Tuesday, May 29, 2018

அல்குர்ஆன் ஓத,சிந்திக்க,செயல்பட(1)

#அல்குர்ஆன்_ஓத_சிந்திக்க_செயல்பட

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏ 
நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?
(அல்குர்ஆன் : 54:17)

#உங்களுக்குள் #இதயத்தை #தேடுங்கள்.
#இல்லாவிட்டால் #இறைவனிடம் #கேளுங்கள்.
---------நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
===================================================================
இதயம் என்ற பெயர்ச்சொல் குர்ஆனில் 132 இடங்களில் வருகிறது. அதில் மூன்று வசனங்களை நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். 

اِنَّ فِىْ ذٰلِكَ لَذِكْرٰى لِمَنْ كَانَ لَهٗ قَلْبٌ اَوْ اَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيْدٌ
50:37. எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
26:88   يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ
26:88. “அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
26:89   اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ
26:89. “எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”

இதில் முதல் வசனத்தில் யாருக்கு இதயம் இருக்கிறதோ அவருக்கு தான் நேர்வழி கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
மற்றொரு வசனத்தில், மறுமை நாளில் பரிசுத்த இதயத்தை கொண்டு வருவோருக்கு தான் பலன் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இன்னொரு இடத்தில், நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், அவர் தன் ரப்பு இடத்தில் பரிசுத்த இதயத்துடன் வந்தார் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இந்த உலகத்தில் இதயமில்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது.
எவரிடம் இதயம் இருக்கிறதோ என அல்லாஹ் சொல்லும் இதயம், நம்மிடம் இருக்கிறதா??
திருக்குர்ஆன் விரிவுரையாளரும் நபித்தோழருமான அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு சொல்வதாக அறிஞர் இப்னு கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்,
اطلب قلبك في ثلاثة مواطن، عند سماع القرآن، وفي مجالس الذكر، وفي أوقات الخلوة، فإن لم تجده في هذه المواطن فسأل الله أن يمن عليك بقلب، لأنه لا قلب لك ".

“ மூன்று இடங்களில் உங்கள் இதயத்தை தேடுங்கள்.
1- குர்ஆன் ஓதுவதை கேட்கின்ற பொழுது,
2- அல்லாஹ்வை நினைவூட்டும் கூட்டங்களில்,
3- நீங்கள் தனியாக  இருக்கும் இடங்களில்
இந்த மூன்று இடங்களில் உங்கள் இதயம் உங்களுக்கு தெரியாவிட்டால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு இதயத்தை அருளும்படி கேளுங்கள். ஏனென்றால் உங்களிடம் இதயமே இல்லை.”
நபித்தோழர் சொல்வதின் கருத்து என்னவென்றால், யாரிடம் அல்லாஹ் சொல்லும் பரிசுத்தமான இதயம் இருக்கின்றதோ மேற்குறிப்பிட்ட இடங்களில் அது வெளிப்படும்.
ஒருவர் குர்ஆன் ஓதுவதை கேட்கின்றார், அதன்பின்  அவர் உள்ளத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
ஒருவர் இறைவனை நினைவூட்டும் கூட்டங்களில் கலந்துக் கொள்கிறார். அதன்பின், அவர் உள்ளத்தில் எந்த சலனமும் இல்லை.
ஒருவர் தனிமையில் இருக்கிறார். அந்நேரத்தில் அவருக்கு அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என்ற அச்சமோ மறுமையை பற்றி பயமோ, மரணத்தை பற்றி கலக்கமோ ஏற்படவில்லை என்றால் அவர் இதயம் இல்லாதவர் என்றே உணர வேண்டும்.

அல்லாஹ் நம்மனைவருக்கும் இறைவனுக்கு் அஞ்சும் இதயத்தை அருள் புரிவானாக
-------தமிழில் கணியூர் இஸ்மாயீல் நாஜி
------மறுபதிப்பு

No comments:

Post a Comment