Tuesday, March 30, 2021

சகோதரர்களுக்காக துவா செய்வோம்

சகோதரர்களுக்காக துஆ செய்யுங்கள்
உங்கள் தேவையும் நிறைவேறும்

---------------------=--=----=============------
عْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ۗ وَاللَّهُ
 يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ  ﴿47:19﴾
47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - மேலும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ  ﴿59:10﴾
59:10. அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:,
"தன் கண்முன் இல்லாத தன் சகோதரருக்காக ஒருவர் செய்யும் துஆ ஏற்றுக்  கொள்ளப்படும். துஆ செய்பவரின் தலைக்கு மேல் ஒரு மலக்கு நியமிக்கப்படுவார்,தன் சகோதரருக்காக நல்லவற்றை கேட்கும் பொழுதெல்லாம் அம்மலக்கு உனக்கு அதே போன்று கிடைக்கட்டும் என்று துஆ செய்வார்"
நூல் முஸ்லிம்
இந்த ஹதீஸிற்கு விரிவுரை எழுதிய இமாம் நவவி குறிப்பிடுகிறார்கள்.

சில பெரியார்கள் தங்களுக்கு ஒரு தேவை ஏற்படும் போது அதே தேவையுடைய ஒரு சகோதரருக்காக துஆ செய்வார்கள் அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் இவருடைய தேவையும் நிறை வேறிவிடும்
 ::_கணியூர் இஸ்மாயில் நாஜி

Tuesday, March 16, 2021

ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பலன்கள்

مكتبة الأناشيد الإسلامية🎤:
هل تعلم ماذا يحدث عندما تصلي على النبي ؟؟
اللهم صل وسلم علي نبينا محمد
عجائب الصلاة على الرسول الكريم

1_ يرد عليك الحبيب
2_ تنزل عليك عشر رحمات بكل صلاة
3_ تنال شفاعة الرسول يوم القيامة
4_ يشرق نور من قلبك لينير وجهك
5_تشعر بلذة وسكينة وسعادة 
حتى لو مشغول إرسلها من باب التذكير 
( اللهمـ صل وسلم على نبينا محمد)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் சொல்வதால் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
--------=======----------------------------------------
1, நமது பாசத்திற்குறிய நபி அவர்கள் அதற்கு பதிலளிக்கிறார்கள்

2,  உங்கள் மீது ஒவ்வொரு ஸலாத்திற்கும்
பத்து ரஹ்மத்கள் இறங்குகின்றன.

3, கியாமத் நாளில் அண்ணலாரின்
ஷபாஅத் கிடைக்கும்

4, உங்கள் உள்ளத்தில் ஒளி ஏற்படும் 
அதன் பிரதிபலிப்பு உங்கள் முகத்தில் தெரியும்.

5,  ஸலவாத்தை சொல்ல சொல்ல  இன்பமும்,மனஅமைதியும்,மகிழ்ச்சியும் ஏற்படும்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி

 ------தமிழாக்கம் கணியூர் நாஜி

Friday, March 5, 2021

நிகாஹ் நாமா

நிகாஹ்நாமா எனும்
திருமண ஒப்பந்தப் பதிவேடும்
மணமகள் இடும் நிபந்தனைகளை பதிவு செய்தலும் ....
------------------------------------------------
.நிக்காஹ் என்பது இஸ்லாத்தில் வாழ்க்கை ஒப்பந்தமாகும். ஒப்பந்தம் எனும் போதே ஒப்பந்தம் செய்யும் இரு சாராரும் தங்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சில நிபந்தனைகள் இடுவார்கள்.

அதே போன்று, நிக்காஹ்வில் மணமகனும், மணமகளும் மணவாழ்க்கையில் ஒருவர் மற்றவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை இடுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

உரிமைகள் பொறுத்த வரையில், பெண்களுக்கு கடமைகள் உள்ள அளவிற்கு உரிமைகளும் உண்டு. (அல்குர்ஆன் – 22:28).

.எனினும், இஸ்லாம் ஆணுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கியுள்ளது. குறிப்பாக, இஸ்லாத்தை பொறுத்த வரை குடும்பத்தை பாரமரிக்கின்ற பொறுப்பு ஆணுக்கே சேரும். (அல்குர்ஆன்-4:34).என்ற அடிப்படையில் உடலாலும், பொருளாலும் இரு மனைவிகளை நீதமுடன் நிர்வகிக்கும் ஆற்றல் இருந்தால் நான்கு பெண்கள் வரை மணந்துக் கொள்ளும் சலுகை உண்டு.

இரண்டு , மனைவியுடன் வாழ விருப்பமில்லையென்றால், மூன்று முறை கால இடைவெளியில் தலாக் விடும் உரிமையும் உண்டு.

இந்த சிறப்பு சலுகையை தற்காலத்தில் பலர் முறை தவறா கப் பயன்படுத்துகிறார்கள் எனவே, திருமண ஒப்பந்தத்தின் போதே ஒரு பெண், தன்னுடைய வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கத்துடன் இது தொடர்பான சில நிபந்தனைகளை நிக்காஹ் ஒப்பந்தத்தில் இணைப்பதற்கு உரிமையுண்டா என்பது தான் கேள்வி.

.இது தொடர்பாக, ஃபுகஹாக்கள் எனப்படும் ஷரியத் சட்ட அறிஞர் பெருமக்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் உண்டு. நீண்ட விவாதங்களும் நடைபெற்று வருகின்றன

.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :“ நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்படவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்.”

இமாம் புஹாரி அவர்கள், “ திருமணத்தில் முன் நிபந்தனைகள்” என்ற தலைப்பில் இந்த ஹதீஸை (ஹதீஸ் எண் : 2721, 5151) பதிவிட்டிருக்கிறார்கள்.இமாம் முஸ்லிம் அவர்கள், “திருமணத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றல்” என்ற தலைப்பில் இந்த ஹதீஸை (ஹதீஸ் எண் : 2772) பதிவிட்டிருக்கிறார்கள்.

புஹாரி ஷரீஃபின் விரிவுரையான ஃபத்ஹுல் பாரியில் இந்த ஹதீஸின் (ஹதீஸ் எண் : 5151) விரிவுரையில் கீழ்கண்ட சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து, தான் திருமணம் செய்து கொண்ட போது தன்னுடைய மனைவி அவளுடைய வீட்டிலேயே தங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டாள் என்றும், இப்போது வேறோர் இடத்திற்கு செல்ல தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.அதற்கு, “அவளுக்கு அவளுடைய நிபந்தனை உண்டு” என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். அதற்கவர், அப்படியானால், ஆண்கள் அழிந்தார்கள்.ஏனெனில், திருமணத்தின் போதே முன் நிபந்தனையிட்ட ஒரு பெண் தான் விரும்பும் போதே கணவனிடமிருந்து விவாக விலக்கு பெற எண்ணுவாள்.(கணவன், தான் விரும்பும் போது விவாக பந்தத்தை விலக்கிக் கொள்ள முடியாது) என்று தெரிவித்தார்.“ நிபந்தனைகள் விதிக்கப்படும் போது உரிமைகள் துண்டிக்கப்படுகின்றன. நீ எதனை நிபந்தனையிட்டயோ அது உனக்கு உண்டு” என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களும், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களும், மணப்பெண் நிபந்தனை விதிப்பது கூடும் எனவும் அந்த நிபந்தனையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அதை நிறைவேற்றுவது கடமை எனவும் கூறியுள்ளார்கள்.

வாழ்க்கை ஒப்பந்த பதிவுகளில், மணமகன், மணமகள் சார்பில் விதிக்கப்படும் நிபந்தனைகள் பதிவு செய்யப்படா விட்டாலும் தனிப்பட்ட முறையில் இரண்டு குடும்பத்தாரும் சில நிபந்தனைகளை தங்களுக்குள் எழுதி வைத்துக் கொள்கிறார்கள்.

உதாரணமாக, திருமணத்திற்கு பின்னும் மணப்பெண் மேற்படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும், பணிபுரிய அனுமதிக்க வேண்டும், மணமகன் மணப்பெண் வீட்டிலேயே தங்கி விட வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.

ஆண்களும்சில நிபந்தனைகளை விதிக்கிறார்கள்
இவையெல்லாம் பெரும்பாலும் பொருளாதரத்தை சார்ந்த தாகாவே இருக்கும்.

ஆனால் ஒரு பெண் மணவாழ்க்கையில் மனதளவில் பாதிக்கப்ப டும் விடயங்களைப்பற்றி முன்னதாக பேசப்படுவதில்லை.
அவைகள் என்ன என்பதை நாளை பார்ப்போம்
இன்ஷா அல்லாஹ் .

-----நீண்ட பதிவுகள் வேண்டாம். படிக்க சிரமமாக இருப்பதாக சில சகோதரர்கள் சொல்கிறார்கள்
எனவே சுருக்கமாகவே எழுதுகிறேன்.

Wednesday, March 3, 2021

நாவண்மை மிக்க சிராஜுல்மில்லத்

நாவண்மை மிக்க சமுதாய தலைவர் சிராஜூல்மில்லத் A.K.A அப்துஸ்ஸமது  ஸாஹிப் 
 ***************************************
நான் இளம் வயதிலிருந்தே அரசியல், ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவுகளை கேட்பதில் ஆர்வம் உடையவன். 
தமிழகத்தின் மிக பிரபல்யமான அத்தனை சொற்பொழிவாளர்களின் பேச்சையும் கேட்டிருக்கிறேன்.
காங்கிரஸ் இயக்கத்தை சார்ந்த என் தந்தை முஹம்மது யாக்கூப் வாத்தியார் எங்கள் ஊரில் எந்த கட்சியின் கூட்டம் நடந்தாலும் என்னை அழைத்து செல்வார். நமக்கு பிடித்திருந்தாலும் பிடித்திராவிட்டாலும் எல்லாருடைய பேச்சையும் கேட்க வேண்டும்.
அப்பொழுது தான் விசாலமான சிந்தனையும் ஆழ்ந்த பொது அறிவும் நமக்கு கிடைக்கும் என்பார். என் தந்தையுடன் நான் இறுதியாக கலந்துக் கொண்ட கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவரான பி.ராமமூர்த்தியின் கூட்டமாகும்.

நான் லால்பேட்டையில் ஓதுகின்ற பொழுது நமது சமுதாயத்தின் மிக சிறந்த பேச்சாளர்களின் கூட்டம் லால்பேட்டையில் அதிகமாக நடைபெறும்.அதில் பெரும்பாலானோர் மதரஸாவில் தான் தங்குவார்கள். அப்பொழுது அவர்களுக்கு அருகில் இருந்து பணிவிடை செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன். 
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மரியாதைக்குரிய தலைவர் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள், பன்மொழி புலவர் அப்துல் லத்தீஃப் ஸாஹிப், நாவலர் ஏ.எம்.யூஸுப் ஸாஹிப், சொல்லின் செல்வர் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது ஸாஹிப், திருப்பூர் மைதீன்  ஸாஹிப் ஆகியோரின் பேச்சுக்களை மிகவும் ரசித்து கேட்பவன் நான்.
அவர்களில் முதலில் பேச்சாளர் என்ற முறையில் நான் தலைவர் அப்து ஸ்ஸமது ஸாஹிப் அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அவர்களை முதன்முதலில் 1966 ஆம் ஆண்டு லால்பேட்டையில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு காயிதே மில்லத் அவர்களுடன்  வந்திருந்த பொழுது சந்தித்தேன்.
அன்று வெள்ளிக்கிழமை. காயிதே மில்லத் அவர்கள் ஜும்ஆவில் பயான் செய்வார்கள் என்று அறிவிக்குமாறு என்னை மவ்லானா இக்லீல் அவர்கள்  ஏவினார்கள் .
நான் ஒலிபெருக்கியில் இன்று ஜும்ஆவில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்கள் உரையாற்றுகிறார்கள். எனவே, அனைவரும் சீக்கிரம் வாருங்கள்.சீக்கிரம் வாருங்கள் என்று திரும்ப திரும்ப கூறி கொண்டிருந்தேன்.
அப்பொழுது ஒரு மாணவர் என்னிடத்தில் வந்து ஸமது பாய் உன்னை கூப்பிடுகிறார் என்று சொன்னார்.
நான் அவரிடம் சென்ற பொழுது தலைவர் அவர்களை காயிதே மில்லத் என்று சொன்னால் போதாதா? மக்களுக்கு அவரைப் பற்றி தெரியாதா? ஏன் தேவையில்லாமல் அவர் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறாய்.
பெரியவர்களின் பெயரை தேவையில்லாமல் சொல்லக்கூடாது என்று என்னை  கண்டித்தார். அவர்கள் எங்கு  சொற்பொழிவு ஆற்றினாலும் அங்கு சென்று ஆர்வத்துடன் கேட்பேன்.
அந்தாண்டில் (1967) நடைபெற்ற எனது ஃபாஜில் பட்டமளிப்பு விழாவில் காயிதே மில்லத் அவர்களும் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது ஸாஹிப், திருப்பூர் மைதீன்  ஸாஹிப் அவர்களும் சிராஜி மில்லத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
உரத்த குரலில் உணர்சிகரமாக பேசும் திருப்பூர் மைதீன் அவர்கள் பேசும் பொழுது எங்களை நோக்கி “பட்டம் பெரும் நீங்கள் எங்கும் யாரிடத்திலும் உண்மையை சொல்ல தயங்க கூடாது. நீங்கள் பணி புரியும் பள்ளியின் நிர்வாகி வட்டி வாங்குகிறார் என்றால் அதை சொல்வதை விட்டுவிட்டு மவ்லாய ஸல்லி வஸல் என்று வேறு பைத்துகளை பாடி விட்டு உண்மையை சொல்லாமல் சும்மா இருந்து விடக் கூடாது” என்று பேசினார்.
அதற்கு பின் பேசிய சிராஜூல்மில்லத் அவர்கள், “மைதீன் அண்ணன் அவர்கள் சொன்னதை போல உண்மையையே பேசுங்கள்” என்று வரலாற்றில் அரசர்களுக்கு முன்னால் உண்மையை பேசிய சில ஆலிம்களின் வரலாற்றை சுட்டி காட்டினார்கள்.
அவர்கள் மேலும் பேசியபோது,”இன்று பட்டம் வாங்கும் இளம் ஆலிம்களின் முகத்தில் தென்படும் குறுந்தாடிகளை பார்க்கும் பொழுது தாடி வைக்காத பெரியவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே சொல்லிய வண்ணம் மைதீன் சாஹிப்  அவர்களை பார்த்தார்.(அவர் தாடி வைக்காமல் இருந்தார்)
உடனே அவர் “ஆமாம்,ஆமாம். நானும் வெட்கப்பட வேண்டும் என்றார்.எல்லோரும் புன்னகை பூத்தார்கள். 
இடமறிந்து, பொருளறிந்து, காலமறிந்து, பேசுவதில் வல்லவர், சிராஜூல்  மில்லத். பிற மத அன்பர்கள்  கூட அவர்களுடைய பேச்சை ஆர்வத்துடன் கேட்பார்கள்.
1980களில் மயிலாடுதுறை தாலுக்காவின் அனைத்து ஜமஅத்தார்களும் இணைந்து ஒரு மாபெரும் மீலாது விழா பேரணியையும் நகர பூங்காவில் பொது கூட்டமும்  நடத்துவார்கள்.
அதில்,ஒரு முறை சிராஜூல்மில்லத் அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.அவர்கள் பேச ஆரம்பித்த பொழுது பூங்காவின் அருகே இருந்த சினிமா அரங்கின் முதல் காட்சி முடிவுற்று மக்கள் கூட்டம் கூட்டமாக பூங்காவின் வழியே பேருந்து நிலையம் சென்றனர்.
தலைவர் அவர்களின் கம்பீரமான குரலை கேட்டு பெரும்பாலானோர் அப்படியே நின்று விட்டார்கள். பிற மத சகோதரர்கள் அதிகமாக குழுமி இருந்த கூட்டத்தில், தலைவர் அவர்கள்  நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றிய பொழுது மக்கத்து குறைஷியர்களின் மூட நம்பிக்கைகளை பற்றியும் சிலை வணக்கத்தை பற்றியும் சுவைப்பட கூறினார்கள்.
  வியப்பு என்னவென்றால் அவர்களின் பேச்சு அங்கு குழுமி இருந்த இந்து சகோதாரர்களின் மனதில் எந்த ஒரு காயத்தையும் ஏற்படுத்தாமல் “அவர் பேசுவது சரிதானே” என்று எண்ணுகிற வகையில் பேசினார்கள்.
என்னுடைய பல இந்து நண்பர்கள் அந்த பேச்சை பெரும் அளவு பாராட்டினார்கள்.

ஷஃபான் வழக்கில் விவாகரத்து செய்யப்பட மனைவிக்கு ஜீவனாம்சம் தொகை கொடுக்கப்பட வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஷரீஅத் விளக்க மாநாடு நடைபெற்றது.

பாண்டிச்சேரி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற பெருந்திறள் கூட்டத்தில் தலைவரின் பேச்சு என்றும் மறக்க முடியாது.

“முஸ்லிம்களான எங்களை தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.தேசிய நீரோட்டம் என்றால் என்ன? இந்து சமுதாயத்தின் கொள்கைகளை பின்பற்றுவது தான் தேசிய நீரோட்டமா?

சமீபத்தில் கல்கத்தாவில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராமகிருஷ்ணமடம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தங்களை இந்து என்று சொல்ல கூடாது என்றும் தங்களை இந்து அல்லாதசிறுபான்மையினர்  என்று அறிவிக்க வேண்டுமென வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

 நான் சட்டமன்றத்தில் மாண்புமிகு ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை நோக்கி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வருகிறதா? என்று கேட்டேன்.(அப்பொழுது தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்). அதற்கு மாண்பு மிகு அமைச்சர் அவர்கள், மேல்மருவத்தூர் கோவில் நிர்வாகிகள் தாங்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், எனவே, அந்த துரையின் கீழ் நாங்கள் வரமாட்டோம் என்று அறிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னார். 

நாங்கள் யார்யாரெல்லாம் ஹிந்துக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எல்லாம் தங்களை ஹிந்துக்கள் அல்ல என்று சொல்கிற பொழுது நாங்கள் உறுதியான மார்க்கத்தை பின்பற்றி முஸ்லிம்கள் என்று அறிவித்திருக்கின்ற பொழுது எங்களை எந்த தேசிய நீரோட்டத்தில் சேர சொல்கிறீர்கள்.

(காமன் சிவில் கோடு) இந்தியா முழுமைக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
 நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம் ஆனால், ஒரு நிபந்தனை: உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு சிவில் சட்டங்களையும் கொண்டு வாருங்கள். நாங்கள் எங்கள் இஸ்லாம் வகுத்துள்ள சிவில் சட்டத்தை யும் கொண்டு வருகிறோம். அனைத்தையும் ஒப்பிட்டு பாப்போம். இஸ்லாமிய சிவில் சட்டத்தை விட பிற நாட்டு சிவில் சட்டங்கள் சிறப்பானதென்று நீங்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அந்த சட்டத்தை ஏற்று கொள்ள தயாராக இருக்கிறோம். உங்களால் ஒருபோதும் இஸ்லாத்திற்கு நிகரான சட்டத்தை கொண்டு வரவே முடியாது.” என்று உணர்ச்சிகரமாக பேசினார்.
மைதானமே தக்பீரால் அதிர்ந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறந்த இலக்கிய பேச்சாளரான முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் கா.காளிமுத்து அவர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார். அதற்கு பின் பேசிய சிராஜூல்மில்லத்  பேச்சை கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் கேட்டது.
கூட்டம் முடிந்து திருநெல்வெலி செல்லும் பஸ்ஸில் நான் சென்று கொண்டிருந்தேன். அந்த பஸ்ஸில் வந்த தி.மு.க தொண்டர்கள் “இன்று பாய் நம்முடைய தலைவர் பேச்சையே சாப்பிட்டு விட்டார். அவர் பேச்சு தான் சூப்பர்.” என்று பேசி கொண்டு வந்தார்கள். எனக்கு மிக பெருமையாக இருந்தது.

தலைவர் சிராஜூல் மில்லத் அவர்களின் சில அரசியல் முடிவுகள் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகின. ஆனால், தலைவர் அவர்களின் நாவன்மையை பற்றியோ, அவரின் தனிமனித ஒழுக்கத்தை பற்றியோ யாரும் குறை சொல்ல முடியாது. தன்னை சந்திக்க வருபவர்களிடத்தில் எங்களை போன்ற சிறு வயது உடையவர்களாக இருந்தாலும் கூட இன்முகத்துடன் பேசும் சிறந்த பண்பாளர் அவர்.தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வார்கள் என கேள்விபட்டுள்ளேன் 
அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் சேர்ப்பானாக.ஆமீன் 
 ___ மீள் பதிவு கணியூர் இஸ்மாயீல் நாஜி