் இமாம் அஹ்மதுடைய அறிவிப்பில் உள்ளன.
.

கண்ணியம், கௌரவம் போன்றவற்றால்தான் உயர்குடிச் சிறப்பு கிடைக்கின்றது. குலச்சிறப்பு, குடிச்சிறப்பு, செல்வச் சிறப்பு ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது. ஒருவரிடம் ஈர்ப் பையும் கவனத்தையும் காதலையும் தானாக தோற்றுவிக்கவல்ல அதிமுக்கியப் பண்புகள் இவை. புகழும் செல்வமும் அவற்றால் கிடைக்கின்ற சமூக அந்தஸ்த்தும் கூடவே கொட்டிக் கிடக்கின்ற பேரழகும் ஒருசேர ஒரு மங்கையிடத்தில் பார்ப்பது அரிது.
.

‘தன்னை ஆட்கொள்ளுமாறு அழைத்தாள்’ என்றும் ‘தன்னை யே ஒப்படைக்க முன்வந்தாள்’ என்றும் அறிவிப்புகளில் காண முடிகின்றது. எவ்வாறிருப்பினும் அவள் ‘சோரம்போக’வே அழைத்திருக்கிறாள்.
.

‘தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு’ அழைத்தாள் என்றும் ஒருசிலர் விளக்கம் தந்திருக்கிறார்கள். அவளை மண முடித்துக் கொண்டால் இறைவழிபாட்டிற்கு பங்கம் நேர்ந்து விடும் என்றவன் பயந்தான் என மேலும் விளக்குகிறார்கள்.
.
அல் லது தான் இறைவழிபாட்டில் மூழ்கி  இருப்பதால் அவளுக்கு செய்தாக வேண்டிய கடமைகளில் குறைவைக்க நேரலாம் என அஞ்சினான் என்கிறார்கள்.

.
முதலில் கண்டதே சரியான விளக்கமாகும். திருமணத்திற்கு அழைத்திருந்தால் அதை தெளிவாகச் சொல்லியிருப்பாளே!
.

ஒப்பற்ற தகுதிகள் பலகொண்ட பெண்ணொருத்தி, கண்டவு டன் பார்வையையும் சிந்தனையையும் ஈர்க்கின்ற அழகும் உயர் குடிச் சிறப்பும் கொண்டவள், திட்டமிட்ட அவளை அடைய எண்ணினாலும் கூட அவ்வளவு எளிதில் கைகூடாத இடத்தில் நிலைகொண்டிருப்பவள் தானாக முன்வந்து அழைக்கிறாள்.
அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்
.

உலகாளும் அல்லாஹ்வுக்கு (ரப்புல் ஆலமீன் அல்லாஹ் வுக்கு) அஞ்சுகிறேன் என்றோர் அறிவிப்பில் உள்ளது. தீய நடத்தையில் ஈடுபட்டு விடுவோமோ என்னும் திடுக்கத்தினா லும் அப்பெண்ணிடமிருந்து தப்ப வேண்டுமே என்னும் பயத்தி னாலும் அவர் வாய்திறந்து இதனை உச்சரித்திருக்கலாம். அல்லது உள்ளத்தில் உதித்த மனமொழியாகக் கூட இருக்கலாம்.
.
‘அல்லாஹ்வைப் பற்றிய பயங்கரமான அச்சம், வலுவான தக்வா, அதீத வெட்கம் போன்றவற்றினால் இதை அவர் சொல்லி யிருக்கக் கூடும்’ என்கிறார் இமாம் குர்துபி.
.

இடக்கரம் அறியாமல்
........................................
வலக்கரத்தால் செய்த தானதருமத்தை இடக்கரம் அறியா நிலையில் - என்னும் சொற்றொடர் புகாரியில் உள்ளது. ஆனால், இதற்கு மாற்றமான சொல்லமைப்பு முஸ்லிமில் காணப்படு கின்றது. வலக்கரம் அறியாத நிலையில் இடக்கரத்தால் என முஸ்லிமில் உள்ளது. அதற்குரிய விளக்கத்தை முஸ்லிம் தமி ழாக்கத்தில் காண்க.
.

யாரும் அறியாமல் இறைவழியில் செலவு செய்வது சிறந்த பண்பாகும். அனஸ் அறிவிக்கும் நபிமொழி ஒன்று ஹஸன் தரத்தில் அஹ்மதில் பதிவாகி உள்ளது.
.

‘இறைவா! உனது படைப்பில் மலையை விடக் கடினமானது உண்டா?’ என வானவர்கள் வினவினார்கள்.
.

‘ஆம், உள்ளது. இரும்பு!’ என்றான் இறைவன்.
‘இரும்பை விடக் கடினமானது உள்ளதா?’
‘ஆம், உள்ளது. நெருப்பு!’
‘நெருப்பை விடக் கடினமானது உள்ளதா?’
‘ஆம், உள்ளது. நீர்!’
‘நீரை விடக் கடினமானது உள்ளதா?’
‘ஆம், உள்ளது. வாயு!’
‘காற்றை விடக் கடினமானது உள்ளதா?’
‘ஆம், உண்டு. இடக்கரத்துக்குத் தெரியாமல் மறைத்து வலக் கரத்தால் ஆதமின் மகன் செய்கின்ற தருமம்!’ என்றான் இறைவன்.
(காண்க: இமாம் ஹாஃபிழ் இப்னு ஹஜ்ர் அஸ்கலானி)
.

யாரேனும் ஒருவர் இந்த ஏழு பண்புகளையும் பெற்று சிறக்க முடியுமா? என்றொரு கேள்வியை ஹாஃபிழ் இப்னு ஹஜ்ர் எழுப்புகிறார். ஆர்வத்தை தூண்டுகின்ற கேள்வி! அதற்கான பதிலையும் தந்துள்ளார். அறிய விழைவோர் அவரது புலூகுல் முராம் நூலின் விரிவுரைப் பார்வையிடுக!