Monday, January 17, 2022

கவிக்கோ

மறக்கவியலா பண்பாளர்
கவிக்கோஅப்துர்ரஹ்மான் 
******************************
இன்று ஈது பெருநாள். மறைந்த கவிக்கோ அண்ணனின் நினைவு அதிகமாக வந்து சென்றது. ஒவ்வொரு ஈது பெருநாள் அன்றும் சன் தொலைக்காட்சியில்  பெருநாள் தொடர்பான நிகழ்ச்சியில் அண்ணன் கலந்துக் கொள்வார். 
நிகழ்ச்சி முடிந்தவுடன் அண்ணனிடம் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு அவர்களின் உரையிலிருந்து நான் ரசித்த சில வரிகளை சுட்டிக் காட்டுவேன்.
அதை கேட்டு அவர் மகிழ்ச்சியடைவது அவர் குரலிலேயே தென்படும்.
1960களில் வானொலியில் பொங்கல் அன்று சிறப்பு கவியரங்கம் ஒலி பரப்பாக்கும்.
அதை என் தந்தை அவரும் ஒரு கவிஞர் என்பதால் ஆர்வமுடன் கேட்பார். நான் அவர் அருகில் இருந்து அதை கேட்பேன்.
அப்போது கவியரங்கின் தலைவர் அடுத்து அதியமானை பற்றி அப்துர் ரஹ்மான் என்று அறிவித்தார். அவர் கவிதை வாசிக்க வாசிக்க என் தந்தை சபாஷ் சபாஷ் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது என் மனதில் அப்துர் ரஹ்மான் என்ற பெயர் பதிந்து விட்டது.
அதற்குபின் பல கவியரங்க மேடைகளில் அண்ணன் கவிக்கோ அவர்களை தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். ஏறக்குறைய 48ஆண்டுகளுக்குப் பின் நீடூரில் ஒரு விழாவிற்கு கலந்துக் கொள்ள வந்த அண்ணன் கவிக்கோவிடம் நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதாவின் பொதுச் செயலாளர் சாதிக், இவர் எங்கள் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். 
‘வாங்க ஆலிம்ஸா’ என்று கூறிய அண்ணன் கவிஞர் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.
கவிக்கோ அண்ணனுடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். அவர் எப்போதும் சற்று இறுக்கமாகவே இருப்பார். புதிய நபரிடம் கலகலப்பாக பேச மாட்டார்.

ஆனால், கவிதையை பற்றி பேச ஆரம்பித்தால் பேசுவதை நிறுத்த மாட்டார். அவரிடம் நானாகவே சிறுவயதில் வானொலியில் உங்களின் கவிதைகளை கேட்டிருக்கிறேன் என்று ஆரம்பித்தேன். அப்படியா ஆலிம்ஸா விற்கு கவிதையெல்லாம் பிடிக்குமா என்று கேட்டார். 

ஆம். நிறைய உங்கள் கவிதைகளை படித்திருக்கிறேன். காயல்பட்டினத்தில் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர் சாரண பாஸ்கரன் கலந்துக் கொண்டார். அதில் மிகவும் பிரசித்தி பெற்ற #”படிக்காத அவரிடம் தான்  பல்கலைக்கழகங்கள் பாடம் படித்தன”. என்ற கவிதையை நீங்கள் சொன்னீர்கள் என்று சொன்னேன். ஆலிம்ஸா விற்கு கவிதை மேல் ரொம்ப நாட்டம் போல் தெரிகிறதே என்று சொன்னார்.
மிகவும் உற்சாகம் அடைந்த அண்ணன் தொடர்ந்து மார்க்க கல்வி, உலக கல்வி பற்றிய விவாதம் “MUTUAL FUND” போன்ற விஷயங்களை பற்றி பேசினோம்.
அப்பொழுது கவிக்கோ அண்ணன் அங்கே இருந்த கேப்டன் அமீர் அலியிடம் நமக்கு ஒரு ‘ஹைடெக் ஆலிம்ஸா’ கிடைத்திருக்கிறார் என்றார்.

அதன்பின் நண்பர் சாதிக்குடன் சென்னை செல்லும் போதெல்லாம் கவிக்கோ அண்ணனை சந்திக்காமல் வந்ததில்லை.
வக்ஃப் வாரிய தலைவராக போகிறார் என்று செய்தி வந்தவுடன் அலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன்.
‘என்ன அண்ணே! பெரிய பொறுப்பு ஏற்க போகிறீர்களாமே, அதற்கெல்லாம் நீங்கள் ஆசை பட மாட்டீர்களே எப்படி சம்மதித்தீர்கள்’ என்று கேட்டேன்.

‘ஓ! சிதம்பர ஆலிம்சாவுக்கும் தகவல் வந்துவிட்டதா? என்றவர் இதே கேள்வியை தான் தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார். தலைவரிடம் வக்ஃப் வாரிய தலைவராக என் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போது , ‘அவனை கேட்டிங்களா? அவன் பொறுப்பெல்லாம் ஒத்துக்க மாட்டானே. எத்தனையோ முறை அவனிடம் பல பொறுப்புகள் கொடுக்க முயன்றேன். அவன் மறுத்து விட்டான் இதை ஏற்றுக் கொள்வானா? என்று கேட்டிருக்கிறார்.
நான் தலைவரை நேரில் சந்தித்தேன். சமுதாயத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள் எமது சமுதாயத்திற்கு பலனில்லாமல் அநியாயக்காரர்கள் கைகளில் இருக்கிறது. உங்கள் ஆட்சி காலத்தில் அவைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். அரசியல் குறுக்கீடு இல்லையென்றால் நிச்சயமாக நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று சொன்னாதாக அண்ணன் சொன்னார்.

அவர் சொன்னதை போன்றே அவர் பொறுப்பில் பல கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டன. பொது மேடைகளில் வக்ஃப் வாரியத்தின் ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.  

ஒரு கூட்டத்தில், “ஹிந்துக்கள் சிவன் சொத்து குல நாசம் என்று கூறி சிவன் சொத்தை சாப்பிடுவதற்கு பயப்படுவார்கள். ஆனால், நம்மாட்களோ அல்லா சொத்தை அல்வா சாப்பிடுவது போன்று சாப்பிடுகிறார்கள். எப்படி பொய் கணக்கு எழுத வேண்டும் என்பதை எங்கள் ஆட்களே சொல்லிக் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார்.
ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃப் இடங்களை மீட்டு அங்கே கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் போன்றவைகளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அண்ணனின் துணைவியார் மறைவு அவரை பெரிது அளவு பாதித்தது. உரத்த குரலில் பேசி அறியாத தன் துணைவியுடன் பணிச்சுமையின் காரணமாக அதிக அளவு அவருடன் இருக்க முடியவில்லை என்ற மனக் குறை  அண்ணனிடம் இருந்தது. அண்ணியாரின் மறைவதற்கு முதல் நாள் கூட வக்ஃப் வாரிய பணிக்காக கேரளா சென்றிருந்தார். தன் துணைவியாரை பற்றி ஆனந்த விகடனில் உருக்கமான கட்டுரை எழுதியிருந்தார்.
பாலைவனத்திற்காகவே படைக்கப்பட்ட ஒட்டகம் போல் எனக்காகவே அவள் படைக்கப்பட்டாள்.

இளமையில் பாலாய் இருந்தாள்.
நடுமையில் மதுவாய் இருந்தாள்.
முதுமையில் மருந்தாய் இருந்தாள்.

என்ற வரிகள் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது.
படித்தவுடன் அண்ணனுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டேன். மனைவியை  ஒரு புதிய கோணத்தில் அறியப்படுத்திருக்கிறீங்க

நடுமையில் மதுவாய் இருந்தாள் என்ற வார்த்தை பல அர்த்தங்களை சொல்கிறதுஎன்றேன். அவர் சிரித்துக் கொண்டே மனைவியை மதுவுடன் ஒப்பிட்டிருக்கிறாரே என்று ஆலிம்சாக்கள் எனக்கு காஃபிர் பட்டம் கொடுத்து விட மாட்டிர்களே என்று வழக்கம் போல் ஆலிம்களை கலாய்த்தார்.

அவர் மறைவதற்கு இரு வாரங்களுக்கு முன் ஒரு உருது கவிதை தொடர்பாகவிளக்கம் கேட்பதற்காக அவரை அழைத்தேன். அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.  பின் மறுபடியும் அவரே என்னை தொடர்பு
 கொண்டார்.
உடல்நிலை பற்றி விசாரித்தேன். சிறுநீரக பிரச்சனைத்தான் கொஞ்சம் தொல்லை கொடுக்கறது. துஆ செய்யுங்கள் ஆலிம்சா என்றார். உருது கவிதையில் ஒரு சந்தேகம் என்றேன். ஆலிம்சாவிற்கு உருது கவிதையெல்லாம் பிடிக்குமா என்றார். ‘பல்’ என்ற உருது வார்த்தைக்கு தமிழில் என்ன வார்த்தை போடலாம் என்றேன். அடுத்த கணம் என்றார்.

அவரிடம் நான் கேட்ட கவிதை இது தான்.
தன்னுடைய மரணத்தை பற்றி எந்த மனிதனுக்கும் அறிவு இல்லை.
பொருட்களோ நூறாண்டிற்க்கு இருக்கின்றன.
அடுத்த கணம் என்ன நடக்கும் என்று தெரியாது.
அல்லாஹ் அண்ணன் கவிக்கோவின் பாவங்களை மன்னித்து அவருடைய கப்ரை விசாலமாக்குவானாக.

No comments:

Post a Comment