Monday, May 1, 2017

மனைவிக்கான உரிமைகள்

மனைவிக்கான உரிமைகள்.
******************************
இஸ்லாத்தின் பார்வையில் உரிமைகளை பொறுத்த வரை ஆணும் பெண்ணும் சமமே.
குடும்ப நிர்வாகி என்ற முறையில் ஆண் ஓர்படி உயர்ந்து நிற்கின்றான் என்று குர்ஆன் சொல்கிறது.
ஒரு கணவன், தன்னிடம் மனைவி எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றானோ அதே போன்று மனைவியும் தன் கணவன் தன்னை மகிழ்விக்கும் வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனைவிக்குள்ள உரிமையாகும்.
அண்மையில், சவூதிநாட்டின்  பிரபல்யமான ஒரு மார்க்க அறிஞரிடம், “என் மனைவி கை நிறைய சம்பாதிக்கிறாள் அவளுக்குண்டான வாழ்வாதாரங்களை (இருக்க இடம், உன்ன உணவு, உடுத்த உடை) அளிப்பது என் மீது கடமையா என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு மார்க்க அறிஞர் மனைவி சம்பாதிப்பது அவளுக்கே உரித்தானது. அதை அவள் தன் விருப்பம் போல் செலவு செய்யலாம். மனைவி கோடீஸ்வரியாக இருந்தாலும் அவளுக்குண்டான வாழ்வாதாரங்கள் கணவனையே சார்ந்ததாகும் என்றார்.

தற்காலத்தில், வேலைக்கு செல்லும் பெண்ணின் ஊதியத்தை கணவன் வீட்டார் பெற்றுக் கொள்கிறார்கள். அப்பெண், தன் பெற்றோருக்கு அனுப்ப அனுமதியளிப்பதில்லை. இது இஸ்லாமிய ஷரியத் படி தவறாகும்.
பெற்றோர்களை பேணுங்கள் என்று குர்ஆனும் ஹதீஸும் ஆணையிட்டிருப்பது ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் சேர்த்து தான். ஒரு ஆண் எப்படி தன் பெற்றோரை பேண வேண்டுமோ அவ்வாறே ஒரு பெண்ணும் தன் பெற்றோரை பேண வேண்டும்.

பொருளாதார வசதியுள்ள பெண தன் பெற்றோர்களுக்கு உதவி செய்வதை கணவன் தடுப்பதற்கு அதிகாரமில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்பதியர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக திகழ்ந்தார்கள்.. இன்று பலர், வயது அதிகரிக்க, அதிகரிக்க, தனது மனைவியிடத்தில் பேசுவதை குறைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெரிய சமுதாயத்தின் தலைவராக இருந்த போதிலும் வீட்டில் கணவராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

இரவில் உறங்க செல்லும் முன் மனைவியிடம் கதைகள் பேசியதையும் தன்னுடைய மனைவியுடன் ஓட்டப்பந்தயம் போன்ற மனதில் அன்பை ஏற்படுத்தும் விளையாட்டுக்களை விளையாடியதாகவும் பல ஹதீஸ்களிலே காண முடிகிறது.
இரவு முழுதும் வணக்க வழிப்பாட்டில் ஈடுப்பட்டதன் கணவன் தன்னை கவனிப்ப தில்லை என்ற ஒருசஹாபி பெண்ணின் கணவரை அழைத்து உன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. அதை நிறைவேற்று என்று கண்டித்ததை பார்க்கிறோம்.

அன்னை ஆயிஷா ரலி’யல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள். நானும் நபியவர்களும் ஒரே தலையணையில் படுத்திருப்போம  என் பக்கம் திரும்பி என்னிடம் அன்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். மறுபக்கம் திரும்பி  அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவார்கள் என்று சொல்கிறார்கள்.

உண்மையான முஸ்லிம் யாரென்றால் தன் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் ஒரு சேர நிறைவேற்றுபவன் தான்.

ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் உன்னை நான் நேசிக்கிறேன் என்று மனைவியிடத்தில் சொல்லுங்கள்.

ஒருவர் பொறை இருவர் நட்பு என்று சொல்லுவார்கள்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது தான் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

சிறந்த மணவாழ்க்கைக்கு ஒருவர் மற்றவரிடம் தோல்வியடைய கற்றுக் கொள்ளுங்கள். விவாதத்தில் காதலியிடம் தோற்பவன் தான் வெற்றியடைகிறான் என்று ஒரு அறிஞர் சொன்னார்.

மயிலாடுதுறையில் இன்று (30/04/2017) நடைபெற்ற திருமண விழாவில் கணியூர் நாஜியின் வாழ்த்துரையில் ஒரு பகுதி.

No comments:

Post a Comment