அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட புத்திர சோகம்
வகுப்புக் கலவரத்திலோ,விபத்திலோ குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கதறலைக் கண்டு நம் மனது எவ்வளவு பதை பதைக்கிறது .அது போன்ற நிலை எந்த குழந்தைக்கும் வரக்கூடாது என துஆ செய்வோம் என ஒரு செய்தியை டிவிட்டரில் படித்துக் கொண்டிருந்த பொழுது தான் நெய்வாசல் அல்நாசர் மறைவு செய்தி வந்தடைந்தது.
குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழப்பது எவ்வளவு வேதனை தருமோ அதே அளவுக்கு வேதனை தரும் செய்தி தான் இளம் வயது செல்வத்தை ஒரு பெற்றோர் இழப்பதும்.
ஒரு இளந் தளிர் துளிர்த்து வளர்ந்து வரும் அழகை ரசித்து இதோ பூக்கப் போகிறது,காயாகி கனி தரும் என்று எண்ணும் வேலையில் அந்த இளம் தளிர் வாடிவிட்டது என்றால் அதை எந்த மனம் தான் தாங்கும்? அந்த வேளையில் பலர் தன் நிலைமறந்து அல்லாஹ்வை சபிக்கிறார்கள் உண்மையில் அவர்கள் நிலையைப் பார்க்கும்பொழுது அவர்களுக்கு நம்மால் ஆறுதல் சொல்லவும் தயக்கமாக இருக்கும்
அனைத்துலகத்திற்கும் அழகிய முன்மாதிரியான அண்ணல் நபியின் வாழ்வில் இதற்கும் ஒரு முன் மாதிரி இல்லாமல் போகுமா? அல்லாஹ் அவர்களுக்கே இந்த சோதனையை கொடுத்தான்
நபி அவர்களுக்கு அன்னை கதிஜா (ரழி) அவர்களின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைக் கொடுத்தான்.
முதல் குழந்தை காசிம் அவர்கள் நபி, பட்டம் பெறுவதற்கு முன்னால் கைக்குழந்தையாக இருக்கும் பொழுது இறந்துவிட்டார்கள்.
இரண்டாவது குழந்தை அப்துல்லாஹ் என்றும் தாகிர் என்றும் தய்யுப் என்றும் அழைக்கப்பட்டவர்.அவரும் கைக்குழந்தையாக இருக்கும்பொழுது இறந்து விட்டார்கள்.அதன் பின் ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு எகிப்து நாட்டு கிருஸ்துவ மன்னன் அன்பளிப்பாக அனுப்பிய அடிமைப் பெண் மாரியா கிப்தியா அவர்கள் மூலம் இப்ராஹீம் என்ற ஆண் குழந்தைப் பிறந்தது.
ஏறக்குறைய அண்ணல் நபியின் அறுபதாவது வயதில் பிறந்த குழந்தையின் மீது நபி அவர்கள் பாசமாக இருந்தார்கள்.அபூசைப் என்பவரின் வீட்டில் அந்த குழந்தை வளர்ந்து வந்தது. அடிக்கடி அங்கே செல்லும் நபி அவர்கள் அந்த குழந்தையை முத்தமிட்டு கொஞ்சுவார்கள்.இந்நிலையில் ஏறக்குறைய பதினெட்டு மாதம் கைக்குழந்தையாக இருந்த இப்ராஹிமிற்கு உடல் நிலை மோசமாக இருந்தது.இச்செய்தி அண்ணலாருக்கு அறிவிக்கப் பட்ட பொழுது அண்ணல் அவர்கள் அதிர்ச்சி அடைந்தது அவர் முகத்தில் தெரிந்ததாக நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள்.அவர்களை கைத் தாங்களாக அப்துர் ரஹ்மான் பின் அவ்ப்(ரலி) அபூசைப் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.உயிர் பிரிந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையை தன் மடியில் வைத்துக் கொண்டிருந்த அண்ணல் நபியின் இரு கண்கள் நீர் சொரிய ஆரம்பித்தன.கல் அடிகளும் சொல் அடிகளும் பட்ட பொழுதெல்லாம் கலங்கி அழுததை பார்க்காத நபி தோழர்களுக்கு பெருமானாரின் அழுகை அதிசயமாக பட்டது.அப்துர் ரஹ்மான் பின் அவ்ப்(ரலி) அதிசயத்துடன் அல்லாஹ்வின் தூதரே தாங்களா (அழுகிறீர்கள்) என கேட்டார்கள்.அதற்கு நபி அவர்கள் அவ்ப் இன் புதல்வரே இது கருணையினால் ஆகும் என்று கூறி விட்டு தொடர்ந்து அழுதார்கள்.குழந்தையின் உயிர் மெல்ல மெல்ல பிரிந்தது.நபி (ஸல்) சொன்னார்கள்:கண்கள் நீரை சொரிகின்றன.உள்ளம் வாடிக் கொண்டிருக்கின்றது.எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம்.இப்ராஹிமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக்கவலை படுகிறோம்” என்றார்கள்.
சகோதரர்களே! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமான நண்பர். அவர்களின் வாழ்வின் இறுதி கட்டத்தில் அல்லாஹ் அவர்களுக்கு ஆண் வாரிசை கொடுத்து ஒன்றரை ஆண்டுகளில் அந்த குழந்தையை இழக்க செய்து அண்ணலாரை சோதித்தான் என்றால் என்ன காரணம்? உண்மையான காரணம் என்னவென்று அல்லாஹ்விற்கே தெரியும். ஆனால் நம்மை பொறுத்த வரைக்கும் இது போன்ற துன்பங்கள் வரும் பொழுது எப்படி எதிர் கொள்வது என்பதை நமக்கு கற்றுக் கொடுப்பதற்காக அல்லாஹ் இந்த சோதனையை அண்ணலாருக்கு கொடுத்திருப்பானோ என்று தோன்றுகிறது. எனவே, நாம் இப்படி துஆ செய்வோம்: “யா அல்லாஹ்! எங்களில் யார் தங்கள் குழந்தை செல்வத்தை இழந்து தவிக்கிறார்களோ அவர்களுக்கு மன அமைதியை தருவாயாக! இழந்ததற்கு பகரமாக நீ விரும்பியவற்றில் சிறப்பான ஒன்றை தருவாயாக! எங்களால் தாங்க முடியாத துன்பங்களை எங்களுக்கு தந்து விடாதே! எங்களை மன்னிப்பாயாக! நாங்களும் எங்கள் குழந்தைகளும் எங்கள் குடும்பத்தாரும் ஸாலிஹான அமலுடன் வாழ அருள் புரிவாயாக! ஆமீன்.
Monday, November 6, 2017
அண்ணலே நபிﷺ அவர்களுக்கேற்பட்ட புத்திரசோகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment