Tuesday, January 18, 2022

கேப்டன் அமீர் அலி என் நினைவுகளில்

கேப்டன். அமீர் அலி என் நினைவுகளில்...
--------
முப்பது ஆண்டுகளுக்கு முன் #வீணாக்கப்படும்_வெள்ளிமேடைகள் என்ற தலைப்பில் கேப்டன் அவர்கள் ஒரு கட்டுரை(சமரசம் இதழில் என நினைக்கிறேன்) எழுதியிருந்தார்.
அவர், வெள்ளிக்கிழமை உரையை ஆலிம் கள் இன்னும் சிறப்பாக பயன்படுத்தலாமே என்ற கருத்தில் சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
அக்கட்டுரைக்கு பலநேர்மறையான, சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன.   
ஆலிம் கள் பலர் கடுமையாக விமர்சித்திருந்தார்கள்

அந்த சூழ்நிலையில் ஒருவரின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பாக கேப்டன் அவர்களைச் சந்திக்கச் சென்றேன்.
உரையாடலின் போது அந்தக் கட்டுரையைப் பாராட்டி அது ஆலிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றேன்.

அதற்கு அவர் "ஆலிம்சா! நான் உலமாக்களின் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கிறேன்.
அவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தலாமே எனும் ஆதங்கத்தினால் அக்கட்டுரையை எழுதினேன்.ஆனால் உலமாக்கள் இந்தளவு 'ரியாக்ட்' செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. உங்களைப் போன்ற சில ஆலிம்கள் தான் என்னைப் பராட்டுகிறார்கள் அது எனக்கு ஆறுதலாக இருக்கிறது" என்றார்.

அதன் பின்னர்
பல ஆண்டுகளுக்குப் பின் நீடூரில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்த அண்ணன் கவிக்கோ, மயிலாடுதுறையில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.
அதுவரை எனக்கு கவிக்கோ வுடன் நேரடி தொடர்பு இல்லை.

நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதாவின் பொதுச் செயலாளர் சாதிக்,
என்னை  அங்கே அழைத்துச் சென்றார்.
அங்கே கேப்டன் அமீர் அலி அவர்களும் இருந்தார்.

 "இவர் எங்கள் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்" என்று என்னை சாதிக் அறிமுகப் படுத்தினார். 

‘வாங்க ஆலிம்ஸா’ என்று கூறியவாறு அண்ணன் கவிக்கோ ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.

"கீழே கார் இருக்கிறது, நான் போன் செய்கிறேன் இவர்களை அழைத்து வாருங்கள்" எனச் சொல்லி  விட்டு சாதிக் போய்விட்டார்.

கவிக்கோ அண்ணனுடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். அவர் எப்போதும் சற்று இறுக்கமாகவே இருப்பார். புதிய நபரிடம் கலகலப்பாக பேச மாட்டார்.

ஆனால், கவிதையைப் பற்றி பேச ஆரம்பித்தால் பேசுவதை நிறுத்த மாட்டார். 

கேப்டன் அவர்களும் புதிய நபர் என்பதினாலோ என்னவோ என்னிடம் எதுவும் பேசாமல் அவரும் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.

நான் கேப்டனை நோக்கி "சார்! என்னை நினைவிருக்கிருக்கிறதா? என்று அந்த நாளை நினைவூட்டினேன்.

ஆமாம்! இப்ப நினைவிற்கு வருகிறது. அந்த நாட்கள் என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நாட்கள்
என்றார்.
கவிக்கோ அண்ணன் இப்பொழுது எங்கள் உரையாடலைக் கவனித்தார்

அவரை நோக்கி  சிறுவயதிலிருந்தே உங்கள் கவிதைகளுக்கு நான் ரசிகன்.
பொங்கல் போன்ற நாட்களில்
 வானொலியில் ஒலிப்பரப்படும் கவியரங்கத்தை என் தந்தை - அவரும்  ஒரு கவிஞர்- தான் விரும்பிக் கேட்பார்
அவர் அருகே நான் அமர்ந்து நானும் கேட்பேன் 
ஒருமுறை 'அதியமானை'ப் பற்றி நீங்கள் வாசித்த கவிதையை வரிக்குவரி சபாஷ் என சொல்லிக் கொண்டிருந்தார் என்றேன்.
ஆமாம் அது கலைஞர் அவர்கள் தலைமையில் நடந்தது
என்றவர்,
   ஆலிம்ஸா விற்கு கவிதையெல்லாம் பிடிக்குமா? என்று கேட்டார். 

ஆம். நிறைய உங்கள் கவிதைகளைப் படித்திருக்கிறேன்.

 காயல்பட்டினத்தில் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.  அதில் கவிஞர் சாரண பாஸ்கரன் கலந்துக் கொண்டார். அதில் மிகவும் பிரசித்தி பெற்ற #”படிக்காத அவரிடம் தான்  பல்கலைக்கழகங்கள் பாடம் படித்தன”. என்ற கவிதையை நீங்கள் சொன்னீர்கள் என்று சொன்னேன்.  
உற்சாகமான கவிக்கோ அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்
 
 தொடர்ந்து மார்க்க கல்வி, உலக கல்வி பற்றிய விவாதம் “MUTUAL FUND” வங்கியில் கல்விக்கடன் பெறுவது  போன்ற விவாதத்திற்குறிய விஷயங்களைப் பற்றி  பேசினோம்.

அப்பொழுது கவிக்கோ அண்ணன்  கேப்டன் அமீர் அலிஅவர்களிடம் நாம் ரெம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்த   ‘ஹைடெக் ஆலிம்ஸா’
இப்பொழுது நமக்குக்  கிடைத்திருக்கிறார்
இவரை பயன்படுத்தி க் கொள்ள வேண்டும்" என்றார்

அதன் பின் சில முறை கவிக்கோ அவர்களைச் சந்திக்கச் செல்லும்போது கேப்டனும் இருப்பார்.
மரபு சார்ந்த மதரஸா பாடத்திட்டத்துடன் இன்றைய நவீன கலைகள் சார்ந்த பாடத்திட்டமும் இணைக்கப்பட்டு இரண்டிலும் திறமை பெற்ற ஆலிம் கள் உருவானால் சமுதாயம் பெரும் பயன் பெறும் என்ற கருத்தையே  இருவரும் வலியுறுத்தி வந்தார்கள்.
கேப்டன் அமீர் அலி அவர்களால் கல்வி, வேலை வாய்ப்பில் பலன் பெற்றோர் பலர் உண்டு 
அவர்கள் கேப்டனின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தனை செய்வார்கள் என நம்புகிறேன்.
நாமும் கேப்டன் அவர்களின் நல்லறங்களை  அல்லாஹ்  ஏற்று அவரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் சேர்க்கப் பிரார்த்திப்போம்.
-----கணியூர் முஹம்மது இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி

.

No comments:

Post a Comment