Friday, November 27, 2020

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

சிந்தித்துசெயல்படுங்கள்

#இன்று நீங்கள் ஒருவருக்கு அநீதி இழைத்தால் என்றாவது ஒருநாள் நீங்களும்
அநீதீ இழைக்கப்படுவீர்.

#இன்று ஒருவருக்கு எதிராக நீங்கள்
பொய் சொன்னால் என்றாவது ஒருநாள்
உங்களுக்கெதிராக யாராவது ஒருவரால் பொய்யுரைக்கப்படுவீர்.

#இன்று  ஒருவரை ஏமாற்றினால்
நாளை இன்னொருவரால் ஏமாற்றப்படுவீர்.

#இன்று இன்னொருவரின் சொத்தைநீங்கள்
அபகரித்தால் உங்கள சொத்து வேறொருவரால் என்றாவது ஒருநாள் அபகரிக்கப்படும். 
 
 #நாளை  மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வாறே
 #இன்று  நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

 நீங்கள் அல்லாஹ் வின் நேரடி  கண்காணிப்பில் இருப்பதை மறந்து விடாதீர்.
   ----அரபி டுவிட்டரிலிருந்து 
கணியூர் நாஜி(2017)

Thursday, November 26, 2020

இவ்வுலக வாழ்க்கயை நீருக்கு ஒப்பிட்டது ஏன்?

وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ 
 இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; 
(அல்குர்ஆன் : 18:45)

இவ்வுலக வாழ்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருக்கு ஒப்பிட்டான்?

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் தங்களுடைய விரிவுரையில்
 குறிப்பிடுகிறார்கள் : 
உலக வாழ்க்கைக்கும் தண்ணீருக்கும் உண்டான பொருத்தத்தை அறிஞர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்.

1 - தண்ணீர் ஒரே இடத்தில் நிலைத்து நிற்காது. அதே போன்று உலகமும் ஒரே நபரிடம் தங்கிருக்காது.

2 - தண்ணீர் ஒரே நிலையில் இருக்காது. அதனுடைய தன்மை மாறிவிடும்.இவ்வுலகமும் அவ்வாறு தான்.

3 - தண்ணீர் வற்றி காய்ந்துவிடும். அதுபோல, இவ்வுலகமும் ஒருநாள் அழிந்துவிடும்.

4 - தண்ணீரில் மூழ்கியவன் ஈரம்படாமல் வெளி வர முடியாது. அதேபோன்று, இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கியவன் அதனுடைய குழப்பத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியாது.

5 - தண்ணீர் அளவுடன் இருந்தால் பலன் தரும் வளர்ச்சியை கொடுக்கும். அளவு கடந்தால் அழிவை தரும் துன்பத்தை தரும்
. இவ்வுலக  இன்பங்களும்அப்படித்தான் நமக்கு தேவைக்கேற்ப இருந்தால் பலன் தரும்.அளவிற்கு மிஞ்சினால் அழிவு நிச்சயம்.
---------77கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ

முஸ்லிம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்

முஸ்லிமென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்
*********************************************
   இமாம் பகரிப்னு அப்துல்லாஹ்அல்முஜ்னி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:
 உன்னை விட வயதில் மூத்தவர்களை
கண்டால் இவர் என்னைவிட ஈமானிலும் நல்லமல்கள் புரிவதிலும் முந்திக்கொண்டார் எனவே  இவர் என்னை விட சிறந்தவர் எனச் சொல்.

உன்னை விட வயதில் குறைந்தவர்களைக் கண்டால் பாவங்கள் புரிவதிலும், குற்றங்கள் செய்வதிலும் இவரை விட நான் முந்திக்கொண்டேன்.  எனவே இவர் என்னைவிட சிறந்தவர் எனச் சொல்.
   
உன்னுடைய சகோதர்கள் உன்னை கண்ணியப்படுத்தினால்,சிறப்பு செய்தால் அது அவர்களின் பெருந்தன்மை எனச் சொல்
  
உன் விடயத்தில் அவர்களிடம் ஏதேனும் குறைகளைக் கண்டால் இதற்கு நான் செய்த பாவம்தான் காரணம் எனச் சொல்.
*****************************************
  ஒரு முறை ஜும்மா குத்பாவில் ஹஜரத் அமீருல்முஃமினீன் உமர்(ரழி)அவர்கள் சொன்னார்கள்:
முஃமினீன்களே பணிவுடன் இருங்கள் யார் ஒருவர் அல்லாஹ்விற்காக தன்னை இப்படித் தாழ்த்திக்கொள்கிறானோ (அப்பொழுது தனது உள்ளங்கையை தரையின்  பக்கம் திருப்பி கையை கீழே தாழ்த்தினார்கள்) அவரை அல்லாஹ் இப்படி உயர்த்துவான்(அப்பொழுது உள்ளங்கையை வானத்தின் பக்கம் திருப்பி கையை மேலே உயர்த்தினார்கள்.)
   நூல்:அஹ்மது
 ------தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பஈ
--------------------------------

Thursday, November 19, 2020

நம்பிக்கையைத் திருடாத திருடன்

 


திருடன் ஒருவன் பாதையில் மணிபர்ஸ் ஒன்றுகிடப்பதைக் கண்டு எடுத்துப் பார்த்தான்.

அதில் நிறையப் பணமும் அதன் உரிமையாளரின் முகவரியும் இறைவனிடம் பாதுகாப்புவேண்டி ஒரு துஆவும் எழுதப்பட்ட சீட்டுமிருந்தன..

அந்தத் திருடன் உரிமையாளரிடம் அதை ஒப்படைத்தான்.

அவன் ஒரு திருடன் என்பதை அறிந்திருந்த அந்த உரிமையாளர்
'நீதான் திருடனாயிற்றே பணத்தை எடுத்துக் கொள்ளாமல் ஏன்ஒப்படைக்கிறாய்? எனக்கேட்டார்.

இந்தப் பணத்தை 'அல்லாஹ் பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் அதில் துஆவை எழுதிவைத்திருக்கிறீங்க'

இந்த துஆவின் பரக்கத்தால் பணம் காணாமல் போனாலும் திரும்ப கிடைத்துவிடும் என்றநம்பிக்கையில் எழுதிவைத்திருக்கிறீங்க

அந்த நம்பிக்கையை நான் திருட விரும்பவில்லை. ஒரு வேளை இந்தப் பணம் உங்களுக்குக் கிடைக்காமல்
உங்களின் இறைநம்பிக்கையில் சற்று பலவீன மேற்பட்டாலும் உங்களின் இறைநம்பிக்கையை திருடிய குற்றத்திற்கு நான் ஆளாவேன்.

நான் சராசரி திருடன் தான் ஆனால்
பணம் காசு,தங்கம் போன்றவைகளை திருடினால் ஏற்படும் பாவத்தை விட ஒருவனின் இறைநம்பிக்கையைத் திருடுவது பெரும் பாவம் என கருதினேன்'
எனவே இதை உங்களிடம் ஒப்படைத்தேன்' என்றான் திருடன்.

----அல்லாஹ் யாருக்கு எப்பொழுது ஹிதாயத்தைத் தருவான் என்பதை யாராலும் உறுதியுடன் கூறமுடியாது.
-----உருது இணையதளத்திலிருந்து
கணியூர் இஸ்மாயீல் நாஜி.

Saturday, November 14, 2020

ஈத்துவக்கும் இன்பம்

ஈத்துவக்கும் இன்பம்
_____________

    பழ வியாபாரியிடம் வந்த ஒருவர் பழங்கள்என்ன விலை? என்று கேட்டார்.
 வியாபாரி, வாழைப்பழம் கிலோ 20 ரூபாய்
ஆப்பிள் 30ரூபாய் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அங்கே ஒரு பெண்மணி வந்தார் 

அவரும் பழம் என்ன விலை? என்று கேட்க வியாபாரி வாழைப்பழம் கிலோ 5 ரூபாய் ஆப்பிள் கிலோ 10 ரூபாய் என்று சொன்னார்
அதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னார்

 இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் தன்னிடம் விலை அதிகமாக சொல்லிவிட்டாரே என கோபப்பட்டு வியாபாரிடம் பேசத் தொடங்கினார்

 'எதுவும் பேசவேண்டாம்' என கண்களால் வியாபாரி  சைகை செய்தார் 

அந்தப் பெண்மணி தன்னிடமிருந்த தொகையைக் கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டு 

அல்லாஹ்வுக்கே நன்றி என்னுடைய குடும்பத்திற்கு இது  போதுமானதாக இருக்கும் என்று சொல்லிய வண்ணம் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்

 அப்பெண்மணி சென்ற பின்னர்
 வியாபாரி அந்த மனிதனைப் பார்த்து:

 சகோதரரே கோபித்துக் கொள்ளாதீர் உங்களை ஏமாற்ற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல நான் அல்லாஹ்வுடன்  வியாபாரம் செய்கிறேன்

 அந்தப் பெண்மணி   தனக்குக் கிடைக்கும்சொற்ப வருமானத்தை 
வைத்து ஆதரவற்ற நான்கு  குழந்தைகளை பராமரித்து வருகிறார்

   அவர் யாரிடத்திலும் உதவி கேட்க விரும்பவில்லை நானும் பலமுறை அவருக்கு உதவி செய்ய விரும்பினேன் ஆனாலும் அவர் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை

  எனவே நான் யோசனை செய்து அவரின் தன்மானத்திற்கு  ஊறுவிளைவிக்காமல் மறைமுகமாக அவருக்கு உதவ நான்கு மடங்கு  விலையைக் குறைத்து  விற்பனை செய்கிறேன் "என்றவர்,

  #வணக்கத்திற்குறிய அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன் 
இந்த பெண்மணி வாரத்துக்கு ஒருமுறைதான் என்னிடத்தில் வியாபாரம் செய்வார் ஆனால் அவர் என்னிடம்
வியாபாரம் செய்யும் நாட்களில் எனக்கு
 நான்கு மடங்கு லாபம் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும்" என்றார் 

   இதைக் கேட்ட அந்த மனிதரின் கண்களில் இருந்து நீர் தாரைத் தாரையாக வழிந்தது அந்த வியாபாரியின தலையில் முத்தமிட்டார்

  #பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள்  வானத்தில் இருப்பவர்கள் உங்கள்மீது கருணை காட்டுவார்கள் என்பது நபிமொழி.

உண்மையில் பிரதிபலனை எதிர்பாராமல்
அல்லாஹ்விற்காக ஒருவரின் தேவைகளை நிறைவேற்றும் போது உள்ளத்தில் ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது
அனுபவித்தவர்களால்தான் உணர  முடியும்.

 நிகழ்வைப் படிக்கின்ற சகோதர்களே! தேவையுடையவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத வகையில் நீங்கள் உதவி செய்து பாருங்கள் அப்பொழுது அவர்கள் முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி உங்கள் உள்ளத்திலும் ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக நீங்கள் உணர்வீர்கள்.
----அரபியிலிருந்து தமிழில்
கணியூர் இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பஈ

மக்களின் உள்ளங்களை வெல்ல ஞானிகள் வழி

மக்களின் உள்ளங்களை வெல்ல
அறிவாளிகள் அறிவை நம்புவார்கள் 
ஞானிகள் இதயத்தை நம்புவார்கள்.
________________ 
ஹகீமுல் இஸ்லாம் மவ்லானா முஹம்மத் தய்யிப் காசிமி (ரஹ்)
-------------------------
பொதுவாக கல்வி மூலம் அறிவு பெற்றவர்கள் தாங்கள் கற்ற கல்வி ஞானத்தின் மூலமே மக்களை வென்று விடலாம் என்று நினைப்பார்கள்.

ஆனால், அல்லாஹ்  தன்னுடைய  சிறப்பு அடியாளர்களுக்கு அளிக்கின்ற ஹிக்மத் என்னும் அறிவு ஞானத்தை பெற்றவர்கள், வெகு ஜன மக்களின்  இதயத்தை வெல்வதின் மூலமே  வெற்றி பெறுவார்கள்.

#ஞானி ஜுனைதுல் பஃதாதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் காலத்தில் முஃதஜிலாக்கள்
 "இவ்வுலகிலும் மறுஉலகிலும் அல்லாஹ்வை பார்க்க இயலாது" என்று வாதிட்டனர்.

அந்த காலத்தில் இருந்த அறிஞர் பெருமக்கள் அவர்களிடம் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை சொல்லி வாதாடியும் அவர்களை விவாதத்தில் வெல்ல முடியவில்லை.

இறுதியில் ஞானி ஜுனைதுல் பஃதாதி அவர்களிடம் வந்தார்கள். அவர்களை எப்படி விவாதத்தால் வெல்வது என்று கேட்டார்கள்.

பொதுவாக ஞானி அவர்கள் இது போன்ற விவாதத்தில் ஈடுபட விரும்பமாட்டார்கள். ஆனால், பஃதாதி அவர்கள் அவர்களிடம் விவாதம் செய்ய ஒப்புக்கொண்டு அதை பொது மக்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

பஃதாதி ரஹீமஹுல்லாஹ் அவர்கள் விவாதம் செய்கிறார்கள் என்று கேள்விப் பட்ட உடன் பஃதாத் மாநகரத்தில் மக்கள் திரண்டார்கள்.

முஃதஜிலாக்கள் அறிஞர்களும் வருகை புரிந்தார்கள். ஞானி அவர்கள், அவர்களை நோக்கி "நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள"் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் "இம்மையிலோ மறுமையிலோ அல்லாஹ்வை கண்களால் பார்க்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லை" என்றார்கள்.

அதற்கு ஞானி அவர்கள், "நான் கேட்பதற்கு அல்லாஹ்விற்கு பயந்து உண்மையை சொல்லுங்கள்.

அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்று உங்களின் உள்ளம் விரும்புகிறதா? என்று கேட்டார்கள்.

அவர்கள், ஆமாம் எங்கள் உள்ளம் விரும்புகிறது"என்றார்கள்.

"பார்க்க முடியாத ஒன்றை உள்ளம் விரும்புமா?" என்ற ஞானி அவர்கள்
" வாசனையை நுகரத்தான் உள்ளம் விரும்பும்
காற்றை சுவாசிக்க தான் உள்ளம் ஆசைப்படும்
ருசியை சுவைக்கத்தான் உள்ளம் விரும்பும்.
இவற்றை எந்த மனிதனும் பார்க்க வேண்டும் என்று ஆசை பட மாட்டான்.

அவன் இதயத்தில் அந்த ஆசையே எழும்பாது.
ஏனென்றால்  அவற்றை கண்ணால் காண முடியாது 
எதை பார்க்க முடியுமோ அதை பார்க்கத்தான் இதயம் விரும்பும்.

எனவே, அல்லாஹ்வை பார்க்க முடியும் என்று உங்கள் இதயம் நம்புகிறது எனவேதான் அதை விரும்புகிறது என்றவர்கள்,"தொடர்ந்து

நம் இதயம் விரும்புகிற ஒன்றை தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "மறுமையில் பவுர்ணமி இரவில் முழு நிலாவை நீங்கள் பார்ப்பதை போல் அல்லாஹ்வை பார்ப்பீர்கள்" என்று இதயம் நம்புவதை உறுதி படுத்தியிருக்கிறார்கள்."
என்றார்கள்.
டி
இந்த பதிலை கேட்டு திகைத்து போன முஃதஜிலாக்களின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது.

பலர் அந்த இடத்திலேயே தவ்பா செய்தார்கள்.
பல நூறு அறிவியல் ஆதாரங்கள் ஏற்படுத்தாத மனமாற்றத்தை ஒரு ஞானி எதிரியின் இதயத்தை நோக்கி விட்ட அம்பு நிகழ்த்திக் காட்டியது.
-----معجزہ کیا ھے
என்ற நூலிலிருந்து 
தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயீ,தேவ்பந்தி

Tuesday, November 10, 2020

கண்களில் நீரை வரவழைத்த மலரும் நினைவு

கண்களில் நீரை வரவழைத்த மலரும் நினைவு 
***********************
இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபொழுது என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.ஏனென்றால் ஒரு நாள் நானும் இது போன்று ஒரு கடைவாசலில் நின்றேன்.
1967 ம் ஆண்டு லால்பேட்டை மதரசாவிலிருந்து மவ்லவி பாஜில் பட்டயம் பெற்று தேவ்பந்து மதரசாவில் கல்வி கற்க ஆசைப்பட்டேன்.அந்த நேரத்தில் 12 பிள்ளைகளுக்குத் தந்தையான என் தந்தை மிகவும் பொருளாதார சிரமத்தில் இருந்தார்.
என் தாத்தா இஸ்மாயில் ராவுத்தர் துவக்கிய இஸ்லாமிய  அரசு உதவி பெரும் ஆரம்ப பாடசாலையின் தாளாளராக இருந்தவர் அவருக்கான வருமானம் குறைவாக இருந்ததால் நான் ஏதேனும் பணியில் சேர்ந்தால் நல்லது என நினைத்தார்.  அப்பொழுது 
எனது உஸ்தாத் லால்பேட்டை ஷைகுல்வரா அப்துல்ஜமீல் ஹஜரத்(ரஹ்) அவர்களின் ஆலோசனைப்படி இஸ்திகாரா செய்ததில் சென்டரல் ரயில்  நிலையத்திலிருந்து ரயில் ஏறுவது போல் கனவு கண்டேன்..இதனை என் தந்தையிடம் சொன்னபோது என் தந்தை தேவ்பந்த் செல்ல அனுமதித்தார்.
  தேவ்பந்தில் தவ்ரதுல்ஹதீஸில் சேர நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
உருதுவிலும்,அரபியிலும் நடைபெற்ற  வாய்மொழித்தேர்வில் மொழி பிரச்சனையால் தோல்வியடைந்து தவ்ரதுல்ஹதீஸிற்கு முந்திய வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.
மதரஸாவின் விதிமுறைகளின் படி தேர்வில் தோல்வியடைந்தவர் காலாண்டு தேர்வில் 35 விழுக்காடு மதிப்பெண்கள் பெறும் வரை அவர்களுக்கு இலவச உணவு கிடையாது  கட்டணம் செலுத்தினால் தான் உணவு கிடைக்கும்.
என் தந்தை பொருளாதார சிக்கலிலிருக்கும் போது அவரிடம் எப்படி கூடுதல் பணம் அனுப்பச் சொல்வது  என நான் தடுமாறினேன்,
அந்நிலையில் என்னை தேவ்பந்திற்கு அழைத்துச் சென்ற பெரம்பளூர் வடகரை மர்ஹூம் சுல்தான் ஹஜரத் என் அறைத் தோழராக இருந்தவர் "எனக்கு கிடைக்கும் இரண்டு ரொட்டியில் ஒன்றைத் தருகிறேன் வருகிற பணத்தை வைத்து சமாளித்துக்கொள்வோம்"என்றார் பெருந்தன்மையுடன்.
ஏறக்குறைய மூன்று மாதங்கள் மிகவும் சிரமத்துடன் அரைவயிறு நிரம்பிய நிலையிலேயே கழிந்தது.
இந்நிலையில் ஒருநாள் கடுமையான பசி கையில் ஒரு டீ குடிக்கும் அளவுதான் பைசா இருந்தது.
டீ குடிக்க ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கே சூடான #கபாப் தயாரித்துக் கொண்டிருந்தனர். அதை வாங்கி சாப்பிட எனக்கு ஆசையிருந்தாலும் கையில் பைசா இல்லை,அத்துடன் முதலாளியிடம் சென்று கடனாக கொடுங்கள் என்று கேட்கும் அளவு உருது மொழி தெரியாது. எனவே,  அதை பார்த்துக்கொண்டு நின்றேன்.
முதலாளி என்னைப் பார்த்து மவ்லவிசாப் கபாப் ஷாஹியே என்றார்" நான் பைசா நஹி" என்றேன்.
அவர் இரண்டு கபாபை கொடுத்து சாப்பிடுங்கள்,மணியார்டர் வந்த பின் பைசா கொடுங்கள்" என்றார்.
பின்னாளில் 'ஏன் பிச்சைக்காரனைப் போல் அங்கேயே நின்று கபாபை வாங்கி சாப்பிட்டோம்' என வருந்தியதுண்டு.
இறுதிவரை என் தந்தைக்கு இந்த நிகழ்வு தெரியாது. தெரிந்திருந்தால் மன வேதனை அடைந்திருப்பார்.
இன்று யாராவது சிறுவர்கள் டீகடை வாசலில் நின்று பிச்சை கேட்டால் இந்த நிகழ்வு என் நினைவிற்கு வரும்.
    அந்த மூன்று மாதங்களுக்குப் பின் காலாண்டுதேர்வில்65% மதிப்பெண் பெற்று ரஜாயி எனும் போர்வையும்,உதவி தொகையும்  மதரஸாவிலிருந்து கிடைக்கப் பெற்றேன்.
அல்ஹம்துலில்லாஹ் அலா குல்லி ஹால்.
 -----கணியூர் இஸ்மாயீல் நாஜி

Sunday, November 1, 2020

யார் பொறுமையாய்?

#யார்_பொறுமையாளர்?

الَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ
 السَّيِّئَةَ أُولَٰئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ
13:22. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.
13:23   جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ
13:23. நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
13:24   سَلَامٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
13:24. “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)

  #ஸப்ரு செய்யுங்கள்" என்ற வார்த்தை முஸ்லிம் மக்கள் அதிகமாக உபயோகிக்கும் வார்த்தை. 

#ஸப்ரு என்ற வார்த்தை கோபப்படுபவர்களுக்கும் துக்கப்படுபவர்களுக்கும் சொல்லுகின்ற ஆறுதல் வார்த்தையாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் ஸப்ரு என்பது ஆழமான பொருள் கொண்டது.

#ஸப்ரு என்ற அரபி வார்த்தைக்கு கடினம், அடக்குதல் என்று பொருள். 

#ஸபர்து அத்தாபத-நான் வாகனத்தை எந்த வித துணையும் இன்றி அடக்கினேன்” என்று அரபியில் சொல்வார்கள்.

புனிதமிகு குர்ஆனில் 103 இடங்களில் எட்டு வகையான வார்த்தை அமைப்புடன் #ஸப்ரு என்ற வார்த்தை வந்துள்ளது.

இஸ்லாமிய ஷரியத்தில் மனதைக் கட்டுப்படுத்துவதற்குப் பெயர் தான் #ஸப்ரு.
 
நமது சக ஊழியரோ, வியாபாரியோ, நண்பரோ முறை தவறிய வழியில் ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து சொத்துகளாக வாங்கி குவிக்கிறார். நமது மனம் சொல்கிறது நாமும் ஏன் இப்படி செய்ய கூடாது என்று அந்நிலையில் இறைவனுக்கு அஞ்சி போதுமென்ற மனதோடு இருப்பதற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 அழகான இளம் மங்கையுடன் தனிமையில் இருக்க நேரிடுகிறது. அப்பொழுது ஏற்படும் மனக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் கற்பு நெறியின் பெயரும் #ஸப்ரு தான்.

 ஒரு தவறு நடக்கிறது தவறு செய்கின்றவர் மேல் அதிகாரியோ அல்லது நெருக்கமான உறவினராக இருப்பதால் அவருடன் பகையைத் தேடிக் கொள்ள வேண்டாம் என்று மனம் அவர்களைக் கண்டிக்க வேண்டாமென்று தடுக்கிறது.அதனை கட்டுப்படுத்தி கண்டிக்கும் துணிவிற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடக்கும் போர்க்களத்தில் எதிரியின் வலிமையைக் கண்டு, மனம் அஞ்சும் போது அதனை அடக்கி எதிர்க்கின்ற வீரத்திற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 கடும் குளிரில் கதகதப்பான மெத்தையில் மனதிற்கினிய மனைவி அருகே உறங்க பஜ்ரு தொழுகையின் பாங்கு ஒலி கேட்கும்பொழுது விடிந்து சூரியன் உதித்த பின் தொழலாம் என்று மனம் சொல்ல அதனை அடக்கி பள்ளிக்கு விரைந்து செல்லும் தக்வாவின் பெயரும் #ஸப்ரு தான்.

 ஒரு தனி நபரை பற்றியோ அல்லது ஒரு குடும்பத்தை பற்றியோ வெளியில் சொல்ல கூடாத ரகசியம் ஒன்று நமக்கு கிடைக்கிறது,யாரிடமாவது சொல் என்று நமது மனம் துடிக்க அந்த நேரத்தில் அவர்களின் ரகசியத்தை மறைப்பதற்கு பெயரும் #ஸப்ரு தான்.

 கடுமையான துக்கத்தின் போது மனதை அலைபாய வைக்காமல் அந்த சோதனையை ஏற்று கொள்ளும் மனப் பக்குவத்திற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 செல்வம் சேர சேர வீண் ஆடம்பரங்களில் செலவழிக்காமல் தர்மம் செய்யும் ஈகை குணத்திற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 எதிரே உணவிருக்க வயிற்றில் பசி இருக்க அதை உண்ணாமல், குளிர்ந்த நீர் இருக்க  நா வறண்டிருக்க அதனை பருகாமல், புது மனைவி பக்கத்தில் இருக்க மனதில் ஆசை இருக்க அதனை நிறைவேற்றாமல் அல்லாஹ்விற்காக கட்டுபடுத்தும் நோன்பிற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 நமது சகோதரர்களுடன் ஏற்படும் கருத்து வேற்றுமையில் உண்மை என்னவென்று தெரிந்துக் கொண்ட பின்னால் ஈகோவை விட்டு விட்டு  ஹக்கை ஏற்றுக் கொள்வதற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

   நாம் மேற்குறிப்பிட்ட தருணங்கள் எல்லா முஸ்லிம்களுக்கும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏற்படக்கூடியது தான். அந்தந்த நேரங்களில் அல்லாஹ்விற்காக மனதை கட்டுப் படுத்தக் கூடியவர்கள் தான் #பொறுமையாளர்கள். அத்தகைய #பொறுமையாளர்களைத் தான் சொர்க்க வாசலில் வானவர்கள்  வரவேற்பார்கள்.

  இப்பொழுது துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை ஓதிப் பாருங்கள் அந்த வசனங்கள் குறிப்பிடும் பொறுமையாளர்கள் யார் என்று நமக்கு புரியும்.

  எல்லாம் வல்ல அல்லாஹ் வானவர்கள் வரவேற்கும் அத்தகைய பொறுமையாளர்கள் கூட்டத்தில் நம்மை இணைத்து அருள்வானாக.ஆமீன்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயீ,தேவ்பந்தீ( 2018)