Wednesday, December 16, 2020

குசைமா பின் ஸாபித் பொய் சொன்னார்களா

குசைமா பின் ஸாபித் என்ற நபி தோழர் பொய் சொன்னார்களா?? 
----------------------------------------------------------------------------------------------------
அதற்கு நபிகள் நாயகம் துணை நின்றார்களா???
பொய் என்றால் என்ன ?உண்மை என்றால் என்ன ?
-------------------------------------------------------------------------------------

1964 ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் மன்பவுல்உலா  மதரஸாவில் ஓதினேன். அங்கு “மன்தீக்” என்று சொல்லப்படும் “லாஜிக்” பாடத்தை மறைந்த கம்பம் அப்துல் கனி ஹஜ்ரத் அவர்களிடம் கற்றேன். அவர்கள் புதியதாக இஸ்லாத்தை தழுவியவர்கள்
அவர்களிடம்  “ஹக் என்றால் என்ன?”, “ஸித்க் என்றால் என்ன?” என்று கேட்டேன்.
ஏனென்றால் “ஹக்” என்பதற்கும் “ஸித்க்” என்பதற்கும் “உண்மை” என்றே பொருள் கொள்கிறோம். அதற்கு ஹஜ்ரத் அவர்கள் குர்ஆனுடைய அடிப்படையில் நீண்ட ஒரு விளக்கத்தை தந்தார்கள்.
அதை நான் இங்கே மிக சுருக்கமாக பதிவு செய்கிறேன்.
“ஹக்” என்றால் எது நிலையாக இருக்கின்றதோ, உறுதியாக இருக்கின்றதோ,எது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதோ   அவைகளை ஹக் என்று சொல்வார்கள்.
“குர்ஆன், அல்லாஹ், நபி, மறுமை நாள்,” இவற்றை எல்லாம் குர்ஆன் ஹக் என்று சொல்கிறது. ஏனென்றால் அவை எல்லாம் உறுதியானவை, நிலையானவை.
உண்மை நிலைக்கு ஏற்ப ஒருவர் பேசினால் அதற்கும் “ஹக்கை” பேசினார் என்று சொல்லப்படும்.
“ஸித்க்” என்பது பேசு கின்ற ஒருவர் உளப்பூர்வமாக எதை நம்புகிறாரோ அதை பேசினால் அதற்கு “ஸித்க்” என்று சொல்லப்படும். அவர் சொல்வது உண்மை நிலைக்கு மாற்றமாக இருந்தாலும் சரியே.
“கித்ப்” என்பது ஒருவர்  தன்  உள்ளத்தில் பொய் என நம்பிக்கொண்டு உண்மையான செய்தியை சொன்னாலும் அது பொய்யென்றே சொல்லப்படும். 
இரண்டிற்கும் ஹஜ்ரத் நடைமுறை உதாரணத்தின் மூலம் விளக்கினார்.
“உன்னை தலைமை ஆசிரியர் அழைத்து, அப்துல் கனி ஹஜ்ரத் இருக்கிறாரா? என பார்த்து வா என்று சொல்லி அனுப்புகிறார். நீ என் அறை  வாசலுக்கு வருகிறாய். என் அறை  கதவு மூடி இருக்கிறது. வாசலில் என்னுடைய செருப்பு இருக்கிறது. செருப்பு இருப்பதனால் நான் உள்ளே இருப்பதாக நினைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்று, “கதவு சாத்தி இருக்கிறது. ஹஜ்ரத் உள்ளே இருக்கிறார்கள்.” என்று சொல்கிறாய்.
ஆனால், செருப்பு அறுந்து விட்ட காரணத்தால் அந்த செருப்பை வாசலில் போட்டு விட்டு நான் வேறு செருப்பை அணிந்து கொண்டுவெளியே சென்று விட்டேன்.
இப்பொழுது, நான் உள்ளே இருக்கிறேன் என்று நீ சொன்னது பொய் அல்ல “ஸித்க்” உண்மை. ஏனென்றால் நான் இருக்கிறேன் என்று நம்பியதால் சொல்கிறாய். 
ஆனால், அது “ஹக்” அல்ல. ஏனென்றால் அது உண்மை நிலைக்கு மாற்றமானது.
இதற்கு நேர் மாற்றமாக உண்மையான ஒரு நிகழ்வை ஒருவன் அது பொய் என்று நினைத்து கொண்டு அந்த உண்மையை சொன்னாலும் அது பொய் தான். ஏனென்றால், அவன் உள்ளத்தால் அதை பொய் என்று நம்புகிறான்.
உதாரணாமாக, குர்ஆனில் நயவஞ்சகர்களை பற்றி சொல்லும் பொழுது, 
63:1    إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ ۗ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
63:1. (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: “திண்ணமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்.” திண்ணமாக நீர் அவனுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான்.
இங்கே, நயவஞ்சகர்கள் நீங்கள் அல்லாஹ்வுடைய ரஸூல் என்று “ஹக்” ஆன உண்மையான செய்தியை தான் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் உள்ளத்தில் அதை பொய்யென நினைப்பதால் அல்லாஹ் அவர்களை பொய்யர்கள் என்று சொல்கிறான்.
    அதே நேரத்தில் மறைவானவற்றை நம்புகிற ,கண்ணால் பார்க்காத அல்லாஹ்வையும் ,மலக்குகளையும் ,சொர்க்க நரகத்தையும், நபிமார்களையும் நம்புகிற விசுவாசிகளை  அல்லாஹ் ஸாதிக்கீன்கள் உண்மையாளர்கள் என்கிறான். ஏனென்றால் அவர்களின் உள்ளம் எதை நம்புகிறதோ  அதனை உரக்க சொல்கிறார்கள் எனவே அவர்கள் உண்மையாளர்கள்.
 ஆனால் முனாஃபிக்குகள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன் நின்று அவர்களின் உள்ளம்  நம்பாத உண்மையை பொய் என எண்ணி  உரக்க சொல்கிறார்கள்,எனவே அவர்கள் பொய்யர்கள் “
 இந்த விளக்கத்தின்  அடிப்படையில் ஸஹாபி நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்  உண்மை மட்டுமே பேசுவார்கள் என்ற நம்பிக்கையில்  சாட்சி சொல்ல முன் வருகிறார் இது எப்படி பொய் ஆகும் அவர் வியாபாரம் நடக்கும் பொழுது நான் பார்த்தேன் என்று சொல்லவில்லையே, அப்படி சொல்லியிருந்தால் அதை பொய் என்று சொல்லலாம்.
   இருவர் காஜியிடம் தாங்கள் பெருநாள் பிறையை பார்த்தாக சொல்கிறார்கள் ,ஆனால் அவர்கள் முஸ்லிமா,?உண்மை பேசுபவர்களா? என காஜிக்கு தெரியாது ,இந்த நேரத்தில் காஜிக்கு நன்கு அறிமுகமான இருவர் இந்த இருவரைப்பற்றி எங்களுக்கு தெரியும்,இவர்கள் உண்மையாளர்கள் என சாட்சி  சொன்னால் இவர்கள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் அவர்களின் பிறை தெரிந்தது என்ற சாட்சியத்தை  காஜி ஏற்றுக்கொள்ளலாம் என மார்க்க சட்டம் சொல்கிறது.

No comments:

Post a Comment