Sunday, November 1, 2020

யார் பொறுமையாய்?

#யார்_பொறுமையாளர்?

الَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ
 السَّيِّئَةَ أُولَٰئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ
13:22. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.
13:23   جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ
13:23. நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
13:24   سَلَامٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى الدَّارِ
13:24. “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)

  #ஸப்ரு செய்யுங்கள்" என்ற வார்த்தை முஸ்லிம் மக்கள் அதிகமாக உபயோகிக்கும் வார்த்தை. 

#ஸப்ரு என்ற வார்த்தை கோபப்படுபவர்களுக்கும் துக்கப்படுபவர்களுக்கும் சொல்லுகின்ற ஆறுதல் வார்த்தையாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் ஸப்ரு என்பது ஆழமான பொருள் கொண்டது.

#ஸப்ரு என்ற அரபி வார்த்தைக்கு கடினம், அடக்குதல் என்று பொருள். 

#ஸபர்து அத்தாபத-நான் வாகனத்தை எந்த வித துணையும் இன்றி அடக்கினேன்” என்று அரபியில் சொல்வார்கள்.

புனிதமிகு குர்ஆனில் 103 இடங்களில் எட்டு வகையான வார்த்தை அமைப்புடன் #ஸப்ரு என்ற வார்த்தை வந்துள்ளது.

இஸ்லாமிய ஷரியத்தில் மனதைக் கட்டுப்படுத்துவதற்குப் பெயர் தான் #ஸப்ரு.
 
நமது சக ஊழியரோ, வியாபாரியோ, நண்பரோ முறை தவறிய வழியில் ஈடுபட்டு பணத்தை சம்பாதித்து சொத்துகளாக வாங்கி குவிக்கிறார். நமது மனம் சொல்கிறது நாமும் ஏன் இப்படி செய்ய கூடாது என்று அந்நிலையில் இறைவனுக்கு அஞ்சி போதுமென்ற மனதோடு இருப்பதற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 அழகான இளம் மங்கையுடன் தனிமையில் இருக்க நேரிடுகிறது. அப்பொழுது ஏற்படும் மனக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் கற்பு நெறியின் பெயரும் #ஸப்ரு தான்.

 ஒரு தவறு நடக்கிறது தவறு செய்கின்றவர் மேல் அதிகாரியோ அல்லது நெருக்கமான உறவினராக இருப்பதால் அவருடன் பகையைத் தேடிக் கொள்ள வேண்டாம் என்று மனம் அவர்களைக் கண்டிக்க வேண்டாமென்று தடுக்கிறது.அதனை கட்டுப்படுத்தி கண்டிக்கும் துணிவிற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடக்கும் போர்க்களத்தில் எதிரியின் வலிமையைக் கண்டு, மனம் அஞ்சும் போது அதனை அடக்கி எதிர்க்கின்ற வீரத்திற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 கடும் குளிரில் கதகதப்பான மெத்தையில் மனதிற்கினிய மனைவி அருகே உறங்க பஜ்ரு தொழுகையின் பாங்கு ஒலி கேட்கும்பொழுது விடிந்து சூரியன் உதித்த பின் தொழலாம் என்று மனம் சொல்ல அதனை அடக்கி பள்ளிக்கு விரைந்து செல்லும் தக்வாவின் பெயரும் #ஸப்ரு தான்.

 ஒரு தனி நபரை பற்றியோ அல்லது ஒரு குடும்பத்தை பற்றியோ வெளியில் சொல்ல கூடாத ரகசியம் ஒன்று நமக்கு கிடைக்கிறது,யாரிடமாவது சொல் என்று நமது மனம் துடிக்க அந்த நேரத்தில் அவர்களின் ரகசியத்தை மறைப்பதற்கு பெயரும் #ஸப்ரு தான்.

 கடுமையான துக்கத்தின் போது மனதை அலைபாய வைக்காமல் அந்த சோதனையை ஏற்று கொள்ளும் மனப் பக்குவத்திற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 செல்வம் சேர சேர வீண் ஆடம்பரங்களில் செலவழிக்காமல் தர்மம் செய்யும் ஈகை குணத்திற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 எதிரே உணவிருக்க வயிற்றில் பசி இருக்க அதை உண்ணாமல், குளிர்ந்த நீர் இருக்க  நா வறண்டிருக்க அதனை பருகாமல், புது மனைவி பக்கத்தில் இருக்க மனதில் ஆசை இருக்க அதனை நிறைவேற்றாமல் அல்லாஹ்விற்காக கட்டுபடுத்தும் நோன்பிற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

 நமது சகோதரர்களுடன் ஏற்படும் கருத்து வேற்றுமையில் உண்மை என்னவென்று தெரிந்துக் கொண்ட பின்னால் ஈகோவை விட்டு விட்டு  ஹக்கை ஏற்றுக் கொள்வதற்குப் பெயரும் #ஸப்ரு தான்.

   நாம் மேற்குறிப்பிட்ட தருணங்கள் எல்லா முஸ்லிம்களுக்கும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏற்படக்கூடியது தான். அந்தந்த நேரங்களில் அல்லாஹ்விற்காக மனதை கட்டுப் படுத்தக் கூடியவர்கள் தான் #பொறுமையாளர்கள். அத்தகைய #பொறுமையாளர்களைத் தான் சொர்க்க வாசலில் வானவர்கள்  வரவேற்பார்கள்.

  இப்பொழுது துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை ஓதிப் பாருங்கள் அந்த வசனங்கள் குறிப்பிடும் பொறுமையாளர்கள் யார் என்று நமக்கு புரியும்.

  எல்லாம் வல்ல அல்லாஹ் வானவர்கள் வரவேற்கும் அத்தகைய பொறுமையாளர்கள் கூட்டத்தில் நம்மை இணைத்து அருள்வானாக.ஆமீன்.
-----கணியூர் இஸ்மாயீல் நாஜி பாஜில் மன்பயீ,தேவ்பந்தீ( 2018)

No comments:

Post a Comment