Thursday, August 3, 2017

தொழுக வைக்க ஊதியம் வாங்கலாமா ?

ஆலிம்களே உங்கள் வேலைக்கான கூலியை துன்யாவிலேயே வாங்கி கொண்டீர்கள் எனவே எங்களுக்கு ஆகிறத்திலும் கூலி உண்டு என்று அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி பொய் கூறாதீர்கள் ?என்று சிலரும்
தொழுக வைக்க ஊதியம் வாங்கலாமா என சிலரும் கேட்கிறார்கள்

----- .

***************************************************

மஸ்ஜித்களில் பணியாற்றும் இமாம்களின் பொறுப்பையும் அவர்களின் சிறப்பையும் அறியாததின் விளைவே மேற்கண்ட பதிவு.

கடமையான ஐந்து நேர தொழுகையை இமாம் ஜமாஅத்தாக தொழுவது அவசியம் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

ஒரு மனிதர் தனித்து தொழுவதைவிட ஜமாஅத்தாக தொழுதால் 27 மடங்கு அதிக நன்மை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் மதீனா நகர் சென்றதும் முதல் பணியாக மஸ்ஜிதை உருவாக்கினர்கள்.
அவர்களே இமாமாக தொழவைத்தார்கள்.சுற்று வட்டார கிராமங்களில் மஸ்ஜிதை நிறுவி அங்கே தொழ வைக்க நபிதோழர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

அண்ணல் நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்கு பின் மக்கள் தொகை பெருக பெருக மஸ்ஜித்களும் அதிகரித்தன.
ஒரு மஸ்ஜிதில் வக்து வந்ததும் யாராவது ஒருவர் பாங்கு சொல்லுவார். பாங்கு சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வழமையாக தொழ வருபவர்களில் பெரும்பாலானோர் வந்துவிட்டால் யாராவது ஒருவர் தொழ வைப்பார்.
இமாம் என்று யாரும் நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

நாளடைவில் பாங்கு சொல்லப்பட்ட பின்பு மக்கள் தொழுகைக்காக வந்த பின்னாலும் இமாமத் செய்வதற்கு யாரும் முன் வராத நிலை ஏற்பட்டது. அப்பொழுது ஒரு குறிப்பிட்ட நபரை ஐந்து நேரமும் தொழ வைக்க வர வேண்டும் என்று நியமித்தார்கள்.
அப்பொழுது தான் ஒரு சிக்கல் ஏற்பட்டது.
இமாமத்திற்காக நியமிக்கப்பட்ட நபர் தங்கள் வாழ்வாதாரத்திற்கான தேடுதலில் ஈடுபட்டிருக்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் அவரால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் பணியை விட்டு விட்டு வந்தால் அவருக்கு நஷ்டம் ஏற்படும் நிலைமையும் ஏற்பட்டது.

ஜமாஅத்திற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்தால் தான் தொழுபவர்களில் பெரும்பாலானோர் பரபரப்பான வேலைகளுக்கிடையே ஜமாத்துடன் தொழ ஒரு குறிப்பட்ட நேரத்தை ஒதுக்கி,  வர முடியும்.

எனவே, தொழுபவர்களின் நன்மைக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் வந்து இமாமத் செய்ய ஒரு இமாமை நியமித்தார்கள். அவருடைய வாழ்வாதரங்களுக்காக பைத்துல் மாலிலிருந்து ஊக்க தொகையாக அவருக்கு தேவையான தொகையை நிர்ணயித்தார்கள்.
இந்த நடைமுறை
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது

இதற்கு வரலாற்றில் ஒரு முன்னுதாரணம் இருக்கிறது.

ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலிபா வாக நியமிக்கப்பட்ட மறுநாள் கடைத்தெருவிற்கு செல்வதை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பார்த்தார்கள்.
கலீபா அவர்களே! எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க, 'எனது வாழ்வாதாரத்திற்கான தேடுதலுக்கு செல்கிறேன் என்றார்கள்' அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு.

அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நீங்கள் முஸ்லிம்களின் அமீராக இருக்கின்றீர்கள். உங்களை தேடி எப்பொழுது வேண்டுமானாலும் வெகுஜன மக்கள் வருவார்கள். எனவே, நீங்கள் அவர்களுக்காக காத்திருப்பது அவசியாமாகும்.

உங்கள் குடும்ப செலவிற்காக தேவையான அளவு பைத்துல் மாலிலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள்.
அபூபக்கர் ஸித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொடர்ந்து மற்ற கலிபாக்களும் அவ்வாறே தன குடும்ப செலவிற்காக பைத்துல் மாலில் பெற்று வந்தார்கள்.

இன்று கூட மக்கா ஹரமைனின் தலைமை இமாமாக பணியாற்றும் அஷ்ஷை்க் முனைவர் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுதேசி அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தொகை குறிப்பிடப்படாத ஒரு காசோலை மாதந்தோறும் அவருக்கு வழங்கப்பட்டு அந்த மாதத்திற்கு தேவையான பணத்தை அவர் எடுத்துக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே, இமாமுக்காக கொடுக்கப்படும் தொகை அவர் குறிப்பிட்ட நேரத்தில் மஸ்ஜிதிற்கு வந்து இமாமத் செய்வதற்காகவே தவிர அவர் தொழ வைப்பதற்காக அல்ல.
தொழுகைக்கான கூலியை அல்லாஹ் அல்லாத எவனாலும் கொடுக்க முடியாது.

இமாம் என்பவர் அவர் பின்னால் தொழுகின்றவர்களின் தொழுகைக்கு முழு பொறுப்பாகும்.

அவர் ஏதேனும் தவறு செய்து தொழுகை கூடாமல் போய்விட்டால் அதனால் ஏற்படும் பாவம் அந்த இமாமையே சேரும். அதே நேரம் அந்த தொழுகை சரிவர நிறைவேறி விட்டால் அந்த இமாமின் பின்னால் எவ்வளவு பேர் தொழுதார்களோ அவ்வளவு பேரின் நன்மைகளும் இமாமுக்கு சேரும்.

நிபந்தனை என்னவென்றால் அவருடைய எண்ணம் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும்.

இன்றைய கால சூழ்நிலையில் ஒரு மஹல்லாவின் பல்வேறு கருத்துடையவர்கள், பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்கள், பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், ஒரு மஸ்ஜிதிற்கு வந்து அந்த மஸ்ஜிதின் நிர்வாகம் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஜமாஅத்தாக தொழுவதற்கு அந்த இமாமே காரணமாக இருக்கிறார்.

அந்த இமாம் கடுங்குளிரிலும், கொட்டும் மழையிலும், கடுமையான வெயிலாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் மஸ்ஜிதிற்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இமாமின் சேவையை குறைத்து மதிப்பிட்டு அவர் கூலி வாங்கி கொண்டார் மறுமையில் எப்படி கூலி கிடைக்கும் என்று கேட்பது அறியாமையாகும்.

அதே போன்று, அரபி மதரஸாக்களில் பணியாற்றும் ஆலிம் பெருந்தகைகளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மதரஸாவிற்கு வந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக தரும் ஊக்க தொகையே தவிர அவர்களுக்கு உள்ள கூலியல்ல.

தேவ்பந்த் பல்கலைக்கழகத்தில் தலைமை ஆசிரியராக இருந்த ஹுஸைன் அஹ்மத் மதனி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அரசியலிலும் ஈடுபட்டு இருந்ததால் அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், மாணவர்களுக்கு கற்று தர வேண்டிய பாடங்களை விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களிலும் நடத்துவார்கள். இருப்பினும், அந்த மாதத்திற்கான ஊதியத்தை பெறும் போது விடுமுறை எடுத்த நாட்களுக்குண்டான ஊதியத்தை குறைத்துக் கொள்வார்கள்.

நீங்கள் தான் இந்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தை முடித்து விடுகிறீர்களே! அவ்வாறு இருக்கும் போது ஏன் விடுமுறைக்கான ஊதியத்தை குறைத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்ட போது எனக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறிப்பிட்ட நேரத்தில் வருவதற்காகவே தவிர கற்றுக் கொடுக்கும் கல்விற்காக அல்ல. என்றார்கள்.

எனவே, ஆலிம் பெருமக்கள் வாங்கும் ஊதியமும் இமாம்கள் வாங்கும் ஊதியமும் அவர்கள் ஆற்றும் பணிக்கான ஊதியம் அல்ல.

இன்று சிலர், சரியான ஊதியம் கொடுக்காத நிர்வாகத்தை எதிர்த்து ஏன் ஆலிம்கள் வேலை நிறுத்தம் செய்யக் கூடாது என்று கேட்கும் பொழுது ஆலிம் பெருமக்கள் சொல்லும் பதில் இது தான்.

நாங்கள் தொழ வைப்பது அல்லாஹ்விற்காகவே தவிர ஊதியத்திற்காக அல்ல என்று கூறி அந்த யோசனையை நிராகரிக்கிறார்கள்.

மஸ்ஜிதில் தொழ வைக்க இமாம்கள் இல்லையென்றால் ஒரு மஹல்லா ஜமாஅத் முறையாக இயங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களில் தாயிஇகளாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு
மாத ஊதியமும் வழங்குகிறார்கள் அதனால் அவர்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு அல்லாஹ் விடம் கூலி இல்லையென்று சொல்லமுடியுமா?
--------கணியூர் இஸ்மாயீல் நாஜி
May 1

No comments:

Post a Comment