Friday, April 29, 2022

ரமளான் புரட்சி

வருடாந்த மனிதநேயப் புரட்சி ரமழான்
***********************************

அரபியில்: முஸ்தஃபா ஸாதிக் அர்ராஃபிஈ
தமிழில் : அஃப்ஃபான் அப்துல் ஹலீம் 

(முஸ்தஃபா ஸாதிக் அர்ராஃபிஈயை பல அடைமொழிகளைக் கொண்டு அடையாளப்படுத்தலாம். ஓர் இலக்கியவாதியாக, சிந்தனையாளராக, எழுத்தாளராக, கவிஞராக, தத்துவ ஞானியாக, பயிற்றுவிப்பாளராக, ஊடகவியலாளராக என்று பல்வேறு பரிமாணங்களை எடுத்த ஒருவர். 1881ல் எகிப்தில் பிறந்து வளர்ந்து 1937ம் ஆண்டு மரணித்தார். நோன்பின் தத்துவங்கள் பற்றியும் யதார்த்தங்கள் பற்றியும் அவர் தனது 'வஹ்யுல் கலம்' எனும் நூலில் எழுதியிருக்கும் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்)

--------------------

நோன்பின் மாண்புகள் பற்றியோ அதன் பின்னால் புதைந்திருக்கும் ஞானங்கள் பற்றியோ சொல்லிக்கொள்ளத்தக்க எழுத்துக்களை நான் வாசித்த ஞாபகமில்லை. உடலுக்குத் தரும் பிரயோசனத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு மருத்துவம் தான், உடம்பை சீர்படுத்துவதில் அதற்கு தனியானதொரு வழிமுறை இருக்கின்றது. மருத்துவர்கள் அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள், அவர்களது வார்த்தையில் நோன்பென்பது வருடாந்தம் குடலை பலப்படுத்தி, இரத்தத்தை சுத்தப்படுத்தி, கலங்களைப் புனரமைக்கும் சக்தி வாய்ந்த முப்பது மாத்திரைகள். ஆனால் நாமிங்கு இது பற்றி பெரிதாக அலட்டிக்  கொள்ளப் போவதில்லை. இங்கு எமது நோக்கமெல்லாம் மனித ஆன்மா வாழும் சின்னஞ்சிறு களத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில், மனிதாபிமான சிந்தனையின் தொடர்ந்தேர்ச்சையான அமுலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் இதன் பின்னால் புதைந்திருக்கின்ற இஸ்லாத்தின் தனிப்பெரும் தத்துவங்களையும் யதார்த்தங்களையும் தோண்டியெடுப்பதுதான். அப்போதுதான் நிகழ்வுகளில் நாம் காணும் மாற்றங்கள் நிதர்சனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அல்குர்ஆனின் அதிசயமான அற்புதங்களில் ஒன்றுதான் அது அதன் வரையறுக்கப்பட்ட வார்த்தைகளுக்குள் வரலாற்றின் எப்பகுதிக்குமான வாழ்க்கைத் தத்துவங்களையும், வழிகாட்டல்களையும் பொதிந்து வைத்திருப்பதாகும். ஆனால் எல்லாக் காலத்துக்குமுரிய யதார்த்தங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படுவதில்லை, காலம் கனியும் போது அல்குர்ஆன் அதற்குப் பொருத்தமான யதார்த்தங்களை தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துகின்றது

கம்யூனிஸவாதிகள் தலையைப் போட்டு உடைத்துக்கொள்ளும் ஒரு விடயம் இருக்கின்றது. அவர்கள் மனித நரம்புகள் தொட்டு மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்து தோற்றுப் போய் இருக்கின்றார்கள். அவர்களது சிந்தனைகள் பூமியில் வாழ முடியாது தோற்றுப் போய் புத்தகங்களுடன் தமது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு விட்டன. நோன்பின் மாண்புகள் பற்றி அவர்கள் சிறிதேனும் சிந்தித்திருப்பார்களாயின், அவர்கள் பேசிய கம்யூனிஸத் தத்துவங்களையெல்லாம் மிகைக்கக் கூடிய ஒரு மாதகால நடைமுறைப் பயிற்சியொழுங்கொன்றை அவர்கள் கண்டுகொண்டிருப்பர். இந்த நோன்பிருக்கின்றதே அது மனிதர்களின் வயிற்றுச் சமத்துவத்துக்காக ஷரீஅத் விதித்த கட்டாய ஏழ்மையாகும். மில்லியன் டாலர் சொந்தக்காரனாயினும் சரி, அன்றாடங்காய்ச்சியும் சரி அதுவுமில்லாதவனும் சரி இந்தக் கடமையினூடே சமமாய் நிற்கின்றனர். இது இஸ்லாத்தின் தனிப்பெரும் அழகாகும். தனிமனிதத் தற்பெருமைகள் யாவும் களையப்பட்டு தொழுகையில் ஓரணியில் நிற்பது போல, சமூக அந்தஸ்து பற்றிய பார்வைகள் யாவும் பலி கொடுக்கப்பட்டு தைக்காத ஆடையுடன் ஹஜ்ஜில் அனைவரும் சங்கமிப்பது போல இங்கும் நோன்புக்கூடாக ஒரு சமத்துவம் கட்டாயமாக்கப்படுகின்றது.

மனிதர்கள் உணர்வுபூர்வமாக சமத்துவத்தை அனுபவிப்பதற்கான ஒரு கட்டாய வறுமை ஏற்பாடே இந்த நோன்பு. உண்மையான வாழ்க்கையென்பது வாழ்க்கையில் இல்லை, அதற்குப் பின்னர்தான் இருக்கின்றது என்று அது கற்றுக்கொடுக்கின்றது. மனிதர்கள் வௌ;வேறு  வித்தியாசமான நிலைகளில் இருக்கும் போது அந்தப் பாடம் சாத்தியமின்றிப் போய் விடுகின்றது, அதனால்தான் அனைவரது உணர்வுகளும் ஒன்றாக மாற்றப்பட்டு அது கற்பிக்கப்படுகின்றது. மனிதர்கள் தத்தமது நிலையில் இருந்துகொண்டு தமது ஆசைகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் போது புரிந்துகொள்ள முடியாமலிருக்கும் விடயங்களை, ஒரே வலியை ஒரே சந்தர்;ப்பத்தில் ஒன்றாக உணர்ந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கும் போது புரிந்துகொள்ள முடியுமாகி விடுகின்றது.

உண்மை என்னவென்றால் மனிதர்கள் நிச்சயமாக தமது அறிவால் வேறுபடுவதில்லை, தமது பரம்பரைப் பெருமைகளால் வேறுபடுவதில்லை, அவர்களது தராதரங்களினூடாக வேறுபடுவதில்லை, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தினூடாகக் கூட வேறுபடுவதில்லை. ஆனால் அவர்கள் வயிற்றால் வேறுபடுகின்றார்கள். வயிற்றின் சட்டங்கள் அறிவையும் உணர்வுகளையும் மிகைத்து விடக்கூடிய ஆற்றல் பெற்றவையாகும். மனிதத்தின் மாபெரும் அழிவுக்கு வயிறுதான் காரணம், பூமியில் சர்வாதிகாரம் புரியும் ஆற்றல் அதற்குண்டு. வயிறும் மூளையும் முரண்பட்டுக்கொள்ளும் சந்தர்ப்பமொன்றில் வயிற்றின் இரும்புக் கரம் கொண்டு மூளை படுபயங்கரமாக நசுக்கப்படுகின்றது, மூளையின் எச்ச சொச்சங்களைக் கூட விட்டு வைக்காமல் வயிறு வெறியாட்டம் ஆடி விடுகின்றது.

இத்தகைய கொடூரமான வயிற்றை நெறிப்படுத்தி, ஆற்றுப்படுத்தி, அமைதிக்குப் பழக்கப்படுத்தி பயிற்றுவிக்கும் மகத்தான பணியை நோன்பு செய்கின்றது. அதற்கு முன்னால் மனிதர்களனைவரும் சமமாகி விடுகின்றனர், அனைவரும் ஒரே உணர்வுள்ளவர்களாக ஒரே இயல்புள்ளவர்களாக மாறி விடுகின்றனர், வயிற்றுக்கும் சடத்துக்குமிடையே புகுந்து நோன்பு ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்கின்றது, நரம்புகளின் கடிவாளத்தைக் கையிலெடுத்து பசியையும் சுவையையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடுகின்றது. 

கிழக்கு மேற்கெங்கிலுமாய் மனிதர்கள் ஆச்சரியமான அற்புதமான இந்த கட்டுப்பாட்டுக்குள் ஒன்றித்து விடுகின்றனர். அங்கு மனிதம் ஆன்மாவின் குரலாக அருற்பிரவாகமெடுத்து ஒலிக்க ஆரம்பிக்கின்றது. பசியின் உச்சகட்டத்தில் கம்யூனிஸத்தின் புத்தகத் தத்துவங்கள் யாவும் யதார்த்த உலகில் சாத்தியமாகி உள்ளங்கள் பசியாறி விடுகின்றன. பணக்காரனும் ஏழையும் ஒரே தரத்துக்கு வர வேண்டும் என்ற தத்துவத்தையும் தாண்டி அவர்களிருவரும் ஒரே உணர்வைப் பெற்று ஒரே இயல்பில் சிந்திக்கும் அற்புதம் அங்கு நடந்தேறி விடுகின்றது. ஏழையின் உணர்வுகளை அவனது தரத்துக்கு வந்து பணக்காரன் அனுபவிக்கும் சமத்துவமும், பணக்காரனின் இயல்புகளை ஏழையும் புரிந்து கொண்டு மனஅமைதியடையும் தன்மையும் நடந்தேறுகின்றன. இந்த சமத்துவமும் மன அமைதியும் தான் வாழ்க்கைச் சக்கரத்தை இயல்பாக சுழல வைக்கும் (Lubrication) உராய்வு நீக்கியாகும். 

உள்ளத்தில் தொழிற்படும் நியதிகளில் ஒன்றுதான் 'வலிகளின் போதே வாஞ்சை பிறக்கின்றது' என்பதாகும். இது நோன்பு தன்னகத்தே பொதிந்திருக்கும் இன்னுமொரு சமூகவியல் இரகசியம். வயிற்றுக்கெதிராக கலகம் செய்து, அதன் தேவையையும் ஆசையையும் அடக்கி வைக்கும் அந்தப் பொழுதில் அவன் அனுபவிக்கும் வலி அந்த வலியுடனே வாழ்பவர்கள் மீதான வாஞ்சையாகவும் கரிசனையாகவும் அவனிலிருந்து வெளிப்படுகின்றது. அன்பு செலுத்துவது எப்படியென்று நோன்பு எடுக்கும் நடைமுறைப் பாடமிது. இதுவல்லாத இன்னொரு வழிமுறை அதற்கு இருக்குமென்றால் அது நிச்சயம் பேரழிவு தரும் அனர்த்தங்களாகத்தான் இருக்க முடியும். இவ்விரண்டும் மனித மனத்தில் அன்பும் கருணையும் பிறப்பதற்கான இரண்டு வழிமுறைகள், ஒன்று தெளிவானது அடுத்தது மயக்கமானது, ஒன்று நேரடியானது அடுத்தது மறைமுகமானது, முன்னையது திட்டமிடப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட வழிமுறை, பின்னையது திடீரென இறங்கி திக்குமுக்காட வைக்கும் அதிர்ச்சி வைத்தியம்.

பணக்காரனின் பசியுணர்வு ஏழையின் மீதான கருணையாக மாறும் அந்த சந்தர்ப்பத்தில் மனிதம் என்ற சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் யாவும் காலாவதியாகி அற்புதமான புதிய விளக்கங்கள் பிறக்கின்றன. கட்டுப்படுத்தப்படும் உணர்ச்சிகளின் விளைவாகத் தோன்றும் நல்லம்சங்கள் சடங்களின் மீது ஆட்சி புரிய ஆரம்பிக்கின்றன. செல்வந்தனின் மனச்சாட்சியில் 'என்னைக் கவனி, என்னைக் கவனி' என்ற ஏழையின் குரல் யதார்த்தமாக ஒலிக்க ஆரம்பிக்கின்றது, அந்த மனச்சாட்சியின் ஓங்கியொலிக்கும் குரல் அவனது வாசல்படியில் ஏழையின் பலவீனமான குரலின் தேவையை இல்லாமல் செய்து விடுகின்றது. அது இரங்கும் குரல், ஆனால் மனசாட்சியின் குரலோ ஏவும் குரலாகவே ஒலிக்கின்றது. பாதிக்கப்பட்ட ஒருவன்தான் அதே பாதிப்புக்குள்ளான இன்னொருவனுக்கு உண்மையாக ஆறுதல் சொல்லலாமென்பது போல ஏழையின் இடத்துக்கு இறங்கி அவனது நிலையை செல்வந்தன் அனுபவிக்கின்றான்.

வயிற்றின் வரலாற்றை வெறும் முப்பது நாட்களில் மாற்றியெழுதும் இந்த அற்புதமான இஸ்லாமிய ஒழுங்கோடு போட்டி போடும் வேறு அற்புதங்கள் எங்கேனும் இருந்தால் எடுத்து வாருங்கள், வயிற்றின் கர்ண கொடூரத் தாக்குதலுக்கு முன்னால் சுருண்டு விழும் அனைத்து உணர்வுகளையும் நிறுத்தி வைத்து ஒரு போட்டி வைப்போம். வயிற்றின் வரலாறு மாறினாலும் உள்ளத்தின் வரலாறு மாறுவதில்லை, பகலில் தடுத்ததை இரவில் கழாச் செய்து முடிக்கும் உணவு நேர அட்டவணை மாறும் மாதமாக ரமழான் இன்று மாற்றப்பட்டாலும் கூட நோன்பு அதன் பிரயோசனங்களை வழங்குவதை நிறுத்திக் கொள்வதில்லை.

நோன்பு ஒரு பயிற்சிப் பட்டறை என்பதில் எனக்கு மிக ஆழமான நம்பிக்கை இருக்கின்றது. ஒவ்வொரு பன்னிரு திங்களிலும் ஒரு தடவை வரும் தொடர்ந்தேர்ச்சையான முப்பது நாட்களின் பின்னால் ஒளிந்திருக்கும் ஞானம் அதுதான். உடலின் மீதான உள்ளத்து உணர்வுகளையும் உள்ளத்தின் மீதான உடலின் செயற்பாடுகளையும் அது ஒழுங்குபடுத்துகின்றது. வருடமொரு தடவை உடலுக்கோர் ஓய்வாகவும், உள்ளத்துக்கோர் உல்லாசமாகவும், வாழ்க்கை முறையில் ஒரு மாற்றமாகவும் நோன்பு ஓர் ஆரோக்கிய மாதமாய் மிளிர்கின்றது. நரம்புத் தொகுதி மறுசீரமைக்கப்படுகின்றது.

பிறை கண்டு நோன்பு பிடிப்பதில் உள்ள ரகசியம் பற்றி சிந்தித்ததுண்டா?! பிறை தென்பட்டதை உறுதிப்படுத்தி நோன்பின் ஆரம்பம் அறிவிக்கப்படுவது போலவே மனித உணர்வுகளின் உண்மையான ஒதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை அடைந்து கொள்வதற்கான திடவுறுதி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அறிவிப்பு செய்யப்படுகின்றது. மனிதனுக்குள் புதைந்திருக்கும் மனிதத்தையும் அன்பையும் நன்மையின் வாயில்களையும் திறந்து விடுவதற்காய் வானத்திலிருந்து பிரத்தியேகமாய் புறப்பட்டு வரும் புத்தம் புதிய ஒளிக்கீற்றே தலைப்பிறை.

நோன்பு போதிக்கும் ஞானங்களில் இன்னுமொன்றுதான் ஒரு மனிதனின் நாட்ட சக்தியை இன்னுமின்னும் பலப்படுத்த அது தரும் பயிற்சியாகும். இது வகுப்பறையில் உட்கார்ந்து குறிப்பெடுக்கும் பயிற்சியல்ல, மாற்றமாக செயற்களத்தில் குதித்து முயன்று தவறி முயன்று வெல்லும் நடைமுறைப் பயிற்சி. ஒரு நோன்பாளி அவனாகவே அவனது மிருகானிய்யத்தான பக்கங்களிலிருந்து மீண்டு வருவதற்கு வழங்கப்படும் பயிற்சி. தவிர்ந்துகொள்வதில் பிடிவாதத்தை வழங்கும் அற்புதப் பயிற்சி. ஊனமுற்றிருக்கும் உள்ளத்து உறுதிக்கு உரமூட்டி உணர்வளித்து உயிர்கொடுக்கும் உன்னதமான பயிற்சி. பொறுமையின் பரந்து விரிந்த பரப்புக்களை உணர்ந்தறிந்து உள்ளத்தில் அதன் அத்திவாரக் கற்களை உறுதியாய் பதிக்கும் பயிற்சி. இந்தப் பயிற்சி காலவோட்டத்தில் மங்கி மறைந்து மறந்து போகும் பயிற்சியல்ல, உறுதியான நிலையான சிந்தனைத் தெளிவையும் நடைமுறை மாற்றத்தையும் யதார்த்தமாக சாத்தியப்படுத்தும் ஆச்சரியமான பயிற்சி.

இந்த சக்திக்கு இன்னுமோர் உயர்ந்த சமூகப் பெறுமானம் இருக்கின்றது. அதுதான் அறிவினதும் விவேகத்தினதும் தரத்தை விட அதியுயர்ந்த பெறுமானத்தை மனிதத்துக்கு வழங்குவதாகும். அறிவிலும் விவேகத்திலும் சிந்தனைகள் உதிக்கும், தட்டுப்படும், ஆனால் கடந்து சென்று விடும். அதுவே ஒரு மனிதனின் எண்ணத்திலும் நாட்டத்திலும் உருவாகும் போது அது யதார்த்தமான செயல்வடிவத்துக்கு மாறுகின்றது. உலகில் எங்காவது, எந்த மார்க்கத்திலாவது, எந்த சித்தாந்தத்திலாவது, எந்த சமூகத்திலாவது மனிதர்களது நாட்ட சக்தியைத் தீர்மானிக்கக் கூடிய பலப்படுத்தக் கூடிய ஒரு முப்பது நாள் வேலைத்திட்டம் இருந்தால் எடுத்து வாருங்கள். ஒரு பக்கத்தால் தலையில் புகுந்து இன்னொரு பக்கத்தால் வெளியேறி விடக் கூடிய தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் பற்றி நான் பேசவில்லை, நடைமுறைப்படுத்தப்படும் யதார்த்தங்களுடன் ஒன்றித்து இரண்டரக் கலந்த இயல்புகளைப் பற்றிச் சொல்கிறேன்.

ஒருவனுடைய சிந்தனைகள் அவனது மனோ இச்சைகளை ஆளுகின்ற நிலையை விட உயர்ந்த ஒரு நிலைக்கு அவனின் நாட்ட சக்தியைக் கொண்டுவர வேறேதாவதொன்றால் முடியுமாக இருந்தால் சொல்லித் தாருங்கள். இத்தகையதோர் அரிய சந்தர்ப்பம்தான் இந்த நோன்பு.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த இஸ்லாமிய நோன்பு உலகின் மூலை முடுக்கெங்கும் வியாபித்துப் பரவினால், அது மனிதத்துக்கெதிரான உலகின் சக்திகளுக்கு சிம்மசொப்பனமான ஒரு மாதகால வருடாந்தப் புரட்சியாக இருக்கும். அந்தப் புரட்சி இந்தப் பூமியின் அசிங்கங்களையும் அட்டூழியங்களையும் துடைத்தெறியும். கஞ்சத்தனமும் அதன் ஆழப்புதைந்த எச்ச சொச்சங்களும் கூட அகற்றப்படும். மனிதனின் உளவியல் பிரச்சினைகள் யாவும் ஒரு மாதகாலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்படும். ஒவ்வோர் ஆணும் பெண்ணும் அவர்களது உள்ளத்தின் ஆழத்துக்குள் இறங்கி அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நலவுகளை அடையாளம் கண்டு தோண்டியெடுக்க ஆரம்பிப்பர். அந்த நலவுகள் அவர்களது சிந்தனை ஆலைகளில் புடம் போடப்பட்டு தேவையும் வறுமையும் நீங்குவதற்கான உற்பத்திகளாக வெளியேற்றப்படும். மனித உடலின் இயல்புகள் பற்றிய புத்தகங்களின் தத்துவங்கள் கிடப்பில் போடப்பட்டு பொறுமையும் உள உறுதியும் வாழும் உறைவிடமாய் அதை அறிமுகப்படுத்தும் உன்னத விளக்கம் பிறக்கும். இதன் விளைவாக மனிதமும் சமத்துவமும் நன்மைகளும் தலைநிமிர்ந்து வாழும். சகோதரத்துவமும் சுதந்திரமும் பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய கரிசனையும் கோலோச்ச ஆரம்பிக்கும்.

மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த மாதத்தில் மனித உடல் அதன் ஆன்மீக சக்தியை தேவைக்கதிகமாக சேமித்து வைத்துக் கொள்வதாகும். உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆன்மீக வங்கியில் அது வைப்புச் செய்யப்படுகின்றது. பின்னால் வரும் நாட்களின் கஷ்ட நஷ்டங்களிலும், சோதனைகளிலும் அந்த ஆன்மீகம் பொறுமை வடிவிலும் திடவுறுதி வடிவிலும் மீளப்பெறப்படுகின்றது. 

இந்த சக்தியை தேவைக்கேற்ப சேமித்து செலவழிக்கக் கூடிய சக்தி பெற்ற சமூகமொன்றுதான் உலகில் அற்புதமான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டக் கூடிய சமூகமாகும். இப்போது புரிகிறதா எமது முன்னோர்கள் தமது சாதனைகளுக்கான எரிபொருளை எங்கிருந்து பெற்றார்களென்று?! இன்றைய நவீன கனரக  ஆயுதங்களுக்கு இல்லாத வலிமையும் சக்தியும் உண்பதற்கு போதுமான உணவும் இல்லாது தளர்ந்து போயிருந்த அவர்களது எலும்புகளில் இருந்ததன் இரகசியம் இதுதான்.

இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட நோன்பியல் தத்துவங்களெல்லாம் என் சிந்தையில் தாமாக உதித்தவையல்ல. ''நீங்கள் இறையுணர்வுள்ளவர்களாக மாறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது'' என்ற அல்குர்ஆன் ஆயத்திலிருந்து என்னால் முடியுமானளவு நான் பெற்றுக் கொண்ட ஞானங்களே. அறிஞர்கள் எல்லோரும் அதனைத் தக்வா என்றே விளங்கிக் கொண்டனர், என்னைப் பொறுத்தவரையில் நான் அதனை இத்திகாஃ (தடுப்பு, பாதுகாப்பு) என்று விளங்கிக் கொண்டேன். நோன்பின் மூலமாக, மனிதன் தன் குடலையும் வயிற்றையும் ஆள நினைக்கும் தனது மிருகானிய்யத்துக்கு தடுப்புச் சுவர் எழுப்புகிறான். உலகை வயிற்றின் கண்கொண்டு பார்க்காமல் பாதுகாத்துக் கொள்கிறான். தனது மனிதத்தையும் இயல்பையும் வயிற்றின் வெறியாட்டத்துக்கு ஆளாகி அழிந்து விடாமல் தடுத்துக் கொள்கிறான். அந்தத் தடுப்பினதும் பாதுகாப்பினதும் விளைவாக வெறும் கொஞ்ச ஊட்டத்துக்காக உணர்வுகளையும் உறுதியையும் அடகு வைத்து மனிதர்களோடு மனிதர்களாகவன்றி காட்டுக் கழுதைகளாக நடந்து கொள்ளும் நிலையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான்.

நோன்பின் மூலம் ஒரு மனிதன் தனக்கு முன்னுள்ளதையும் பின்னாலுள்ளதையும் பாதுகாத்துக் கொள்கிறான். அவனுக்கு முன்னாலிருப்பது அவனது நிகழ்காலமும் அதன் நலவு கெடுதிகளுமாகும். அவனுக்குப் பின்னாலிருப்பது அந்த நலவு கெடுதிகளை வாரிசுச் சொத்தாகப் பெற்றுக் கொள்ளும் அவனது பரம்பரையாகும். நோன்பின் பயிற்சியூடே அவன் தனது நிகழ்காலத்தின் நலவுகளை அடைந்துகொள்ள உழைப்பான். நிகழ்காலத்தை முதலிட்டு எதிர்காலத்துக்காக உழைப்பான். அதன் பிரயோசனத்தை அவனது பரம்பரை அடைந்துகொள்ளும்.

நாம் இங்கு தெளிவுபடுத்தியவை யாவும் நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கில் தீமைகளைத் தடுப்பது பற்றியும், சிறந்ததைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மோசமானவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வது பற்றியுமாகும். இந்த விளக்கத்தின் மூலம் அந்தக் குர்ஆன் ஆயத்திலிருந்து நோன்புக்கான உயர்ந்த தத்துவம் பிறக்கின்றது. அந்த ஆயத்தின் சொற் செறிவும் முழுமையான கருத்தும் நாம் விளக்கிய தத்துவத்தை விட மிகவும் கருத்தாழம் மிக்கதும் உயர்வானதுமாகும். அது நோன்பை ஒரு சமூகவியல் மனிதாபிமான சட்டமாக சொல்லித்தருகின்றது. அந்த சட்டங்களினூடாக சமூகம் தனது தீங்குகளை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. நோன்பின் இந்த விதிகளும் சட்டங்களும் உலகை ஆளாத வரையில் உலகம் மாறாது. நாம் அந்த சட்டங்களை எமது வார்த்தைகளில் 'வயிற்றுச் சட்டங்கள்' என்று சொல்கிறோம்.

ரமழானே! நீ எவ்வளவு மகத்துவமிக்க ஒரு மாதம்! உலகம் உன்னை அறிய வேண்டிய வடிவில் அறிந்து கொள்ளுமாக இருந்தால் உனக்கது 'முப்பது நாள் பல்கலைக்கழகம்' என்று பெயர் சூட்டிக் கொண்டாடும்.

Thursday, April 28, 2022

அழைப்பாளர் எப்படி இருக்கவேண்டும்?

ஒரு இஸ்லாமிய அழைப்பாளன் ஆத்திரமூட்டப்படும் போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும

இலங்கை மவ்லானா முர்ஷித் அஹ்மத் ஹஜ்ரத் அவர்களின் அறவுரை
-----------------------------=8-----====-----=--===
ஒரு அழைப்பாளனுக்கு பொறுமையும்,நிதானமும் அவசியம்.
நம்மை ஆத்திரமூட்டி நிதானம் இழக்க வைக்க முயல்பவருக்கு நாம் பலியாகி விடக் கூடாது
மவ்லானா அஷ்ரப்அலி தானவி (ரஹ்)
அவர்கள் ஒரு ஊருக்கு உரையாற்ற சென்றார்கள். அவர்கள் உரை ஆற்ற துவங்குமுன் ஒருவர் எழுந்து என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டுப் பின் பேசுங்கள் என்றார்.என்ன கேள்வி என மவ்லானா கேட்க இந்த காகிதத்தில் எழுதியிரூக்கிறேன் என ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.அதில் முதல் கேள்வி
  நீ ஒரு காபிர் முஸ்லிமான எங்களிடம் பேசக்கூடாது" என இருந்தது.அந்த இடத்தில் நாம் இருந்தால் எப்படி என்னை காபிர் என்கிறாய் என விவாதம் செய்து கொண்டிருப்போம்
  ஆனால் மவ்லானா சொன்னார்கள்; நான் அம்பது ஆண்டுகளாக கலிமா சொல்லி தொழுது முஸ்லிமாக வாழ்கிறேன் இப்பொழுது என்னை காபிர்  என்கிறாய். இப்பொழுது உன் திருப்திக்காக இந்த மக்கள் முன் மீண்டும் கலிமா சொல்கிறேன். அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸூலுஹு
இப்பொழுது நான் முஸ்லிம் பேசலாமல்லவா?  என்றார்கள்.
  இரண்டாம் கேள்வி;
நீ ஒரு தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் உனக்கு பேச தகுதியில்லை.
 ஆத்திரப்படாமல் மவ்லானா சொன்னார்கள்; நல்ல விஷயங்கள் சொல்வதற்கு குலம் தேவையில்லை .இருப்பினும் என் குலம் என்ன என்பதை நீங்கள் அறிய விரும்பினால் என் ஊரான தானபவன் வந்து விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்
 மூன்றாவது கேள்வி;
     எப்போதும் நீங்கள் கருத்து வேற்றுமை உள்ள செய்திகளையே பேசுகிறீர்கள்.
 மவ்லானா சொன்னார்கள்; நான் பேச ஆரம்பிக்கிறேன் எந்த இடத்தில் என் பேச்சு கருத்துவேற்றுமையை தூண்டும் விதமாக இருக்கிறதோ அங்கேயே என் பேச்சை நிற்பாட்டிவிடுங்கள்"
 அதன் பின் மவ்லானா பேச துவங்கினார்கள் பேசிமுடியும் வரை யாரும் எந்த குறுக்கீடும் செய்யவில்லை கூட்ட முடிவில் கேள்வி கேட்டவர் ஓடிவந்து மவ்லானாவின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டார்
    இப்படித்தான் நம் பேச்சின் மூலமும் நம்முடைய பணிவான நன்நடத்தையின் மூலமும் எதிரியையும் நண்பனாக்க வேண்டும்
-------கணியூரார்