நாவண்மை மிக்க சமுதாய தலைவர் சிராஜூல்மில்லத் A.K.A அப்துஸ்ஸமது ஸாஹிப்
***************************************
நான் இளம் வயதிலிருந்தே அரசியல், ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவுகளை கேட்பதில் ஆர்வம் உடையவன்.
தமிழகத்தின் மிக பிரபல்யமான அத்தனை சொற்பொழிவாளர்களின் பேச்சையும் கேட்டிருக்கிறேன்.
காங்கிரஸ் இயக்கத்தை சார்ந்த என் தந்தை முஹம்மது யாக்கூப் வாத்தியார் எங்கள் ஊரில் எந்த கட்சியின் கூட்டம் நடந்தாலும் என்னை அழைத்து செல்வார். நமக்கு பிடித்திருந்தாலும் பிடித்திராவிட்டாலும் எல்லாருடைய பேச்சையும் கேட்க வேண்டும்.
அப்பொழுது தான் விசாலமான சிந்தனையும் ஆழ்ந்த பொது அறிவும் நமக்கு கிடைக்கும் என்பார். என் தந்தையுடன் நான் இறுதியாக கலந்துக் கொண்ட கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவரான பி.ராமமூர்த்தியின் கூட்டமாகும்.
நான் லால்பேட்டையில் ஓதுகின்ற பொழுது நமது சமுதாயத்தின் மிக சிறந்த பேச்சாளர்களின் கூட்டம் லால்பேட்டையில் அதிகமாக நடைபெறும்.அதில் பெரும்பாலானோர் மதரஸாவில் தான் தங்குவார்கள். அப்பொழுது அவர்களுக்கு அருகில் இருந்து பணிவிடை செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மரியாதைக்குரிய தலைவர் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள், பன்மொழி புலவர் அப்துல் லத்தீஃப் ஸாஹிப், நாவலர் ஏ.எம்.யூஸுப் ஸாஹிப், சொல்லின் செல்வர் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது ஸாஹிப், திருப்பூர் மைதீன் ஸாஹிப் ஆகியோரின் பேச்சுக்களை மிகவும் ரசித்து கேட்பவன் நான்.
அவர்களில் முதலில் பேச்சாளர் என்ற முறையில் நான் தலைவர் அப்து ஸ்ஸமது ஸாஹிப் அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களை முதன்முதலில் 1966 ஆம் ஆண்டு லால்பேட்டையில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு காயிதே மில்லத் அவர்களுடன் வந்திருந்த பொழுது சந்தித்தேன்.
அன்று வெள்ளிக்கிழமை. காயிதே மில்லத் அவர்கள் ஜும்ஆவில் பயான் செய்வார்கள் என்று அறிவிக்குமாறு என்னை மவ்லானா இக்லீல் அவர்கள் ஏவினார்கள் .
நான் ஒலிபெருக்கியில் இன்று ஜும்ஆவில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் அவர்கள் உரையாற்றுகிறார்கள். எனவே, அனைவரும் சீக்கிரம் வாருங்கள்.சீக்கிரம் வாருங்கள் என்று திரும்ப திரும்ப கூறி கொண்டிருந்தேன்.
அப்பொழுது ஒரு மாணவர் என்னிடத்தில் வந்து ஸமது பாய் உன்னை கூப்பிடுகிறார் என்று சொன்னார்.
நான் அவரிடம் சென்ற பொழுது தலைவர் அவர்களை காயிதே மில்லத் என்று சொன்னால் போதாதா? மக்களுக்கு அவரைப் பற்றி தெரியாதா? ஏன் தேவையில்லாமல் அவர் பெயரை திரும்ப திரும்ப சொல்கிறாய்.
பெரியவர்களின் பெயரை தேவையில்லாமல் சொல்லக்கூடாது என்று என்னை கண்டித்தார். அவர்கள் எங்கு சொற்பொழிவு ஆற்றினாலும் அங்கு சென்று ஆர்வத்துடன் கேட்பேன்.
அந்தாண்டில் (1967) நடைபெற்ற எனது ஃபாஜில் பட்டமளிப்பு விழாவில் காயிதே மில்லத் அவர்களும் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது ஸாஹிப், திருப்பூர் மைதீன் ஸாஹிப் அவர்களும் சிராஜி மில்லத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
உரத்த குரலில் உணர்சிகரமாக பேசும் திருப்பூர் மைதீன் அவர்கள் பேசும் பொழுது எங்களை நோக்கி “பட்டம் பெரும் நீங்கள் எங்கும் யாரிடத்திலும் உண்மையை சொல்ல தயங்க கூடாது. நீங்கள் பணி புரியும் பள்ளியின் நிர்வாகி வட்டி வாங்குகிறார் என்றால் அதை சொல்வதை விட்டுவிட்டு மவ்லாய ஸல்லி வஸல் என்று வேறு பைத்துகளை பாடி விட்டு உண்மையை சொல்லாமல் சும்மா இருந்து விடக் கூடாது” என்று பேசினார்.
அதற்கு பின் பேசிய சிராஜூல்மில்லத் அவர்கள், “மைதீன் அண்ணன் அவர்கள் சொன்னதை போல உண்மையையே பேசுங்கள்” என்று வரலாற்றில் அரசர்களுக்கு முன்னால் உண்மையை பேசிய சில ஆலிம்களின் வரலாற்றை சுட்டி காட்டினார்கள்.
அவர்கள் மேலும் பேசியபோது,”இன்று பட்டம் வாங்கும் இளம் ஆலிம்களின் முகத்தில் தென்படும் குறுந்தாடிகளை பார்க்கும் பொழுது தாடி வைக்காத பெரியவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே சொல்லிய வண்ணம் மைதீன் சாஹிப் அவர்களை பார்த்தார்.(அவர் தாடி வைக்காமல் இருந்தார்)
உடனே அவர் “ஆமாம்,ஆமாம். நானும் வெட்கப்பட வேண்டும் என்றார்.எல்லோரும் புன்னகை பூத்தார்கள்.
இடமறிந்து, பொருளறிந்து, காலமறிந்து, பேசுவதில் வல்லவர், சிராஜூல் மில்லத். பிற மத அன்பர்கள் கூட அவர்களுடைய பேச்சை ஆர்வத்துடன் கேட்பார்கள்.
1980களில் மயிலாடுதுறை தாலுக்காவின் அனைத்து ஜமஅத்தார்களும் இணைந்து ஒரு மாபெரும் மீலாது விழா பேரணியையும் நகர பூங்காவில் பொது கூட்டமும் நடத்துவார்கள்.
அதில்,ஒரு முறை சிராஜூல்மில்லத் அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.அவர்கள் பேச ஆரம்பித்த பொழுது பூங்காவின் அருகே இருந்த சினிமா அரங்கின் முதல் காட்சி முடிவுற்று மக்கள் கூட்டம் கூட்டமாக பூங்காவின் வழியே பேருந்து நிலையம் சென்றனர்.
தலைவர் அவர்களின் கம்பீரமான குரலை கேட்டு பெரும்பாலானோர் அப்படியே நின்று விட்டார்கள். பிற மத சகோதரர்கள் அதிகமாக குழுமி இருந்த கூட்டத்தில், தலைவர் அவர்கள் நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றிய பொழுது மக்கத்து குறைஷியர்களின் மூட நம்பிக்கைகளை பற்றியும் சிலை வணக்கத்தை பற்றியும் சுவைப்பட கூறினார்கள்.
வியப்பு என்னவென்றால் அவர்களின் பேச்சு அங்கு குழுமி இருந்த இந்து சகோதாரர்களின் மனதில் எந்த ஒரு காயத்தையும் ஏற்படுத்தாமல் “அவர் பேசுவது சரிதானே” என்று எண்ணுகிற வகையில் பேசினார்கள்.
என்னுடைய பல இந்து நண்பர்கள் அந்த பேச்சை பெரும் அளவு பாராட்டினார்கள்.
ஷஃபான் வழக்கில் விவாகரத்து செய்யப்பட மனைவிக்கு ஜீவனாம்சம் தொகை கொடுக்கப்பட வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஷரீஅத் விளக்க மாநாடு நடைபெற்றது.
பாண்டிச்சேரி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற பெருந்திறள் கூட்டத்தில் தலைவரின் பேச்சு என்றும் மறக்க முடியாது.
“முஸ்லிம்களான எங்களை தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.தேசிய நீரோட்டம் என்றால் என்ன? இந்து சமுதாயத்தின் கொள்கைகளை பின்பற்றுவது தான் தேசிய நீரோட்டமா?
சமீபத்தில் கல்கத்தாவில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராமகிருஷ்ணமடம் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தங்களை இந்து என்று சொல்ல கூடாது என்றும் தங்களை இந்து அல்லாதசிறுபான்மையினர் என்று அறிவிக்க வேண்டுமென வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.
நான் சட்டமன்றத்தில் மாண்புமிகு ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை நோக்கி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வருகிறதா? என்று கேட்டேன்.(அப்பொழுது தலைவர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்). அதற்கு மாண்பு மிகு அமைச்சர் அவர்கள், மேல்மருவத்தூர் கோவில் நிர்வாகிகள் தாங்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், எனவே, அந்த துரையின் கீழ் நாங்கள் வரமாட்டோம் என்று அறிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னார்.
நாங்கள் யார்யாரெல்லாம் ஹிந்துக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அவர்கள் எல்லாம் தங்களை ஹிந்துக்கள் அல்ல என்று சொல்கிற பொழுது நாங்கள் உறுதியான மார்க்கத்தை பின்பற்றி முஸ்லிம்கள் என்று அறிவித்திருக்கின்ற பொழுது எங்களை எந்த தேசிய நீரோட்டத்தில் சேர சொல்கிறீர்கள்.
(காமன் சிவில் கோடு) இந்தியா முழுமைக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம் ஆனால், ஒரு நிபந்தனை: உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு சிவில் சட்டங்களையும் கொண்டு வாருங்கள். நாங்கள் எங்கள் இஸ்லாம் வகுத்துள்ள சிவில் சட்டத்தை யும் கொண்டு வருகிறோம். அனைத்தையும் ஒப்பிட்டு பாப்போம். இஸ்லாமிய சிவில் சட்டத்தை விட பிற நாட்டு சிவில் சட்டங்கள் சிறப்பானதென்று நீங்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அந்த சட்டத்தை ஏற்று கொள்ள தயாராக இருக்கிறோம். உங்களால் ஒருபோதும் இஸ்லாத்திற்கு நிகரான சட்டத்தை கொண்டு வரவே முடியாது.” என்று உணர்ச்சிகரமாக பேசினார்.
மைதானமே தக்பீரால் அதிர்ந்தது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறந்த இலக்கிய பேச்சாளரான முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் கா.காளிமுத்து அவர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார். அதற்கு பின் பேசிய சிராஜூல்மில்லத் பேச்சை கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் கேட்டது.
கூட்டம் முடிந்து திருநெல்வெலி செல்லும் பஸ்ஸில் நான் சென்று கொண்டிருந்தேன். அந்த பஸ்ஸில் வந்த தி.மு.க தொண்டர்கள் “இன்று பாய் நம்முடைய தலைவர் பேச்சையே சாப்பிட்டு விட்டார். அவர் பேச்சு தான் சூப்பர்.” என்று பேசி கொண்டு வந்தார்கள். எனக்கு மிக பெருமையாக இருந்தது.
தலைவர் சிராஜூல் மில்லத் அவர்களின் சில அரசியல் முடிவுகள் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகின. ஆனால், தலைவர் அவர்களின் நாவன்மையை பற்றியோ, அவரின் தனிமனித ஒழுக்கத்தை பற்றியோ யாரும் குறை சொல்ல முடியாது. தன்னை சந்திக்க வருபவர்களிடத்தில் எங்களை போன்ற சிறு வயது உடையவர்களாக இருந்தாலும் கூட இன்முகத்துடன் பேசும் சிறந்த பண்பாளர் அவர்.தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வார்கள் என கேள்விபட்டுள்ளேன்
அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் சேர்ப்பானாக.ஆமீன்
___ மீள் பதிவு கணியூர் இஸ்மாயீல் நாஜி

No comments:
Post a Comment