துர்நாற்றத்தின் மூலம் காப்பாற்றிய அல்லாஹ்
-----------------------------------------------------------------------------------------
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி எங்கள் வாழ்க்கையில் விளையாடப் பார்த்தது.சரியான நேரத்தில் அல்லாஹ் எங்களைக் காப்பாற்றினான்.
அரையாண்டு பரீட்சை விடுமுறையில் குடும்பத்தாருடன் சென்னை சென்றிருந்தேன்.
திருவல்லிக்கேணி ஹைரோட்டில் வசிக்கின்ற என மாணவன் மவ்லவி ஐதுருஸ் நாமி வீட்டில் தங்கி இருந்தோம்.
26 ஆம் தேதி காலை ஸுப்ஹூத் தொழ எழுந்த பொழுது பூமி சுற்றுவது போன்று தோன்றியது. எனக்கு சக்கரை நோய் இருப்பதால் தலை சுற்றுவதாக நினைத்துக் கொண்டேன்.
தொழுத பின்னால் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்க நானும் என் மனைவியும் சிறிது நேரம் கடற்கரையில் உலாவி வரலாம் என்று புறப்பட்டோம். கண்ணகி சிலைக்கு எதிரே உள்ள தெருவில் இருந்து ரோட்டை தாண்டினால் கடற்கரை. அதன் அருகே நெருங்கும் பொழுது பாதையின் ஓரத்தில் பலரும் காலைக் கடனைக் கழித்து இருந்ததால் பயங்கர துர்நாற்றம் வீசியது.
நாற்றத்தை தாங்க முடியாத என மனைவி எனக்கு வாந்தி வருவது போல் இருக்கின்றது, வீட்டிற்கு திரும்பி விடலாம் என்று சொன்னார்.
மூணாவது மாடியில் இருக்கும் வீட்டிற்குள் நுழைந்த பொழுது உறவினர் ஒருவர் தொலைப்பேசியின் வழியாக கடல் பொங்கி ஐஸ் ஹவுஸ் நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
சன் நியூஸைப் பாருங்கள் என்று சொன்னார். நியுஸைப்பார்த்து அதிர்ந்து போனோம். எல்லோருடைய கண்களும் கலங்கி விட்டன. கடற்கரைக்கு செல்லும் பொழுதெல்லாம் எங்கே அமர்வோமோ அந்த இடம் நீரில் மூழ்கி இருப்பதுடன் காரொன்று தலைகீழாக கிடக்கும் காட்சியைக் கண்டோம்.
துர்நாற்றத்தின் மூலம் அல்லாஹ் எங்களை பெரும் விபத்திலிருந்து எங்களைக் காப்பாற்றினான்.
அன்று என் சொந்த ஊரான கணியூரிலிருந்து எங்கள் உறவினர் ஒருவர் கடலூர் பீட்சைப் பார்க்க குடும்பத்தாருடன் காரில் வந்து இருந்தார். தனது ஐந்து வயது குழந்தையைக் காரில் உட்கார வைத்து விட்டு கடற்கரை சென்ற அவர்கள் சுனாமியில் மறைந்து விட்டார்கள்.
நீங்கள் பூமியில் எங்கு மவ்த்தாவீர்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என அல்லாஹ் சொல்கிறான். சுனாமி நமக்கு பல பாடங்களிக் கற்றுக் கொடுத்து இருக்கின்றது. அதில் ஒன்று, அல்லாஹ் நமக்கு மரணத்தை எவ்வழியில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். எனவே, நாம் மவ்த்துக்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.
தீடீர் மவ்த்து இறை மறுப்பாளர்களுக்கு தீமையாகும். விசுவாசிகளுக்கு நன்மையாக இருக்கின்றது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு முஃமீன் 24 மணி நேரமும் உண்மையான விசுவாசியாகவே இருப்பான். பெரும் பாவங்கள் செய்ய மாட்டான். தான் செய்கின்ற சிறு சிறு பாவங்களுக்கும் உடனுக்குடன் பாவ மன்னிப்பு தேடுவான். தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுவான். எனவே, எந்நேரமும் மரணத்திற்கு தயாராக இருப்பான்.
ஆனால், இறைமறுப்பாளர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படாத நிலையில் பாவம் செய்தவர்களாக மரணத்தை தழுவுவார்கள்.
எனவே, நாம் எந்நேரத்திலும் மரணம் வரலாம் என பயந்து நமது வணக்கங்களை சரி வர நிறை வேற்ற வேண்டும். நம்மை போன்றவர்களுக்காகத் தான் “#யா அல்லாஹ்! திடீர் மவ்த்தை விட்டு உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்து உள்ளார்கள்.
நாமும் அவ்வாறே துஆ செய்வோம்
